சர்வதேசத்தின் கருணைக்காக காத்திருக்கும் ஏக்கநிலை

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலத் துன்பங்களுக்கும் நிறைவேறாத நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கும் விடிவு காலம் பிறப்பதற்கு தற்போதுள்ள ஒரேயொரு நம்பிக்கையாக சர்வதேசத்தின் அபயக்கரமே தெரிவாக இருக்கின்றது என்பதை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன.jaffna_channel 4 media

வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோது வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட மாகாண சபைத் திட்டத்திற்கு அரசாங்கங்கள் முக்கியத்துவத்தை அளிக்காமல் கொச்சைப்படுத்தியிருக்கின்றன என்பதையும் மக்களின் எதிர்பார்ப்புகள், நலன்கள் எவையும் கருத்தில் கொள்ளப்படாத போக்கு தொடர்வதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாகாண சபை முறைமையானது அதிகாரப் பகிர்விற்கான திட்டமென்ற அடையாளத்தை மட்டுமே கொண்டிருப்பதாகவும் நடைமுறையில் மத்தியில் அதிகாரத்தை பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்பதையும் நீதியரசர் வெளிப்படுத்தியிருப்பதுடன் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரின் அனுமதியின்றி எந்தவொரு நியமனமும் இடம்பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது மட்டுமன்றி தொடர்ந்து துன்பங்களையும் அவலங்களையும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சுமத்தி வருகின்றன என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், வடக்கில் புதிதாக அமைக்கப்பட்ட மாகாண சபை முறையாக இயங்குவதற்கு இடையூறான விடயங்களையும் அரசாங்க தரப்பின் முட்டுக்கட்டைகளையும் வெளிப்படுத்தியிருப்பதுடன் வட பகுதி மக்களுக்கு சுபிட்சத்தை ஏற்படுத்துவதுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டங்களையும் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளையும் பற்றி கோடிட்டுக் காட்டுவதாக அவரின் வரவு செலவுத் திட்ட உரை அமைந்திருக்கின்றது.

வடக்கு மாகாண நிர்வாகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் உடனடித் தேவைகள், நீண்டகால மேம்பாட்டுக்கான செயற்திட்டங்கள், நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகள் பற்றித் தெளிவாக முன்னிலைப்படுத்தியுள்ள அவர் இராணுவத்தை வட மாகாணத்தில் நிலைநிறுத்தி வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இயலாதிருப்பதாகவும் போர் முடிந்து 5 வருடங்களாகியும் வடக்கில் இராணுவ உதவியுடன் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் வட, கிழக்கு மக்களை தமிழ் பேசும் மக்கள் என்று அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசனத்தை வெளிப்படுத்தியிருப்பதை காண முடிகிறது.

இந்தச் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியையே நாடியிருப்பதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். வட, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துகளை அறிய சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண சபைக்கான அரசின் ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ள நிலையில் வெளிநாடுகளிலுள்ள நலன் விரும்பிகளும் உலக நாடுகளும் உதவ வேண்டும் என்பதும் அண்மைக்காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாடுகளின் தலைவர்கள் வட, கிழக்குக்குப் போதிய அதிகாரப் பரவலாக்கலின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருந்ததை ஞாபகப்படுத்தியும் சர்வதேசத்தின் அபயக்கரமே தற்போது ஒரேயொரு நம்பிக்கைக் கீற்றாக உள்ளது என்ற கருத்து முதலமைச்சரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

சிறுபான்மைத் தமிழ் பேசும் சமூகங்களின் இன, மத, கலாசார தனித்துவங்களுக்கு மதிப்பளித்து அவர்களை சமத்துவமான பிரஜைகளாக நடத்தும் மனப்பக்குவமும் ஜனநாயக தார்மீகப் பண்பும் தொடர்ந்தும் வரண்டிருப்பதே சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் சகலவற்றுக்கும் சர்வதேசத்தை எதிர்பார்க்கும் அவலநிலைக்குக் காரணமாக தோன்றுகிறது. முழு நாட்டிற்குமே நன்மை பயக்கும் விதத்தில் வட மாகாண முதலமைச்சர் நீட்டியுள்ள ஒத்துழைப்புக்கரத்தை பற்றிப் பிடிக்கும் இதயசுத்தியுடனான செயற்பாடுகள் கொழும்பிலிருந்து முன்னெடுக்கப்படாதவரை இந்நாட்டுப் பிரஜைகளான தமிழ் பேசும் மக்கள் சர்வதேச சமூகத்தின் கருணையையே எதிர்பார்த்திருப்பதைத் தவிர மீட்சிக்கான வேறு மார்க்கம் தென்படவில்லை என்பதையே வடக்கு முதல்வரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம் உலக நாடுகளின் உதவியும் பூகோள, அரசியல் நலன்களின் அளவு கோலை அடிப்படையாகக் கொண்டவை என்பதே யதார்த்தம்.

தினக்குரல்

Advertisements