தமிழீழம் போர்க்குரல் எழுப்புகின்றது. தமிழகம் பொங்கி எழுகின்றது. புலம்பெயர் தமிழினம் என்ன செய்யப்போகின்றது?

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் ஈழத் திசையெங்கும் போர்க் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

முள்ளிவாய்க்காலில் பேரழிவு… முள்வேலி முகாம்களுக்குள் சித்திரவதைகள், புனர்வாழ்வு மையங்களில் அவமானங்கள் என்று உலகின் எந்த இனமும் கண்டிராத அத்தனை கொடுமைகளும் தமிழினத்தை அடிபணிவு வாழ்வுக்குள் நிரந்தரமாக்கிவிடும் என்ற சிங்கள எதிர்பார்ப்பு மீண்டும் பொய்த்துவிட்டது.
வெறுமனே, சின்னஞ்சிறு இலங்கைத் தீவிற்குள் தமக்கான நியாயங்களுக்காகப் போராடிய தமிழினம்மீது சிங்களத்தின் கோரப் பற்கள் பதிவு செய்த காயங்கள் சில நூறு போராளிகிளக் களத்தில் இறக்கியது. சிங்கள தேசம் தன் ஆயுதங்களின்மீது வைத்திருந்த நம்பிக்கையை தமிழீழ மக்களின் நியாயங்களின்மீது வைக்கவில்லை. அதனால், ஈழப் போராட்டம் வேகம் கொண்டது. முள்ளிவாய்க்கால் வரையான சிங்களக் கொடூரங்கள் விடுதலைப் புலிகளது ஆயுதத்தை மௌனிக்க வைத்ததே ஒழிய, தமிழீழ மக்களது இலட்சியத்தை நிர்மூலமாக்கிவிடவில்லை.jaffna_protestors_003

ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்றுவிட முடிந்த சிங்கள ஆட்சியாளர்களால், இத்தனை விரைவாகத் தமிழீழம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்தும் இருக்க முடியாது. வெற்றிக் கொண்டாட்டங்களால் நிமிர்ந்து நின்ற சிங்களப் பேரினவாதத்திற்கு இத்தனை விரைவாக இழவுச் செய்திகள் வந்து சேரும் என்று இந்திய அரசு கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஈழத் தமிழா… எழுந்தே நில் என்று தமிழகம் போர்க் குரல் எழுப்புகின்றது. உலகத் தமிழினம் தாம் வாழும் நாடுகளை வசியப்படுத்துகின்றது. ஈழத் தமிழன் நாதியற்றவனா… சிங்களக் கோரப் பசிக்கு இன்னமும் இரையாவதற்கு…? பத்துக்கோடி தமிழர்களும் பார்த்துக்கொண்டா இருப்பார்கள் சிங்களக் கொடூரங்களை? இது புலிகளின் காலம்… தமிழீழம் பிறக்கும்வரை அது முடிவுக்கு வராது, என்பதை அறைகூவி நிற்கிறது.

விடுதலைப் போரில் விதைக்கப்பட்டவர்களும், சிங்களக் கொடூரங்களால் வீழ்த்தப்பட்டவர்களும் நெருப்பாக மாறி, தம்மனை தமிழர்களினதும் மூச்சாக நிலைபெற்றுவிட்டார்கள். அதனால்தான், உலகப் பரப்பெங்கும் ஈழத்தின் அவலங்கள் பேசு பொருளாகிவிட்டது. காலம், ஒருமுறை கைநழுவிப் போனதால், கோரமாக நாம் கொலையுண்டு போனோம். ஆனாலும், தமிழீழம் தோற்றுப் போகவில்லை. அதனால்தான், இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழீழ மண்ணில் புலிக்கொடி பறக்கவிடப்படுகின்றது. மாவீரர் தீபம் ஏற்றப்படுகின்றது. சிங்களத்துப் பாராளுமன்றத்தில் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று உரத்து முழங்க முடிகின்றது. சிங்களப் படைகள் சூழ்ந்து நிற்க, சிங்கக் கொடியை ஏற்ற மாட்டேன் என்று திமிருடன் கூற முடிகின்றது. முன்னைய காலங்கள் என்றால், இவர்கள் முதல்நாள் இரவே காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள். மறுநாள், வீதிகளில் உடலங்களாக வீசப்பட்டிருப்பார்கள். ரவிராஜ்ஜுக்கும், மகேஸ்ரனுக்கும் நடந்தது, இவர்களுக்கும் நடாத்தப்பட்டிருக்கும். இப்போது முடியாது… இனிமேலும் முடியாது… ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லை வைத்து உலகைத் தவறாகப் பயன்படுத்திய சிங்களம், நீதியின் முன்னால் அம்மணமாக அச்சப்பட்டு நிற்கின்றது.

சிங்களத்துக் கொடூரங்களை மறைப்பதற்கும், சிங்களத்தைக் காப்பாற்றுவதற்கும் இனி, இந்தியாவாலும் முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நடந்து முடிந்த ஐந்து சட்டசபைத் தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி வாங்கிய அடிகள், இன்னமும் சில மாதங்களில் இந்திய மத்திய ஆட்சியில் மீண்டும் அமர அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றது. இது, நீதிக்கான காலம்… அதனால், இந்தியாவில் பாவிகளின் கூடாரமான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மெறிசியர்ஸ்… என நீதிக்கான அணிகள் நீண்டு செல்கின்றன. எங்களுக்காக உலகப் பரப்பெங்கும் ‘சனல் 4’ சிங்களத்தின் போர்க் குற்ற ஆதாரங்களை எடுத்துச் சொல்கின்றது. ஜெனிவாவைக் குறி வைத்து சிங்கள ஆட்சியாளர்களும் புதிய அரிதாரம் பூசிக் கொள்கின்றார்கள். தமிழீழம் போர்க் குரல் எழுப்புகின்றது. தமிழகம் பொங்கி எழுகின்றது.

புலம்பெயர் தமிழினம் என்ன செய்யப்போகின்றது என்பதில்தான் எங்கள் தேசத்தின் தலைவிதியே உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அமர்வு, தமிழினத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டுமானால், புலம்பெயர் தமிழர்களாகிய நாம் ஒரு ஊழிப் பேரலையாக மாறவேண்டும். எமக்கான நீதியைக் கேட்டு, உலகப் பெருமன்றத்தின் கதவினை ஓங்கித் தட்ட வேண்டும்!

– இசைப்பிரியா