கருத்தியக்கமும் வாழ்வியக்கமும் – பிரம்மஞானி

Mr. and Mrs. Anton Balasingham with senior LTTE leaders in Kilinochchi, 23. January 2006 2.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பிரம்மஞானி என்ற பெயரில் 1990களில் எழுதிய இந்தக் கட்டுரை இன்றைய காலத்திற்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கின்றது. ‘எரிமலை’ (மார்ச் 1994) இதழில் வெளியாக அக்கட்டுரையை அவரது 6வது ஆண்டு நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.

கருத்தியக்கம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது? கருத்துலகம் என்றால் கருத்துக்களால் அமையப்பெற்ற உலகம். எண்ண உலகம், மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், வேதாந்தங்கள், தத்துவங்கள், இலக்கியங்கள் என்ற ரீதியில் கருத்துக் குவியல்களைக் கொண்ட உலகம்.

பலவகைப்பட்ட இந்தக் கருத்துருவங்களின் ஒட்டு மொத்தமான கட்டமைப்பையே இங்கு கருத்துலகம் எனக் குறிப்பிடுகிறோம். கருத்துக்கள் என்றால் மனிதனின் மனவுலகக் குகைக்குள் வசிக்கும் அரூபமான நிழலுருவங்கள் அல்ல. அன்றி, அவை அனுபவத்திற்கு அகப்படாத பூடகமான மானசீகப் பொருட்களுமல்ல. கருத்துக்களுக்கு இருப்புண்டு. திண்ணியமான பொருளிய வாழ்வுண்டு. கருத்துக்கள் மனித பண்பாட்டு உலகிலிருந்து பிறப்பெடுத்து மனிதர்களைப் பற்றிக்கொள்கிறது.

அன்றொரு காலம் பல யுகங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது. கருத்துக்களின் மையக்கருத்தாக அது புனிதம் பெற்றது. மேலாதிக்கம் எடுத்தது. மனிதனை அது ஆழமாகப் பற்றிக் கொண்டது. அந்தக் கருத்துக்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான். மலைகளைப் பெயர்த்து கற்பாறைகளைத் தகர்த்து கலைவடிவம் கொடுத்தான். ஆயிரமாயிரம் ஆலயங்கள் எழுந்தன. அந்தக் கருத்திற்கு மனிதன் விளக்கங்கள் கொடுத்தன. வியாக்கியானங்கள் கொடுத்தான். வேதங்கள் தோன்றின. சித்தார்த்தங்கள் பிறந்தன. கிரிகைகள், சடங்குகள் தோன்றின. கோடானு கோடி அடியார்கள் தோன்றினர். ஆராதனைகள் நடத்தினர். அந்த மையக்கருத்தில் எழுந்த கருத்துலகம் மனிதனை இயக்குகிறது. மனிதனின் சமூக செயற்பாடுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. நாம் கருத்துலகால் வனையப்பட்ட சமூகப் பொம்மைகள்.

நாம் பிறந்த கணத்திலிருந்தே கருத்துலகம் எம்மை விழுங்கிக்கொள்கிறது. நாம் பிறந்து விழிப்புணர்வு பெறுவதற்கு முன்னரே எமக்கு விலங்குகளை மாட்டிவிடுகிறது. எமது விபரமறியாப் பருவத்திலேயே நிர்ணயித்துவிடுகிறது. கண்திறக்காத சிசுவாக இந்தப் பூமியில் பிரசவித்த கணத்திலிருந்து எமக்கு ஒரு பெயர் சூட்டி, எமக்கு வம்சம் என்றும், சாதியென்றும், மதமென்றும், மரபு என்றும், சம்பிரதாயம் என்றும் கருத்துலகம் குத்திவிடும். சமூகக் குறிகள் சுடுகாடுகள் வரை எம்மைப் பின்தொடர்கின்றன. நாம் வாழ்ந்த குடும்பம், நாம் படித்த பாடசாலை, நாம் வழிபட்ட கோயில், நாம் வாசித்த நுல்கள், நாம் பழகும் நண்பர்கள், நாம் வரித்துக் கொண்ட ஆசான்கள் என நாம் கொண்ட கருத்துக்களால் காலம் காலமாக எமது மூளையில் திணிக்கப்பட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள், சித்தாத்தங்கள், உலகப் பார்வைகளால் எமது மனமும் எமது சுயமும் தோற்றப்பாடு கொள்கிறது.

எம்மீது திணிக்கப்பட்டதும் எம்மை ஆகர்ஷித்துக்கொண்டதுமான கருத்துக்கள் எமக்கு உள்ளே இருப்புக் கொண்டு இயந்திரமாக எம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த கருத்து ஆழமாக நம்பிக்கையாக அவனை ஆட்கொண்டது. அந்தக் கோவில் விக்கிரகத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து எழுகின்றான். பின்னர் பிரகாரத்தைச்சுற்றி பிரதட்சணம் செய்துவருகிறான். நம்பிக்கை என்ற கருத்தியக்கம் அவனை இயக்கியது. அன்றுகாலை அரை மணி நேரமாக அந்த மத பண்பாட்டுச் சடங்குகளில் காலம் நழுவியது. தெரியாதவாறு எண்ண இயந்திரம் அவனை இயக்கியது.

ஒருவனது நடத்தை. அவனது செயற்பாடு, அவன் நாளாந்தம் நடத்தும் வழிபாடுகள், மற்றவர்களுடன் சேர்ந்து அரங்கேற்றும் சம்பிரதாயச் சடங்குகள், உறவுமுறைகள் எல்லாமாக அவனது சமூக நடைமுறைச் செயற்பாடுகள் அனைத்தையுமே கருத்துலகம் நிர்ணயித்துவிடுகிறது. மனிதர்கள் தம்மை அடையாளம் காணவும் சமூகப் பிறவிகளாக தம்மை உருவாக்கி கொள்ளவும், மற்றவர்களுடன் உறவு கொண்டு பண்பாட்டு வாழ்வில் பங்கு கொள்ளவும் கருத்துலகம் வழிசெய்து கொடுக்கிறது. இந்தவகையில் தனிமனித வாழ்விற்கும் சமூகசீவியத்திற்கும் கருத்துலகம் ஆதாரமாக இருக்கிறது.

கருத்துக்கள் சமூக உலகம் சார்ந்தவை. கருத்துலகமானது சமூக உலகத்தின் ஒரு உலகமாக, சமூகக் கட்டமைப்பின் ஒரு அமைப்பாக மனித வாழ்வியக்கத்தை ஊடுருவி நிற்கிறது. கருத்துலகத்தைச் சமூக உலகமே படைக்கிறது. சமூக நிறுவனங்களே கருத்துக்களை உருவாக்கம் செய்கின்றன. குடும்பம், பாடசாலை, பல்கலைக்கழகம், கோவில், கட்சி, தகவற்தொடர்பு ஸ்தாபனங்கள் என்ற ரீதியில் கருத்துத் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. பேச்சாக, எழுத்தாக, பாடமாக, போதனையாக, பிரசங்கமாக, செய்தியாக, பிரச்சாரமாக, செய்தியாக, தகவலாக பல்வேறு வழிகளில் பல்வேறு வடிவங்களில் கருத்து உற்பத்தி நிகழ்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பிராயம் வரை வீட்டிலும் பள்ளியிலுமாக நீண்ட நெடுங்காலம் ஒருவனுக்கு கருத்துத் திணிப்பு நடக்கிறது. அந்தக் கருத்துலக அழுத்தத்தில் அவனது ஆளுமை பிறந்து வளர்கிறது. மூளைக்குள் கொட்டப்பட்ட கருத்துகளின் தன்மையைப் பொறுத்ததாக அவனது சிந்தனையும், செயற்பாடும், அமைந்துவிடுகிறது.

கருத்துக்களைப் படைத்து, அந்தக் கருத்துக்களை வெகுசன அரங்கில் பரப்பி, சமூகக் கருத்தோட்டத்தைக் கட்டி வளர்த்து, சமூக சிந்தனைப் போக்கை நெறிப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கருத்து உற்பத்தி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. இந்தவகையில் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களைக் கட்டுப்பாட்டுடன் ஆளுவதற்கு கருத்துலகம் அவசியமானது. என்பதால் உலகத்திலுள்ள பல்வேறு அரசுகளும், ஆளும் வர்க்கங்களும் கருத்து உற்பத்தி நிறுவனங்களை தமது அதிகாரக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.

ஒரு அரசு என்றாலும் சரி, அல்லது அந்த அரசுக்கு முண்டுகொடுத்து நிற்கும் ஆளும் வர்க்கம் என்றாலும் சரி, கருத்துலகம் வாயிலாக தனது ஆட்சியை நியாயப்படுத்தி நிலைநிறுத்த முயற்சிக்கிறது. கருத்துக்களை மக்கள் மீது திணித்து, மக்களின் விழிப்புணர்வை மழுங்கடித்து, மக்கள் மனவரங்கில் ஒரு பொய்யான பிரக்ஞையை உருவகித்து, கருத்தாதிக்கம் மூலம் தனது ஆட்சியை வலுப்படுத்துகிறது. இந்த வகையில் கருத்துலகமானது மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படுகிறது.

அன்றொருகாலம் காலனித்துவப் பேரரசுகள் இந்தப் பூமிமீது தமது வல்லாதிக்கத்தை விரிவுபடுத்தியபோது ஆயுத வன்முறையை மட்டும் பாவிக்கவில்லை. கருத்தாதிக்கத்தையும் ஒரு அடக்குமுறைக் கருவியாக அவர்கள் பிரயோகிக்கத் தவறவில்லை. மதம், மொழி, தத்துவம், தார்மீகம், அரசியல் என்ற ரீதியில் அந்நியப் பாண்பாட்டுக் கருத்துருவங்கள் சுதேசிய மக்கள் மீது திணிக்கப்பட்டன. நிலத்துடன் நின்றுவிடாது மக்களின் மனவுலகமும் ஆக்கிரமிக்கப்பட்டது.

கருத்து விலங்கிட்டு மனித மனங்களை சிறைகொள்வது ஒரு நுட்பமான அடக்குமுறை யுத்தி. உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் இந்தக் கருத்தாதிக்க யுக்தியையே கடைப்பிடிக்கிறார்கள். பொய்யாக, புரட்டாக, புனைகதையாக, புராணத்துப் புதிர்களாக மெய்மையைத்திரித்து, கருத்துலக மாயைக்குள் மனிதமனங்கள் புதைக்கப்படுகின்றன. மனிதர்களை விழித்தெழச் செய்யாது, அவர்களை நித்திய உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு ஏகாதிபத்தியவாதிகளும் சரி, இந்த எண்ணப் போதையையே பாவித்து வருகின்றனர். மக்களின் கிளர்ச்சியை நசுக்க புரட்சியை முறியடிக்க, விடுதலை உணர்வை கொன்றுவிட கருத்து ஒரு கனரக ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி உலகம் தனது அநீதியான சுரண்டல் முறையை நியாயப்படுத்த மிகவும் சாதுரியமான முறையில் கருத்துலகத்தைப் படைத்திருக்கிறது, இந்த அநீதியான உலகில்தான் நீதிபற்றிய கருத்துக்கள் மிகவும் ஆழமாக ஆடைகள் அணிந்து கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கின்றன. இங்குதான் மனித சுதந்திரம், மனித உரிமை, மனித தர்மம், மக்கள் ஆட்சி எனப் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட்ட கருத்துருவத் திரைக்குப் பின்னால் மிகவும் கொடூரமான ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறது. இந்தப் புனிதமான கருத்துவக் கோசங்களை எழுப்பியபடிதான் உலக முதலாளித்துவ அரசுகள் பூமியின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி உலகில் தான் கருத்துலக மாயைக்கும், நடப்பியல் எதார்த்தத்திற்கும் மத்தியில் எவருமே கண்டுகொள்ள முடியாதவாறு முரண்பாடுகள் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன. இங்குதான் உழைக்கும் மக்களுக்கு கருத்துப் போதையும், உழைப்பைச் சுரண்டுபவனுக்கு நிகரலாபமுமாக சனநாயக சமத்துவம் தழைத்தோங்கி நிற்கிறது.

எந்தவொரு காலத்திலும் எந்தவொரு சமூகத்திலும் அதிகார மேலாண்மையும் கருத்துநிலை மேலாதிக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக, ஒன்றுக்கொன்று முண்டுகொடுப்பதாக இயங்கிவருகிறது. அன்றும் சரி இன்றும் சரி சமூகத்தில் அதிகார ஆதிக்கம் பெற்ற சக்திகளே கருத்து நிலையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முதலாளித்துவ உற்பத்தி உலகில் ஆளும் வர்க்கத்தின் கருத்து நிலை மேலாதிக்கமானது. ஆட்சி அதிகாரத்தை நியாயப்படுத்தி நிலைநிறுத்துவது மட்டுமல்லாது பொருள் உற்பத்தி உறவுகளை மீளாக்கம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தக் கைங்கரியத்தை கருத்து உற்பத்தி நிறுவனங்களே நிறைவு செய்கின்றன.

கருத்து உற்பத்தி மையமாக விளங்கும் கல்வி நிறுவனங்களே இதில் முக்கிய பங்கு வகிப்பதாக அல்துசர் என்ற சிந்தனையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இங்குதான் முதலாளித்துவத்தின் தொழிலாக்க சக்தியாக தொழிலாளர் படையும், தொழிநுட்ப நிபுணர்கள், நிர்வாகிகள், முகாமையாளர்களும் உருவாக்கப்படுகின்றனர். சட்டம், அரசியல், சமூகவிஞ்ஞானம், தத்துவம் போன்ற பாடத்திட்டங்கள் முதலாளித்துவ ஆட்ச்சியமைப்பின் சித்தாந்த காவலர்களை உருவாக்கிக் கொடுக்கிறது. இப்படியாக முதலாளித்துவம் தனது ஆட்சியதிகாரத்தை நீடிக்கவும், பொருள் உற்பத்தி உறவுகளை மீளாக்கம் செய்யும் கருத்துலக நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது.

சரிந்து போன சோசலிச சர்வாதிகார உலகம் ‘அரச சித்தாந்தம்’ என்ற பெயரில் கருத்தாதிக்கம் வாயிலாகவே மக்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்த முனைந்தது. மார்க்சீய மரபுவாதத்தை மெய்யுண்மைத் தத்துவமாகச் சித்தரித்து ஆட்சியதிகாரத்தை மக்கள்மீது திணித்து. இன்றைய மூன்றாம் உலகத்திலும் அரசுகள், கருத்துத் திணிப்பை அடக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. மேற்குலக ‘சனநாயக’ பாரம்பரியத்தையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையையும் தழுவிக்கொண்டுள்ள இந்தியா, சிறீலங்கா போன்ற நாடுகளிலும் இதே நிலைமையைக் காணலாம்.

இந்தியாவில் பிராமணிய கருத்துலகம் மேலாண்மை பெற்றுநிற்கிறது. பாரதபூமியில் ஆரியர் பாதங்களைப் பதித்த யுகத்திலிருந்து, வேதங்கள் என்றும் இதிகாசம் என்றும் மனுநீதி சாஸ்திரங்கள் என்றும், மனித தர்மங்கள் என்றும் பார்ப்பனியம் படைத்துவிட்ட கருத்துலகம் பூதாகாரமாக வளர்ந்து, ஆழ வேரோடி அரசியல் கிளை பரப்பி, ஒரு இந்து சாம்ராஜியமாக இன்று மேலோங்கி நிற்கிறது. பஞ்சம், பட்டினிச்சாவு, ஏழ்மை, வறுமை, அநீதி, அடக்குமுறை இரத்தை உறுஞ்சும் சுரண்டல்முறை, எல்லாவாற்றையும் ஏற்புடையதாக, இயல்பானதாக, சாதாரண வாழ்வின் சாதாரண நிகழ்வாக, முற்பிறவி விளைவாக, பிரம்மலோக தர்மமாக நியயப்படுத்தலை மாபெரும் கருத்தாதிக்க சக்தியாக பிராமணியம் செயல்படுகிறது. துறவிகளின் ஆச்சிரமத்திலிருந்து சினிமா உலகம்வரை, பத்திரிகைத்துறையிலிருந்து பல்கலைக்கழகம் வரை, எல்லாவிதமான கருத்து உற்பத்தி நிறுவனங்களிலும் பார்ப்பானிய ஆதிக்கம் ஊடுருவிநின்று பரந்துபட்ட இந்திய வெகுசனம் மீது மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மேலாதிக்க கருத்துநிலையானது, இந்திய மேல்தட்டுவர்க்க சக்திகளின் அதிகார உறவுகளுடன் ஒன்றிணைந்ததாக பிராமணிய ஆட்சியமைப்பு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தப் பிராமணிய மேலாண்மை ((HEGE MONY) இந்திய தேசிய இனங்களின் தேசியவாத கருத்தோட்டங்களையும் படிப்படியாக ஏப்பம் விட்டுவருகிறது.

கருத்துலகமானது மார்சீய மரபுவாதிகள் கருதியதுபோல பொருளாதார அடித்தளத்திலிருந்து மேலெழும் பிரதிபிம்பங்கள் அல்ல, அன்றி ‘பனிமூட்டம்’ போன்ற பொய்யான கற்பனாவாத பிரமைகளும் அல்ல. கருத்துலகமானது மனித வாழ்வையும் சமூக இயக்கத்தையும் நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் சக்தி, கிராம்ஸி என்ற தத்துவ அறிஞன் கூறியதுபோல, ‘ஒரு பொருளாதார வரலாற்று சக்தி’ சமூக மாற்றத்தை ஏற்படுத்தவல்ல சக்தி.

பொருளாதார கட்டுமானத்தின் மீது கருத்துலகம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றும் பொருள் உற்பத்தி உறவுகளில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்து சமூகமாற்றம் ஏற்படும் பொழுது கருத்துலகிலும் தன்னிச்சையாகவே மாற்றங்கள் ஏற்படுமெனவும் மரபுவாத மார்க்சீயம் கருதியது. இது ஒரு தவறான கண்ணோட்டம் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

கருத்துலகமானது சமூகஉலகத்தின் ஒரு உலகமாக, சமூக வாழ்வியக்கத்துடன் பின்னிப்பிணைந்து இயங்கியபோது, அதற்கொரு தனித்துவமுண்டு. தன்னியல்பான வாழ்வுண்டு. பொருளாதார மாற்றங்களினால் கருத்துநிலையில் தன்னிச்சையாக மாற்றம் நிகழ்வதில்லை.

கருத்துலக மாற்றம் கருத்துப் புரட்சியால் ஏற்படுகிறது. கருத்துப் போராட்டத்தால் நிகழ்கிறது. ஆழமான விழிப்புணர்வால் ஏற்படுகிறது. பழைய கருத்துகளுக்குப் பதிலாக புதிய கருத்துக்களை திணிக்க முயல்வது கருத்துப்புரட்சி ஆகாது. அது கருத்துலக மாற்றத்தை கொண்டுவரப் போவதில்லை. சீனக் கலாச்சாரப் புரட்சி கருத்துலகை மாற்றவில்லை. எதிர்ப்புணர்வையே தோற்றுவித்தது.

புதிய கருத்துக்கள், புரட்சிகரமான கருத்துக்கள் மக்களின் மனதைப் பற்றிக்கொள்ளும் பொழுதே கருத்து மாற்றம் நிகழ்கிறது. அந்தக் கருத்துகள், மக்களின் மண்ணுக்கு நீர்ப்பாச்சி, அவர்களின் வரலாற்று வேருக்கு உரமூட்டி, அவர்களின் சமூக பண்பாட்டு வாழ்வை மேம்படுத்தி, ஒளிமயமான எதிர்காலத்தை குறியிட்டுக் காட்டுவதாக அமையும் பொழுதே அவை மக்களைப் பற்றிக் கொள்கின்றன.