தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான்: பழ.நெடுமாறன் காட்டம்

தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான் என்றும், இதனால்தான் மத்திய அரசு தமிழர்களை மதிப்பதில்லை என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.tamils not indians

திருச்சியில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாலை, புத்தூர் நால்ரோடு அருகே உள்ள வெட்காளியம்மன் திருமண மண்டபத்தில் இந்திய இராணுவம் இலங்கையில் செய்த அட்டூழியங்களை கண்டித்து சென்னை கிண்டி கத்திப்பாரா வளைவில் நேரு சிலை மீதும், கொடைக்கானல் அரசு வானொலி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசி 8 வருடங்கள் சிறைச்சென்று திரும்பியுள்ள பொழிலனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வழக்கறிஞர் பானுமதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொழிலனை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய நெடுமாறன்,

விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை மீது 1987-90ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தி, 42 பேர் உயிரிழக்க காரணமாக இருந்தது இந்திய அமைதிப்படை. அப்போது இதை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகளும், ஆட்சியில் இருந்தவர்களும் ஆக்கப்பூர்வமான போராட்டத்தை நடத்தவில்லை.

அப்போது நடந்த தவறை சுட்டிக்காட்டிய பொழிலனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனால், மதுரையில் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இந்த முரண்பாடு எதற்காக..?

தேசிய இனத்துக்காக போராடுபவர்களை ஒடுக்கவும் முடக்கவும்தான் தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையைப் போக்க இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற வேண்டும். போராட முன்வர வேண்டும்.

ஏனெனில் மேடையில் வீரமாக பேசினால் நமக்கு எதுவும் கிடைக்காது. நமக்குத் தேவை அர்ப்பணிப்பு உணர்வுதான். தமிழர்கள் பேச்சு வெறும் வாய்ஜாலங்கள்தான். இதனால்தான் மத்திய அரசு தமிழர்களை மதிப்பதில்லை.

இலங்கையைத் தொடர்ந்து மலேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்களைக் காக்க தமிழர்களை ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய அனைத்து கட்சி தலைவர்களும், “வேறுபாடுகளை கலைந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால்தான் தமிழர் நலனையும், தமிழ் ஈழத்தையும் வென்றெடுக்க முடியும். இனி தனி நபர்களாய் சிறைச் செல்வதைவிட ஆயிரக்கணக்கான நபர்களை போராட்டக் களத்தில் இறக்கி கும்பலாக செல்லவேண்டும் என முழங்கினர்.

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை ஊராட்சி தலைவர் ஆய்வு செய்யலாம்: பழ.நெடுமாறன்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம்.

தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நீரின்றி அமையாது நில வளம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தொடர்பாக விளார் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த நோட்டீசை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன் அறிப்பு இன்றி நோட்டீஸ் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது என உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சட்டத்தை மீறி கட்டிடம் கட்டப்படவில்லை. சட்டப்படிதான் கட்டி உள்ளோம். எங்களது சொந்த இடத்தில் தான் கட்டி உள்ளோம். இது தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமான அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

முள்ளிவாய்க்கால் எதிரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதி பெற்று தான் பூங்கா அமைத்து உள்ளோம். அதனை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று அரசு கூறி வருகிறது.

இது தொடர்பான வழக்கு வருகிற 2ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம்.

முற்றம் காப்போம் ரெயில் பயண நிகழ்ச்சி ஜனவரி 4, 5 ந் தேதிகளில் நடக்கிறது. 4ந் தேதி சென்னையில் இருந்து சேலம் வரையிலும், 5ந் தேதி ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை வழியாக சென்னைக்கும் ரெயில் பயணம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements