நீர் வழங்கல் போர்வையில் தமிழ் மக்களிடையே பிரதேசவாதம் தூண்டுவதற்கு சிங்கள அரசு முயற்சி

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு நீர் வழங்கல் என்ற பெயரில் இரண்டு மாவட்ட மக்களிடையேயும் பிரதேசவாதத்தை தூண்டுவதற்கு சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்ற சதித்திட்டத்ததிற்கு எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு தனி நபரோ துணை போவது தமிழ்த் தேசியத்திற்கு செய்கின்ற மகா துரோகமாக அமையும். இந்த துரோகத்தனத்தில் எவரும் ஈடுபட வேண்டாம் என்று யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.iranaimadu

கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தனியொருவரிடையே எழுந்த பிரதேசவாதம் என்ற எண்ணக்கருவால் நாங்கள் இன்று பாரிய இழப்புக்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு நிற்கின்றோம். எனவே, இனிமேலும் எவராவது பிரதேசவாதத்தை பரப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றும் யாழ்.மாவட்ட தமிழ் பேரவை எச்சரித்துள்ளது.

எமது மக்களை சிங்கள மேலாண்மைவாதம் இன்று கருவறுக்கின்றது. இன்னும் சில தசாப்த காலங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை சில லட்சங்களாக மாற்றுவதற்கு சிங்களம் கங்கணம் கட்டி நிற்கின்றது. இந்த நிலையில் இரணைமடு நீர் என்ற விவகாரத்தால் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே பிரிவினையையும் எதிர்காலத்தில் மோதல்களையும் உருவாக்க சிங்களம் முனைப்புக்காட்டி வருகின்றது. தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தற்போதைய நிலையில் இந்த நீர் விவகாரம் தேவையற்றது.

எனவே, இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவது என்ற திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ் மாவட்ட தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை 19.12.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு நீர் வழங்கல் என்ற பெயரில் இரண்டு மாவட்ட மக்களிடையேயும் பிரதேசவாதத்தை தூண்டுவதற்கு சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்ற சதித்திட்டத்ததிற்கு எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு தனி நபரோ துணை போவது தமிழ்த் தேசியத்திற்கு செய்கின்ற மகா துரோகமாக அமையும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முடக்குவதற்காக சிங்கள அரசாங்கம் காலத்திற்கு காலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே இப்போது இரணைமடு குளத்து நீரை யாழ். குடாநாட்டுக்கு விநியோகிக்கும் திட்டம் என்ற பெயரில் நயவஞ்சகமான திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டம் தீட்டியுள்ளது.

பல வங்கிகளிடம் கடன் பெற்று இந்த திட்டத்தை செயலுருப்பெற வைப்பதாக அதிகாரிகள் கூறிக்கொண்டாலும் இது முற்றுமுழுதாக சிங்கள அரசாங்கத்தின் மிக மிக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையே ஆகும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தனியொருவரிடையே எழுந்த பிரதேசவாதம் என்ற எண்ணக்கருவால் நாங்கள் இன்று பாரிய இழப்புக்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு நிற்கின்றோம். எனவே, இனிமேலும் எவராவது பிரதேசவாதத்தை பரப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை.
யாழ்.குடாநாட்டில் நீர் பற்றாக்குறை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக இரணைமடு நீரைத்தான் இங்கு கொண்டுவரவேண்டுமென்பதில்லை. யாழ்.குடாநாட்டில் எத்தனையோ மாற்றுத் திட்டங்கள் இருக்கின்றன. அது பற்றி சிந்திக்க முடியும். அவ்வாறு செய்யாமல் இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு படு முட்டாள்தனமானது. நேர்மையாக சிந்திக்கின்ற எந்தவொரு தொழில்நுட்ட உத்தியோகத்தனும் இந்த திட்டத்திற்கு இணங்கியிருக்க மாட்டான். சிங்கள அரசாங்கத்தால் வரையப்பட்ட திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தாங்கள் மில்லியன் கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணத்துடனேயே சில தமிழ் அதிகாரிகள் தற்போது இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று துடிக்கின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்த திட்டத்திற்கு துணைபோவதை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றோம்.

ஒரு மாவட்ட மக்களை நன்மையடையச் செய்வது என்ற பெயரில் இன்னொரு மாவட்ட மக்களின் வயிற்றில் அடிப்பது படு கேவலமானது. கிளிநொச்சி மாவட்ட மக்களினதும் அதன் எல்லைப்புறமான முல்லைத்தீவு மாவட்ட மக்களினதும் வாழ்வாதாரமே இரணைமடுக் குளத்தில்தான் தங்கியிருக்கின்றது. வன்னியில் கடும் யுத்தம் நடைபெற்ற போதும் இறுதி யுத்தம் நடைபெற்ற போதும் அங்கு அரிசிக்கு பெரும் பஞ்சம் இருக்கவில்லை. காரணம் இரணைமடுக் குளத்தினூடா மக்கள் நீர்பெற்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டனர். இறுதி யுத்த காலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கஞ்சி குடித்தென்றாலும் உயிரைக் கையில் பிடிப்பதற்கு இரணைமடுக் குளத்து நீரில் பயிர்செய்ததன் மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருந்த அரிசியே காரணமானது.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் கணக்கான நிலங்களுக்கே தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் அங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சிறுபோகம் செய்வதற்கு விவசாயிகளுக்கு இரணைமடுக்குளத்து நீர் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அந்த நீரை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதானது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவேளை, இந்த இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு விநியோகித்தாலும் எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறையாகவே அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான நீரை தடைப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற இரணைமடு நீருக்கு பழக்கப்பட்ட மக்கள் அந்த நீர் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் கிளிநொச்சி மக்களுடன் முரண்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இந்த முரண்பாட்டை ஏற்படுத்துவதே சிங்கள அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் துணைபோகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

எனவே, கிளிநொச்சி மாவட்ட மக்களின் வயிற்றிலடித்து இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல எடுக்கப்டுகின்ற முயற்சிகள் அனைத்தையும் உடனடியாக கைவிடுமாறு தொடர்புடைய அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். மாறாக இந்த திட்டத்தை செயற்படுத்த நினைப்பதானது தமிழின அழிப்பிற்கு துணைபோகும் செயற்பாடாகவே எங்களால் கருதப்படும்.

எமது மக்களை சிங்கள மேலாண்மைவாதம் இன்று கருவறுக்கின்றது. இன்னும் சில தசாப்த காலங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை சில லட்சங்களாக மாற்றுவதற்கு சிங்களம் கங்கணம் கட்டி நிற்கின்றது. இந்த நிலையில் இரணைமடு நீர் என்ற விவகாரத்தால் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே பிரிவினையையும் எதிர்காலத்தில் மோதல்களையும் உருவாக்க சிங்களம் முனைப்புக்காட்டி வருகின்றது.

தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள தற்போதைய நிலையில் இந்த நீர் விவகாரம் தேவையற்றது. தமிழ் மக்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தவோ அவர்களை அழிப்பதற்க எடுக்கின்ற நடடிக்கைகளுக்கு துணைபோவதையோ யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை என்றைக்குமே அனுமதிக்காது.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்.

Advertisements