‘இங்கிருந்து’ – முகமிழந்த மலையக தோட்டத் தொழிலாளர்கள் பற்றி ஒரு திரைப்படம்

from here movieபுகழ்பெற்ற ‘சிலோன் தேயிலையில்’ தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தேநீர்க் குவளைக்குப் பின்னரும், ஆண்டு முழுவதும் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் மிகக் கடுமையாக உழைக்கின்ற முகம்தெரியாத தொழிலாளிகள் உள்ளனர். சிறிலங்காவில் வாழும் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பாக ‘இங்கிருந்து’ [From Here] என்கின்ற திரைப்படத்தை சிவமோகள் சுமதி இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் வெகுவிரைவில் கொழும்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. “சிறிலங்காவில் இடம்பெற்ற இனப் பிரச்சினை தொடர்பான திரைப்படங்களுக்குள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் கதைகள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை” என்கிறார் இயக்குனர் சுமதி.

தென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியாவால் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் அல்லது தோட்டத் தமிழர்கள் இந்தியாவின் திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்ற அரசியற் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குடியமர்த்தப்பட்டனர்.

வரலாற்று ரீதியாக மிகக் குறைந்தளவில் கவனம் செலுத்தப்படும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதைத் தூண்டும் முகமாக தற்போது ‘இங்கிருந்து’ என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதாக சுமதி மேலும் குறிப்பிடுகிறார்.

மலையகத் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் தொழில் ரீதியில் சுரண்டப்படுவது மட்டுமன்றி இவர்களுக்கான குடியுரிமை மற்றும் உடைமைகள் போன்றன எவ்வாறு அடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சுமதி தனது திரைப்படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்கள் சிறிலங்கா அரசாலும் அதாவது நாட்டிற்குள்ளும் வெளிச்சக்திகளாலும் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். “கருத்தியல் ரீதியாக நோக்கில், இது ஒரு யுத்தம் மற்றும் சமாதானம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு திரைப்படமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என சுமதி குறிப்பிடுகிறார்.

“நான் இந்தத் திரைப்படத்தை மூன்று, நான்கு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கவில்லை. நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமன்றி சமூகத்தின் பங்களிப்பையும் உள்வாங்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன். எனது பிரதான கதாபாத்திரமாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகம் காணப்படுகிறது” என பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கின்றவரும், திரைப்படத்தை இயக்கியவருமான சுமதி மேலும் குறிப்பிட்டார்.

கவிஞராகவும், நாடகச் செயற்பாட்டாளருமான சுமதி, இத்திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். இந்த மக்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் இந்த மக்களின் உள்ளுணர்வகளை சுமதி நன்குணர்ந்தார்.

இந்த மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவை இவர் பேணினார். “இந்தத் திரைப்படத்தில் தோன்றியுள்ள கதாபாத்திரங்கள் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்” என்கிறார் சுமதி.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரன் தொடர்பாக இத்திரைப்படத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்ததால் தான் இந்த மக்கள் இவரைப் போற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையில் மக்கள் எம்.ஜி.ஆரை மீளவும் நினைவுகூருகின்றனர். மலையகத் தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் கழகங்கள் மற்றும் இவரின் சிலைகள் என்பனவும் காணப்படுகின்றன” என சுமதி குறிப்பிட்டார்.

இந்த மக்களின் அடிப்படைக் கலாசாரத் தொடர்புகள் தென்னிந்தியாவைச் சேர்ந்ததாகும். மலையக சமூகத்தின் மத்தியில் நிலவும் ஆண், பெண் சமத்துவமின்மை, தொழில் சுரண்டல்கள் போன்றன மிக அழகாக இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் சிறிலங்காவின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது வாழ்கின்றனர்.

சிறிலங்காத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு போன்றன தமது பலமான கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், தென்னிந்தியாவுடன் மிகப் பலமான தொடர்பைக் கொண்டுள்ள மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக எவரும் தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை. இந்திய-சிறிலங்கா உடன்படிக்கையால் மலையகத் தமிழர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறவேண்டியேற்பட்டது. இது தொடர்பில் இத்திரைப்படத்தில் ஒரு தெளிவான தீர்வு அல்லது கருத்து முன்வைக்கப்படவில்லை.

“நான் இத்திரைப்படத்தில் எழுப்பியுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் இதில் பதில் கூறவேண்டும் என விரும்பவில்லை. எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக்கொள்கிறோமா? இத்திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவரும் மலையகத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” என்கிறார் இயக்குனர் சுமதி.

இந்தத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு 18 நாட்கள் எடுத்ததாகவும் ஆனால் தயாரிப்புப் பணிகளுக்கு மிக நீண்ட நாட்கள் எடுத்ததாகவும் சுமதி குறிப்பிடுகிறார். “இத்திரைப்படத்தை இயக்குவதற்கான 80 சதவீதமான பணம் எனது சொந்தப் பணமாகும். ஆனால் எனது நண்பர்களும் குடும்பத்தினரும் உதவி செய்துள்ளனர்” என்கிறார் சுமதி.

திரைப்படத்தை இயக்குவதற்கு நிதி மட்டும் ஒரு பிரச்சினையில்லை. சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள்ள சில தோட்ட உரிமையாளர்கள் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. “இத்திரைப்படத்தில் வருகின்ற நிறையக் காட்சிகள் மிகவும் இரகசியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாகும்” என சுமதி குறிப்பிட்டார்.

இத்திரைப்படத்திற்கான வர்த்தக சார் வரவேற்பு எவ்வாறிருக்கும் எனக் கேட்ட போது, “உண்மையில் சிறிலங்காவில் வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு எந்தவொரு வர்த்தக சார் பெறுமதியும் கிடைக்கப் பெறாது” என இயக்குனர் சுமதி விளக்கினார்.

செய்தி வழிமூலம் : The Hindu -MEERA SRINIVASAN
மொழியாக்கம் : நித்தியபாரதி

பிபிசி ‎ –மலையக வாழ்வியல் போராட்டம்: சுமதி சிவமோகனின் ‘இங்கிருந்து’

Advertisements