அடுத்த ஆண்டிலாவது மனித உரிமைகள் சாத்தியமாகுமா?

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தத் தினம் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.jaffna_protestors_004

இந்த உலகில் பிறந்த அனைவரும் சகல உரிமைகளையும் பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஐக்கியநாடுகள் சபை டிசெம்பர் 10 ஆம் திகதியாகிய இன்றைய தினத்தை சர்வதேச மனித உரிமைகள் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனால் உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் தமது உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழ்கின்ற நிலை இன்னமும் உருவாகாமல் இருப்பது கவலையும், வேதனையும் தருகின்றது.

இந்த நவீன விஞ்ஞான உலகில் கூட நாடு, இனம், மொழி, சாதி, மதம், அந்தஸ்து ஆகிய காரணங்கள் கூறப்பட்டு ஒரு பகுதி மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் இடர்களுக்குள் தள்ளப்படும் நிலை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மனித உரிமைகள் தொடர்பாக கூறுவதிலும், ஆண்டுதோறும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதிலும் அர்த்தமே இல்லை. அதிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இதனைப் பிரகடனம் செய்வதற்கும், கொண்டாடு வதற்கும் தகுதியுள்ளதா என்ற வினாவும் கூடவே எழுகின்றது.

இனப்படுகொலைக்கு சர்வதேசம் உதவியது

எமது நாட்டிலே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின்போது ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத நிலை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. தமிழ் மக்களைப் புலிகளிடமிருந்து மீட்பதற்கான இறுதிப் போர் என்ற கவர்ச்சியான கோசத்தை உரக்கக் கூறியவாறு இலங்கையரசு இந்தப் போரை முன்னெடுத்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இந்தப் போர் இடம்பெறுவதாக நம்ப வைக்கப்பட்ட உலக நாடுகள் பல இலங்கை அரசுக்குச் சகல வகையிலும் உதவிகளை அள்ளி வழங்கின. குறிப்பாக இலங்கையின் ஆத்ம நண்பர்களான சீனா, பாகிஸ்தான் என்பன வெளிப்படையாகவே இராணுவ உதவிகளை வழங்கின.

புலிகள் மீது வஞ்சகம் தீர்ப்பதற்குக் காத்திருந்த இந்தியா, தக்க தருணம் இது தான் என்பதை உணர்ந்து சகல வகையிலும் உதவிகளை அள்ளி வழங்கியது. ஆனால் போர் இடம்பெற்ற பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களைப் பற்றிய சிந்தனை ஐ.நாவிடமோ அல்லது இந்த நாடுகளிடமோ துளியும் இருக்கவில்லை. இலங்கையரசு எந்தவிதமான நெருக்குதல்களும் இல்லாத நிலையில் போரைத் தீவிர மாக நடத்தியது. இதில் சிக்குண்டு தவித்தவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களின் உயிர்கள் மீது எந்தவித கருணையும் காட்டப்படவில்லை.

இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் தமது அங்கங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகினர். தமிழர்களின் சொத்துக்கள் யாவும் அழிக்கப்பட்டன. ஒரு நாடு வேறொரு நாட்டின் மீது மேற் கொண்ட யுத்தமொன்றை ஒத்ததாக இந்த இறுதிப் போர் காணப்பட்டது.

கலிங்க தேசத்தின் மீது மாமன்னன் அசோகன் படையயடுத்து அங்கு பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவற்றைக் கண்டு மனம் வருந்தி அரச போகத்தைத் துறந்து பெளத்த மதத்தைத் தழுவிக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது. ஆனால் இந்த பெளத்த தேசத்திலேயே வரலாறு காணாத போர் அழிவுகள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட் டன.

காலம் கடந்த ஞானம்

போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நாவின் ஏற்பாட்டின் பிரகாரமெனக் கூறப்பட்டு இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடிகளுடன் சரணடையச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த உலகமே அறியும். தமிழ்ப் பெண்கள் பலருக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த நிலையில் இறுதிப் போரின் போது ஐ.நா.தவறு இழைத்து விட்டதாக அதன் செயலாளர் நாயகம் வெட்கமின்றி காலம் தாழ்த்திக் கூறுகின்றார். இதன் பின்னரும் அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டிருப்பதற்கான தார்மீக உரிமைகள் எதுவும் அவருக்கில்லை. ஆனால் இது தொடர்பாக உலக நாடுகள் வாயே திறப்பதில்லை. இந்த நிலையில் மனித உரி மைகள் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கான தகுதி கூட ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும், உலக நாடுகளுக்கும் இல்லையயன அடித்துக் கூறலாம்.

இலங்கைத் தமிழரை மனிதராகப் பார்க்கவில்லை

இலங்கையில் வாழுகின்ற தமிழர் சமூகத்தை மனிதர்கள் என்ற வரிசையில் வைத்துப் பார்ப்பதற்கு ஐ.நா. விரும்பவில்லையா என்ற பிறிதொரு கேள்வியும் கூடவே எழுகின்றது. சர்வதேச நாடுகளின் பொது அமைப்பாக விளங்கும் ஐ.நா.சபை பெருமளவு நிதியை அதன் நிர்வாகச் செலவுகளுக்கென்றே விழுங்கி வருகின்றது. அதன் தற் போதைய செயலாளர் நாயகம் செயல் திறனற்ற ஒருவராகக் கணிக்கப்படுகின்றார். இலங்கை விடயத்தில் இதனை அவர் நிரூபித்துள்ளார்.

இவரது பதவிக் காலத்தில் இலங்கைத் தமிழர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைக ளுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறவே தகர்ந்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாகக் கூறிக்கொள்ளும் ஐ.நா. முதலில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை விடுத்து வெறும் கோசங்களை எழுப்புவதால் பயனெதுவும் கிடைக்கப் போவதில்லை.

கைப் பொம்மையாகிய ஐ.நா

மேலும் பெரிய நாடுகளின் கைம்பொம் மையாக ஐ.நா.செயற்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிறிய நாடுகள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகின்றன. இன்று உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவில் பெரு மளவு மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருகின்றன.

குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் இந்திய இராணுவத் தினரால் பல்வேறு வகையிலும் துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். ஆனால் ஐ.நா.வோ அல்லது வேறு பெரிய நாடுகளோ இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் மெளனமாக இருக்கின்றன. இதைப்போன்றுதான் இந்தியாவின் வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடுகின்றோம் எனக் கூறிக் கொண்டு இராணு வத்தினரும் பொலிஸாரும் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். இதுவும் கவனிக்கப்படாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.

தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை

இலங்கை விடயத்தில் கூட பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதில் இந்தியா முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. போர்க்குற்றத்தில் தன்னையும் இணைத்து விடுவார்களோ என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். ஏனென்றால் இறுதிப்போர்க் குற்றவாளிகளில் இந்தியா முதன்மையானது என்பது உலகறிந்த விடயம்.

எனவே ஆண்டுதோறும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடுவதாக நாம் எம்மையே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விடுத்து இதயபூர்வமாக இதனை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்தல் வேண்டும். இதில் ஐ.நாவின் பங்கு கணிசமானது. அதன் செயலாளர் நாயகம் முயன்றால் இதன் சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும்.

ஆகவே அடுத்த ஆண்டாவது உண்மையாகவே உலகில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமையைப் பெற்றுள்ளனர் என்ற செய்தியை ஐ.நா. இந்தத் தினத்தில் வெளியிட வேண்டும். இதற்காகவே இந்த உலகத்தில் பல்வேறு வகையிலும் உரிமைகளை இழந்து தவிக்கும் மக்கள் காத்திருக்கின்றார்கள்.

Advertisements