தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா இராணுவத்தை பலப்படுத்திய அமெரிக்கா

இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.obama vs mahinda

ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, “வானவில்” என்ற அர்த்தத்தைக் கொண்ட தேதுன்ன சிங்கள செய்திதாளின் ஆசிரியர் ரோஹித்த பாஷன சாட்சியம் அளித்தார்.

அப்போது இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் தொடர்பு இருந்ததாக குற்றம் சுமத்தினார். இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை ராணுவத்தினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் வழங்கல் பதையை முடக்குவதில் முக்கிய பங்குவகித்த அமெரிக்கா சிறீலங்கா இராணுவத்தை களமுனையிலும் பலப்படுத்திய நடவடிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் பலமான சிறீலங்கா படையினரை சந்திக்க நேரும் என போர் ஆரம்பமாகிய 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் மக்களை எச்சரித்திருந்ததும் நாம் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

கொடையாளி நாடுகள் என்ற போர்வையில் யப்பானின் உதவியுடன் உள்நுளைந்த மேற்குலகம் தமிழ் மக்களின் படைபலத்தை அழித்து சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கு உதவிய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனங்களில் அதிக வேதனையை தோற்றுவித்துள்ளது.

மக்கள் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று சர்வதேச மனித உரிமை தினத்தன்று தீர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த தீர்ப்பை 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்க உள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்றுவருவது ஒரு இனப்படுகொலை என இந்த தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும், அவ்வாறு வழங்கப்பட்டால் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் இனஅழிப்பு அனைத்துலக மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறான ஒரு நிலை உருவாகினால், சிறீலங்கா மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான அனைத்துலக விசாரணை மற்றும் நீதி என்பவற்றுடன், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுதல் மற்றும் தமிழ் இனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளின் அடுத்த அரசியல் நகர்வை மேற்கொள்ள முடியும். ஒரு இனப்படுகொலை நிகழும் நாட்டில் தான் அதில் பாதிக்கப்படும் மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை கோருவது அனுகூலமானது.

*

சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது

ஜேர்மனியில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பாய விசாரணையில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பை மேற்கொண்டது தெளிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு பாரிய அளவில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதை உறுதிப்படுதியுள்ள இத்தாலியின் தலைநகரை தலமையகமாகக் கொண்ட இந்த அனைத்துலக விசாரணை அமைப்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு உதவியதாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட பேர்மன் அனைத்துலக மனித உரிமை அமைப்பு மற்றும் சிறீலங்காவில் சமாதானத்திற்கான பேரவை போன்றவை இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்(Crime Against Humanity) ஆகும். எனவே இதன்வழி சிறீலங்கா அரசு இனப்படுகொலை(Genocidal Crime) குற்றவாளியாகிறது.

தீர்ப்பு:

1) சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிறீலங்கா அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) விடுதலைப்புலிகள் அமைப்பை முழுமையாக தீவிரவாத அமைப்பாக கருதமுடியாது.

ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும்(பிரித்தானியா) இனவழிப்பில் தொடர்புபட்டிருந்தன. பிரித்தானியா ஆயுதங்களை வழங்கி சிறீலங்கா அரசை பலப்படுத்தியிருந்தது, அமெரிக்கா சமாதான காலத்தில் உள்நுளைந்து இரு தரப்பினருக்கும் இடையில் இருந்த சமநிலையை சிறீலங்கா அரசுக்கு சார்பாக மாற்றியிருந்தது.இந்தியாவின் பங்கு பற்றி மேலும் விரிவான விசாரணை தேவை.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத் தமிழர்கழைப் பாதுகாக்கத் தவறியது. ஐநா அவையும் இனவழிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

பிரித்தனியவைத் தளமாகக் கொண்ட சனல் போர் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கலம் மக்ரே உட்பட பல அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலகின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரசு அந்த நட்டு மக்கள் மீதே(ஈழத்தமிழர்கள்) ஒரு இனவழிப்பை செய்தது என்பதைப் புரிந்து கொண்டோம். 1948ஆம் ஆண்டு இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தமது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டன. எனவே சிறீலங்கா அரசிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வு. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும் என பேராசிரியர் பிரான்சில் ஏ போயில் (Professor Francis A. Boyle) முன்பு தெரிவித்திருந்ததும் நாம் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

http://www.ptsrilanka.org/

**

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் – குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது.
இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10ம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

2010 ஆண்டு ஜனவரி 14, 16 தேதிகளில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில், சிங்கள அரசாங்கம் நடத்திய போர் நடவடிக்கை குறித்து, மக்களுக்கான நிரந்தரத் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு நடைபெற்றது.

அந்த அமர்வில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் விசாரணை நீதிபதிகளில் ஒருவராக பங்கேற்றார். அந்த முதல் அமர்வில் சிங்கள அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற இரு அம்சங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு அடுத்த அமர்வில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 2013 டிசம்பர் 7, 8, 9,10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது.

சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு, இலட்சக் கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர்.

இனக்கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்துகளையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இதுகுறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிட்டது.

(1) ஈழத் தமிழர்களை தனித் தனியாக கொலை செய்யாமல், தமிழர் இனம் என்ற அடிப்படையில் அந்த சமூகத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசு படுகொலையை நடத்தியுள்ளது.

(2) புலிகளோடு சிங்கள அரசு நடத்திய யுத்தத்துக்கு முன்பாகவே, நீண்ட காலமாக தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தி வந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரும் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

(3) உலக நாடுகளின் உதவி இல்லாமல், இந்த இனப்படுகொலை யுத்தத்தை இலங்கை அரசு செய்திருக்க முடியாது. இலங்கை அரசுக்கு, இங்கிலாந்து அரசு ஆயுத உதவி செய்ததோடு, இனக்கொலை நடத்திய சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசு இனக்கொலை நடத்துவதற்கான இராணுவ பலத்தை கொடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு இராணுவ உதவி செய்திருக்கிறது.

அமைதிக்கான பேச்சு வார்த்தை நடவடிக்கைகளின் போது அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதால், 2009 இல் தமிழர்களின் பேரழிவுக்கு அது வழி வகுத்தது.

இந்தத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கு குறித்து வலுவான சாட்சியங்களையும் ஆவண ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், அதனைக் குறித்து முடிவை தீர்ப்பாயம் தெரிவிக்கும். ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் ஈழத் தமிழர் இனப்படுகொலை உண்மையை உலகத்துக்கு அறிவித்துவிட்டது.

இதுவரை போர்க்குற்றம் என்று சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகம் சிங்கள அரசின் கொடிய குற்றத்தை சற்று நீர்த்துப்போக வைக்கின்ற முயற்சி என்றே கருதி தொடக்கத்திலிருந்தே நடந்தது இனப்படுகொலை என்பதனை நாம் அழுத்தமாக வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

இந்த விசாரணையின் போது விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? என்ற கருத்து விவாதிக்கப்பட்ட போது, “இது மேல்நாட்டு அரசாங்கங்களால் தங்களுடைய அரசியல் பூகோள நலன்களுக்காக உரிமைக்குப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டாகும் என்று மியன்மார் தேசத்தின் ஜனநாயகப் போராளி மவுங் ஜார்னி தெரிவித்தார்.

அப்படிப் பார்த்தால், நெல்சன் மண்டேலாவும் ஒரு காலத்தில் பயங்கரவாதிதான். ஆனால், அவர் விடுதலைப் போராளி என்று உலகம் போற்றுகிறது. அவர் விடுதலைப் போராளி என்றால், விடுதலைப்புலிகள் இயக்கமும் விடுதலைப் போராளி இயக்கம்தான் என்பதனை தீர்ப்பாயம் அந்த விவாதத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியதோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு தன் கடமையில் தவறியது என்றும், சர்வதேச சமுதாயமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது என்றும் டென்னிஸ் ஹாலிடே குற்றம் சாட்டினார்.

ஜெர்மனி தீர்ப்பாய விசாரணையில், உலகம் எல்லாம் உள்ள தமிழர்களின் ரணமாகிப் போன இதயங்களுக்கு மருந்து போடுவது போல தீர்ப்பாயம் “ஈழத் தமிழர்கள்” என்றே இலங்கைத் தீவின் தமிழர்களை குறிப்பிட்டது ஆறுதலையும் ஈழ விடியல் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாள், ஐ.நா. சபை கடைபிடிக்கின்ற உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 என்பது மடிந்த மாவீரர்களின் மகத்தான தியாகத்தால் விளைந்துள்ள சத்தியத்தின் வெற்றியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements