புகலிடம் கோரிய ஈழப்பெண்ணின் வழக்கு தவறாக கையாளப்பட்டுள்ளது – அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிக் குடியேறிய சிறிலங்காப் பெண்மணியான றஞ்சினி தொடர்பில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பால் வழங்கப்பட்ட எதிர்மறையான பாதுகாப்பு மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் இந்த வழக்கை மிகவும் பிழையான முறையில் கையாண்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.Ranjini has been held in immigration detention

சிறிலங்காவைச் சேர்ந்த றஞ்சினி என்கின்ற இந்தப் பெண் 2010ல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியா தனது நாட்டின் அகதி நிலையை வழங்கிய போது இவர் மெல்பேர்னில் வசித்தார். இவர் அப்போது கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் றஞ்சினி தொடர்பான பாதுகாப்பு மதிப்பீடுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் காரணங்காட்டி இவரும் இவருடன் ஒன்பது மற்றும் ஏழு வயதுகளை அடைந்திருந்த இவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டு விமானம் மூலம் சிட்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு வில்லாவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

சிட்னியில் றஞ்சினி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவர் தனது மூன்றாவது மகனைப் பெற்றெடுத்தார். தற்போது றஞ்சினியும் இவரது மூன்று மகன்களும் குடிவரவுத் தடுப்பு முகாமிலேயே வாழ்கின்றனர். பாதுகாப்பு மதிப்பீடுகள் மிகவும் பிழையாக மேற்கொள்ளப்பட்ட அகதிகளைத் தொடர்ந்தும் காலவரையறையின்றி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட முடியுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்தவொரு தீர்ப்பையும் முன்வைக்கவில்லை. ஆனால் றஞ்சினி தொடர்பான வழக்கில் பிழையிருப்பதாகவும், இவருக்கு நுழைவிசைவு வழங்குவதில் குடிவரவு அமைச்சர் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நுழைவிசைவை வழங்கத் தவறியதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள றஞ்சினி பாதுகாப்பு நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பது தொடர்பில் தீர்மானிப்பதில் குடிவரவு அமைச்சர் தவறிழைத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் றஞ்சினி தொடர்பான வழக்கானது யூலையில் ஆராயப்பட்டது. ஆனால் தற்போதைய குடிவரவு அமைச்சரான ஸ்கொற் மொறிசன் இந்த வழக்கை மீள ஆராய வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்தக் கட்டளையைத் தான் கவனத்திற் கொண்டுள்ளதாக திரு.மொறிசன் தெரிவித்துள்ளார்.

றஞ்சினி, சிறிலங்காவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் புலிகள் அமைப்பில் கடமையாற்றி மரணித்த ஒரு மூத்த உறுப்பினரின் மனைவியாவார். இவர் தனது சிறிய வயதில் புலிகள் அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பால் இவர் தொடர்பில் ஏன் இவ்வாறான மிகவும் மோசமான பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டது என்பதைத் தன்னால் கண்டறிய முடியவில்லை எனவும் றஞ்சினி கூறுகிறார்.

றஞ்சினி தற்போது ஒரு புகலிடக் கோரிக்கையாளராக உள்ளார். இவரால் சிறிலங்காவுக்கு மீண்டும் செல்லமுடியாது. அத்துடன் இவரைப் பொறுப்பெடுக்கக் கூடிய மூன்றாவது நாடொன்றையும் இவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. றஞ்சினி தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பிப்தற்கான அனுமதியைத் தரவேண்டும் எனவும், இவர் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு இவரது குடும்பத்தவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான அனுமதியையும் வழங்கவேண்டும் என றஞ்சினி சார்பாக வாதிடும் சட்டவாளரான டேவிட் மனே அவுஸ்திரேலியாவைத் தற்போது ஆளும் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

றஞ்சினி போன்று மேலும் 50 வரையான புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் மோசமான பாதுகாப்பு மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் காலவரையறையின்றி அவுஸ்திரேலியத் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

நித்தியபாரதி

செய்தி வழிமூலம் : Error made in case of Sri Lankan refugee Ranjini by Immigration Department, High Court rules[ ABC ][ Dec 12 17:51 GMT ]

Advertisements