மக்களின் நிரந்தரத் தீர்ப்பாயமும் ஈழத்தமிழர் பற்றிய அதன் தீர்ப்பின் பயன்பாடும்

Sri Lanka guilty of genocide
ஆதிகாலந்தொட்டு மனிதர்கள் செய்த கண்டுபிடிப்புக்களில் அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் ஆக அச்சுறுத்தலான ஒரு விடயம் என்னவென்று கேட்டால் தேசிய அரசு என்கின்ற ஆட்சிக் கட்டமைப்பு என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்.

அதுவும், நவீன தொழில் நுட்பங்களின் பயனான ஆயுதங்களும், தொடர்பாடல் முறைகளும் கண்டுபிடிக்கப்பட்ட 20ம் நூற்றாண்டில், இத்தேசிய அரசுதான் மிகப் பெரிய பயங்கரவாதி என மனிதகுலம் உணர்ந்து கொண்டது. அது நாடுகளுக்குள்ளும் நாடுகள் மீதும் மேலாதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இனச்சுத்திகரிப்பு மூலம் தனது பிரஜைகளை ஓரினமயப்படுத்தும் (homogenizing) பணியையும் செய்யும் தன்மை கொண்டது.

இதன் காரணமாகத்தான் உலகத்தின் பொது மக்களைப் பாதுகாக்கவென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது. நாடுகள் யாவும் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்காணித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகில் நீதியும் சமாதானமும் நிலைநிறுத்தப்படலாம் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இது தோற்றுவிக்கப்பட்டாலும்கூட, அரசுகளுக்கு இருக்கக்கூடிய பொது நலன்கள் காரணமாக, நீதியை நிலைநாட்டுவதைவிடவும் அவை ஒன்றையொன்று பாதுகாக்கவே முற்படும் என்ற யதார்த்தம் இன்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கோட்பாட்டினையே வேரறுப்பதாகத் திரும்பியுள்ளது.

இதன் விளைவாக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான மாற்றுக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. பிரதிநிதித்துவம் பெறாத தேசியங்கள் (Unrepresented Nations) என உலகெங்கணுமுள்ள சிறுபான்மைத் தேசியங்களின் நலன்களை முன்னிறுத்தி ஓர் மாற்று UNஉருவாக்கப்பட்டள்ளது. அதே போல உருவாக்கப்பட்டதே மக்களின் நிரந்தரத் தீர்ப்பாயமாகும் (Permanent Peoples Tribunal).

மக்கள் குழுமங்களின் உரிமைகளின் பிரகடனம் சார்பாக 1979ம் ஆண்டு இத்தாலியில் இந்த மக்கள் தீர்ப்பாயம் செயற்படுத்தப்பட்டது. இதன் ஆதாரமூலமானது 1970களின் நடுவில் வியட்நாமில் அமெரிக்கா புரிந்த அராஜகங்களை விசாரித்த ரஸல் தீர்ப்பாயமாகும். நாடுகளை சாட்சிக் கூண்டில் எற்றுவதற்கு மிகச் சிறந்த வழியாக இந்த அனுபவம் காட்டிற்று. ரஸல் தீர்ப்பாயத்தின் வழிமுறைகளையொட்டியே மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.

உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் மக்கள் தாம் முகம் கொடுக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி, அவை தமது நாட்டரசாங்கங்களாலோ அல்லது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினாலோ செவி மடுக்கப்படாது போகும் பட்சத்தில், இதற்கு முறைப்பாடு செய்யலாம். இது குற்றச்சாட்டுப்பத்திரம் தயாரிப்பது தொடக்கம் சர்வதேச சட்டங்களை விளித்து தீர்ப்புக்கள் வழங்குவது வரை பாரம்பரிய நீதிமன்றங்களின் நடைமுறைகளையே பின்பற்றுகின்றது. இதன் தீர்ப்புக்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அமைப்புக்களுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கிரமமாக அனுப்பப்படுகின்றன.

அங்கு அவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன. எடுக்கப்படும் விடயத்தைப் பற்றிய நிபுணத்துவம் கொண்டவர்களையும் உலகின் தலைசிறந்த சட்ட வல்லுனர்களையும் நோபல் பரிசு பெற்ற தலைவர்களையும் நீதிபதிகளாக நியமிக்கும் இத்தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புக்கள் சட்டப்படி செல்லாதெனவாயினும், அவை சட்டரீதியான எந்த நடவடிக்கைகளிலும் கோடு காட்டக் கூடியனவாகும். அதாவது, உத்தியோகபூர்வ வழக்குகளில் இதன் தீர்ப்பினையும் வாதத்துக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். உதாரணமாக, போபாலில் யூனியன் காபைட்டின் கிருமிநாசினி தொழிற்சாலையில் நிகழ்ந்த வாயு வெளியேற்ற அனர்த்தத்தின் பயனாக இந்த நிரந்தர தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே 1996ம் ஆண்டு தொழிற்றுறை அனர்த்தங்கள் தொடர்பான மனித உரிமைகள் பட்டயம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இவ்வகையான கருத்துத் தீர்ப்பாயமானது சட்டத்துறையிலும் அரசியற்துறையிலும் ஓர் புதுமையான திருப்பம் என்று கூறினால் மிகையாகாது. எங்கும் ஆளும் வர்க்கங்களின் நலன்கள் குறித்தே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பது உலகின் யதார்த்தமாகும். இதற்கு சவால் விடும் முறையாக, பொதுமக்களின் மனச்சாட்சியின் தேவைகள் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான மூலமாகலாம் என இத்தீர்ப்பாயம் ஓர் புதிய பாரம்பரியத்தினை எற்படுத்தியது. கட்டமைக்கப்பட்ட அதிகாரம் எந்த மக்களிடமிருந்து தனது உரித்துடையைப் பெறுகின்றதோ அந்த மக்களுக்கே எதிராகத் திரும்பும்பொழுது, அம்மக்களுக்கும் அவர்களையொடுக்கும் அதிகாரத்திற்கும் இடையேயான இடைவெளியினைக் குறைப்பதே தமது நோக்கம் என இத்தீர்ப்பாயத்தினை நிறுவிய லெலியோ பஸ்ஸோ மன்றம் தெரிவிக்கின்றது.

இது தனது முப்பது வருட வரலாற்றில் முப்பத்தியாறு அமர்வுகளில் பதினைந்திற்கு மேற்பட்ட அரசுகளுக்கெதிராகவும் ஏராளமான பல்தேசியக் கம்பனிகளுக்கெதிராகவும் வழக்குகளை விசாரித்திருக்கின்றது. மக்களின் சுயநிர்ணய உரிமை, அதிகாரத்திலுள்ளவர்கள் அனுபவிக்கும் தண்டனை விலக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கொள்கைகள், யுத்தங்களை நியாயப்படுத்தும் சர்வதேச சட்டங்கள், சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பல்தேசியக்கம்பனிகளின் கொள்கைகள் எனப் பல விடயப்பிரச்சினைகளைக் கையாண்டிருக்கின்றது. 2010ம் ஆண்டு முதல் ஈழத் தமிழர் பிரச்சினையையும் அது தூக்கியிருக்கின்றது.

2010ம் ஆண்டு அயர்லாந்தில் ஈழத்தமிழர் குறித்த இதன் முதல் அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த மாதம் 7ந் திகதிக்கும் 10ந் திகதிக்கும் இடையில் ஜேர்மனியின் பிரமன் நகரில் இதன் இறுதி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பதினொரு நீதிபதிகள் கொண்டு நேரடி சாட்சிகளும் நிபணர்களும் வழங்கிய முப்பது சாட்சியங்களைக்கொண்டு திடுக்குற வைக்கும் தீர்ப்பினை இது வழங்கியிருக்கின்றது.

இந்த நீதிபதிகளில் ஒருவர் கோபி அனான் காலத்திலே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவி செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த திரு டெனிஸ் ஹலிடேயாவார். இவர் இந்தக் காலத்தில் ஈராக் தொடர்பான ஐ.நாவின் கையாலாகாத்தனத்தினை ஆட்சேபித்துத் தனது பதவியை இராஜிநாமா செய்தவர். இவருடன் இத்தீர்ப்பாயத்தில் உப தலைவராகப் பணி புரிந்திருப்பவர் புவனர்ஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் இனச்சுத்திகரிப்பு பற்றிய கற்கை நெறிக்கு பேராசிரியராகத் திகழும் திரு டானியல் ஃபியர்ஸ்டைன் என்பவராவார். இந்தவொரு விடயத்தை வைத்துக்கொண்டே இந்தத் தீர்ப்பாயத்தின் குறிப்பிடத்தக்க தன்மையினை புரிந்து கொள்ளலாம்.

எழுந்தமானமான ஷெல்லடிகள் மற்றும் விமானத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள், சித்திரவதை விளைவிக்கும் தண்டனைகள், என்பவற்றைத் தவிர, காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கல் என்பவற்றின் மூலமாகவும் தமிழ் மக்கள் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாகின்றனர் என இது தீர்ப்பளித்திருக்கின்றது. முக்கியமாக அது சர்வதேச சமூகத்தினைக் குற்றவாளியாகக் கண்டிருக்கின்றது. அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முதலாவது அமர்வில் இங்கிலாந்து அமெரிக்க அரசாங்கங்களே 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடையக் காரணமாயின என முடிவு சொல்லியது. அதே போல் பிரமனில் நடந்த இரண்டாவது அமர்வில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்த யுத்தத்தினைத் தனியே புரிவதற்கான ஆற்றல்கள் இருக்கவில்லையென்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனேயே இது நடத்தப்பட்டது எனவும் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள், தாம் செய்யும் உதவிகள் எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றன என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும்; ஸ்ரீலங்கா இராணுவத்திற்கான ஆயுதத் தளபாட உதவிகளையும் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கியிருக்கின்றன என்று கூறியிருக்கின்றது. இந்தியாவின் தலையீட்டினைப் பற்றித் தகுந்த ஆதாரங்கள் இல்லலையாதலால் அது பிறிதொரு முறை ஆராயப்படவேண்டும் என்றிருக்கின்றது.

இணையதளத்தில் ஒளிபரப்பாகிய இந்தத் தீர்ப்பாயத்தின் அமர்வுகள் வரலாற்று முக்கியம் மிக்கதாகும். இனிவருங்காலங்களில் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய ஜெனீவாவின் மனித உரிமைப் பேரவையின் எந்தக் கூட்டத்திலும் இது எடுத்துக்காட்டப்படக் கூடியதாகும். ஆனால், சர்வதேச மட்டங்களின் முறைவழிகளுக்கு சில மட்டுப்பாடுகள் உண்டு. ஒரு அரசாங்கத்திற்கெதிரான தீர்மானங்கள் அவ்வளவு இலகுவில் எடுக்கக் கூடியன அல்ல. அதிகூடிய பட்சம் பொருளாதாரத் தடையை மட்டுமே கொண்டு வரலாம். இந்த அரசாங்கத்தைக் கணக்குக் காட்ட வைக்கவேண்டுமானால் உள்ளுரில் அதன் அதிகாரம் வேரறுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதற்கான நல்லதொரு கருவியாக இந்தத் தீர்ப்பு செயற்படலாம். இத் தீர்ப்பின் விபரங்களையெல்லாம் சிங்களத்தில் மொழி பெயர்த்து தென்னிலங்கையின் மனித உரிமைகள் வலையமைப்புக்களின் மூலமும் சமய அமைப்புக்களின் மூலமும் சிங்கள மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும். இயலுமான வரையில் சிறு கூட்டங்களைத் தென்பகுதியில் இது பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களின் மனச்சாட்சியினைத் தொடுவதற்கும் தூண்டுவதற்கும் இது பயன்படலாம். சர்வதேச ரீதியாக நிகழும் போக்குகளை இவ்வாறு எமக்கு அனுகூலமாகச் செயற்படுத்தும் மூலோபாயத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவேண்டுமே. அதற்கு முடியுமா?
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?

சாந்தி சச்சிதானந்தம்-குளோபல் தமிழ்

Advertisements