புலிகள் போன்றதொரு ஆயுதக்குழு உருவாக்கப்படுமா?

மற்றுமொரு ஆயுதப் போர் ஆரம்பமா?

விடுதலைப் புலிகள் போன்றதொரு ஆயுதக்குழு உருவாக்கப்படுமா?

அதற்கு பதுமன் தலைமை தாங்குவாரா?

அப்படியான ஆயுதக்குழுக்கள் தமிழ் அரசியல் தலைவர்களைக் கொல்லும் முயற்சியில் இறங்குமா?

என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.ltte salute

2009 மே 19ம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர் அதனுடன் தொடர்புடைய எந்தவொரு சிறிய ஆயுத மோதல் சம்பவமும் இலங்கையில் நிகழவில்லை. கிட்டத்தட்ட புலிகளின் தலைமையை அழித்ததன் மூலம் அரசாங்கம் அந்த இயக்கத்தின் கீழ்நிலை கட்டமைப்புகள் அனைத்தையுமே செயலற்றதாக்கிவிட்டது. இதனால் கீழ் நிலையிலிருந்த கட்டமைப்புக்களுக்கும் இரகசிய அமைப்புகளுக்கும் கட்டளையிட எவரும் இல்லாமல் போனதால் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அடியோடு ஒதுக்கப்பட்டு விட்டன. திடீரென ஒரு ஆயுதக்குழு தோற்றம் பெற்று தமிழ் அரசியல் தலைவர்களை குறிவைக்கத் தொடங்கினால் அது அரசாங்கத்தை நோக்கியே கேள்விகளையே எழுப்ப வைக்கும். .

“மற்றுமொரு ஆயுதப் போர் ஆரம்பமா? ” என்ற,

தனது விரிவான ஆய்வில்,

விடுதலைப் புலிகள் போன்றதொரு இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒருதரப்பு இறங்கியுள்ளதாக அண்மைக்காலமாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேர்ணல் பதுமன் தலைமையில் இந்தப் புதிய ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த கேர்ணல் பதுமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை அரசதரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால் திருகோணமலை மேல்நீதிமன்றத்தினால் அவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். புலிகளின் மூத்த தளபதிகளில் பலர் சரணடைந்த பின்னர் காணாமல் போன போதிலும் கேர்ணல் பதுமனுக்கு அத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா ஏற்படுத்திய பிளவை அடுத்து கேர்ணல் பதுமன் திருகோணமலையில் இருந்து வன்னிக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்த பொறுப்புக்கள் பறிக்கப்பட்ட நிலையில் தான் இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைமையால் தண்டிக்கப்பட்ட ஒருவராக இருந்ததால் தான் கேர்ணல் பதுமன் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் இலகுவாக வெளிவர முடிந்துள்ளது. இவர் வெளியே விடப்பட்டதன் பின்னணி குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய போதிலும் அவையெல்லாம் உண்மை என்பதற்கு உத்தரவாதம் இல்லை. கேர்ணல் பதுமன் போன்றதொரு புலிகளின் முக்கிய தளபதியை சட்டரீதியாக தண்டிக்க விரும்பியிருந்தால் அது அரசாங்கத்திற்கு பெரிய காரியமாக இருந்திருக்காது. ஆனால் அவ்வாறு அரசாங்கம் செய்யவில்லை. இது தான் பல்வேறு ஊடகங்களிலும் கேர்ணல் பதுமனின் விடுதலை குறித்த சந்தேகங்களும், ஊகங்களும் எழுந்ததற்கு காரணம் இந்தநிலையில்தான். அண்மையில் பதுமன் தலைமையில் புலிகளை உருவாக்க இரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாகவும் இந்த ஆயுதக்குழுவைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைக் கொலை செய்ய சூழ்ச்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் பரவின. இத்தகைய தகவல்கள் எதுவும் எந்தளவுக்கு உண்மையானவை என்று உறுதிப்படுத்தத் தக்கவையல்ல. ஆனால் அரசியல் மட்டத்தில் இது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதுகுறித்து சில அரசியல் மேடைகளிலும் பொது மேடைகளிலும் சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது,

வடக்கில் இருந்து படையினர் வெளியே வேண்டும் என்று கூறுவதால் தன்னையும் சம்பந்தன் போன்றோரையும் கொல்ல வேண்டும் என்று படையினர் நினைக்கக்கூடும் என்றும் அவ்வாறு செய்தால் அந்த உண்மைகள் ஜெனிவாவில் நர்த்தனம் ஆடும் என்றும் அவர் எச்சரித்துமிருந்தார்.

விடுதலைப் புலிகள் போன்றதொரு ஆயுதக்குழு உருவாக்கப்படுமா?

அதற்கு பதுமன் தலைமை தாங்குவாரா?

அப்படியான ஆயுதக்குழுக்கள் தமிழ் அரசியல் தலைவர்களைக் கொல்லும் முயற்சியில் இறங்குமா?

என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.

பொதுவாகவே அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத தலைவர்களை மர்மமான முறையில் போட்டுத் தள்ளும் தந்திரோபாயம் வளர்முக நாடுகளில் நெடுங்காலமாக இருக்கின்ற வழக்கமே. அதுவும் இராணுவ மேலாதிக்கம் நிறைந்த நாடுகளில் இத்தகைய அரசியல் படுகொலைகள் சர்வசாதாரணம். பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகள் இத்தகைய அரசியல் படுகொலைகளைச் சந்தித்துள்ளன.

இந்த உத்தி தற்போது இலங்கைக்கு ஒத்துவருமா? என்பதுதான் முக்கியமான வினா.

ஏனென்றால் விடுதலைப் புலிகள் என்ற பலம் வாய்ந்த இயக்கத்தையே வேருடன் அழித்த நாடு இலங்கை.

2009 மே 19ம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர் அதனுடன் தொடர்புடைய எந்தவொரு சிறிய ஆயுத மோதல் சம்பவமும் இலங்கையில் நிகழவில்லை. கிட்டத்தட்ட புலிகளின் தலைமையை அழித்ததன் மூலம் அரசாங்கம் அந்த இயக்கத்தின் கீழ்நிலை கட்டமைப்புகள் அனைத்தையுமே செயலற்றதாக்கிவிட்டது. இதனால் கீழ் நிலையிலிருந்த கட்டமைப்புக்களுக்கும் இரகசிய அமைப்புகளுக்கும் கட்டளையிட எவரும் இல்லாமல் போனதால் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அடியோடு ஒதுக்கப்பட்டு விட்டன. திடீரென ஒரு ஆயுதக்குழு தோற்றம் பெற்று தமிழ் அரசியல் தலைவர்களை குறிவைக்கத் தொடங்கினால் அது அரசாங்கத்தை நோக்கியே கேள்விகளையே எழுப்ப வைக்கும்.

ஏனென்றால்,

புலிகளை முற்றாக அழித்து விட்டதாக கூறிவிட்டு எப்படி திடீரென அவர்கள் முளைத்தனர் என்று உலகநாடுகள் கேள்வியெழுப்பும்.

தீவிரவாதத்தை முற்றாக அழித்த உலகின் முதல் நாடு என்ற பெயரை பெற்று விடுவதற்காக முயற்சிக்கு அரசாங்கம், இத்தகையதொரு ஆயுதக்குழு மீளத் தோற்றம் பெற்றால் அத்தகைய பெயர் தமக்கு கிடைக்காது என்பதையும்ட மறந்துவிடாது.

ஓர் ஆயுதக்குழுவை அநாமதேயமாக தோற்றுவித்து தமிழ் அரசியல் தலைமைகளைத் தீர்த்துக் கட்டுவது என்பது எவராலும் இயலாத காரியமாக இருக்காது.

ஆனால்,

அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்காமல் அத்தகைய முடிவை எந்தவொரு தரப்பும் எடுக்காது.

ஏற்கனவே,

அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. பொறுப்புக்கூறல் என்பது அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்க முடியாத விவகாரமாக மாறிவிட்டது.
இத்தகைய நிலையில் இன்னும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள அரசாங்கம் விரும்பாது.

ஏனெனில்,

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எத்தகைய ஆயுத வன்முறைகள் இடம்பெற்றாலும் அதனை சர்வதேச சமூகம் இலகுவாக எடுத்துக் கொள்ளாது. அதனை அரசாங்கத்தின் செயற்பாடாகவே கருதுவதுடன் நிற்காது அதன் அடிமுடியைத் தேடும் நிகழ்ச்சிகளிலும் சர்வதேச சமூகம் இறங்கும். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது என்று பலரும் கேள்வி எழுப்பலாம்.

அது உண்மையேயானால் அதற்கான சூழல் இப்போது வடக்கு கிழக்கில் இல்லை. அத்தகைய நிலை ஏற்பட விடவும் மாட்டோம் என்று அரசாங்கம் பதில் கொடுத்ததையும் மறக்க முடியாது.

எனவே,

ஆயுதக் குழுவொன்றை உருவாக்கி வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைகளைத் தீர்த்துக் கட்டும் முயற்சிகளை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் புத்திசாலித்தனமான அரசு ஒன்று இத்தகைய முட்டாள்தனமான காரியத்தை மேற்கொள்ளாது. புலிகளை அழித்த விடயத்தில் தம்மை புத்திசாலித்தனமுள்ள அரசாங்கம் என்று நிரூபித்த இலங்கை அரசாங்கம் இப்படியொரு காரியத்தைச் செய்ய முனைந்தால் முட்டாள் பட்டத்தைத்தான் கேட்க நேரிடும்.

எனவே,

புதிய ஆயுதக் குழுவொன்றை அரசாங்கம் உருவாக்க முனைவதான செய்திகள் புரளியையோ பரபரப்பையோ ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கலாம். சர்வதேச அரசியல் சூழல் உள்நாட்டு அரசியல் சூழல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டுத் தான் இத்தகையதொரு குழுவை உருவாக்க முடியும். அவ்வாறு செய்வது சிரமமான காரியமில்லை. ஆனால் அதன் விளைவுகள் மிகப் பெரியளவில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

– சுபத்ரா

Advertisements