சுதந்திரத் தமிழீழத்தில் வாழவே ஆசைப்படுகின்றோம். மாவீரர்தினம் உலகிற்குச் சொல்லும் செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர் ஐந்தாவது மாவீரர் தினம் கடந்த 27 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவீரர் தின அனுஸ்டிப்பானது தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எக்காலத்திலும் எவராலும் அடக்க முடியாது என்ற பேருண்மையை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.

tamilnadu_maveerar_day_009இலட்சக்கணக்கான படையினரின் ஆதிக்கத்திற்கும் படைப் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கும் மத்தியில் இந்த வருடம் மாவீரர் தினம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களின் அடங்காப் பற்றைப் பறைசாற்றுகின்றது. உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத விடுதலை உணர்வு தமிழினத்திற்கு உள்ளமையை இது எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட பின்னர் ஐந்தாவது தமிழீழத் தேசிய மாவீரர் தினமும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமும் கடந்த 26, 27 ஆம் திகதிகளில் தமிழர் தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த வருடங்களை விட முற்றிலும் மாறுபட்ட சூழலிலும் மாறுபட்ட விதமாகவும் இந்தக் கொண்டாட்டங்கள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இந்தக் கொண்டாட்டங்கள் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் படைகளுக்கும் பெரும் எரிச்சலையூட்டியுள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளை எக்காலத்திலும் தடுக்க முடியாது என்ற உண்மையை இது மகிந்தவுக்கும் அவரது குழாமுக்கும் எடுத்துச் சொல்லியுள்ளதாக சிறீலங்காவின் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாகாண சபையின் ஆட்சி தமிழர் தரப்பிடம் வந்த பின்னர் அனுஸ்டிக்கப்பட்டதால் இந்தக் கொண்டாட்டங்கள் சிறீலங்கா அரசியலில் மிக முக்கியமான பேசுபொருளாக அமைந்திருந்தன. அதாவது பொதுநலவாய மாநாட்டுக்கு அடுத்ததாகவும் பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் மற்றும் சனல் 4 ஊடகவியலாளர் கொலம் மக்ரேக்கு அடுத்ததாவும் சிறீலங்கா அரசியலை மாவீரர் தினச் செய்திகள் ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றன. அடுத்தடுத்து வந்த கலக்கங்களால் மகிந்த குடும்பமும் படைத் தலைமையும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்துள்ளதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
தமிழீழ தேசிய மாவீரர் தினம் மற்றும் தலைவரின் பிறந்த தினம் என்பவை ஆரம்ப காலத்தில் சிறிய ஒரு தேசத்திற்குள்ளேயே நடைபெற்றன. தமிழ் மக்களும் புலிகளும் எழுச்சியடைய முன்னர் தமிழீழத்தின் ஒருசில மாவட்டங்களில் மட்டும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இதனால் சிறீலங்கா அரசாங்கத்திற்கோ படைகளுக்கோ இது பெரிய விடயமாக இருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்த நிகழ்வுகள் தமிழகத்தையும் புலம்பெயர் தேசத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி சர்வதேச நிகழ்வாக மாறியமையால் அது சிறீலங்கா அரசுக்கு பெரும் பின்னடைவையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

வருடாந்தம் தமிழீழ தேசிய மாவீரர் தினத்தன்று தாயகம் மட்டுமன்றி தமிழகமும் தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர்ந்த தேசங்களும் எழுச்சியடைந்தமையானது புலிகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் தொடர்பிலும் சர்வதேசத்திற்கு இருந்த பார்வையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவீரர் தின நிகழ்வன்று தமிழீழ தேசியத் தலைவரின் உரைக்காக சர்வதேசத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் தாயகத்தை கூர்மையாக அவதானித்துக்கொண்டிருந்த காலம் எமது தமீழத்தின் பொற்காலமாக அமைந்தது.

வருடாந்தம் மாவீரர் தினத்திற்கு அடுத்த நாள் இலண்டன் மாநகரில் ஏற்பாடு
செய்யப்படுகின்ற மாவீரர் தின நிகழ்வுகளில் புலிகளின் மதியுரைஞரும் சர்வதேச இராஜதந்திரியுமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு தேசியத் தலைவரின் உரைக்கு விளக்கமளிப்பதும் அந்த விளக்கத்துக்காக சர்வதேச நாடுகளும் சிறீலங்காவும் வாயைப் பிளந்துகொண்டு காத்திருப்பதும் என்றும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத வரலாற்று உண்மைகள்.

ஆனால், அந்தக் காலங்கள் மீண்டும் திரும்பாதா என்று தமிழீழ மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த போது இந்த வருடம் மாவீரர் தினம் ஒரு சிறு மாற்றங்களுடன் நடந்துள்ளமையானது மிக முக்கியமான திருப்புமுனை என்று அரசியல் அவதானிகள் மதிப்பிட்டிருக்கின்றனர். வடக்கு மாகாண சபைக்கு இடம்பெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்ற கருப்பொருளே கூட்டமைப்புக்கு இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மிக முக்கியமான அரசியல்வாதிகள் தமிழீழ தேசிய மாவீரர் தினம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏற்ற விதத்தில் செயற்பட்டமை தமிழ் மக்களை திருப்தியடைய வைத்திருக்கின்ற அதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தை கிலிகொள்ள வைத்திருக்கின்றது.

மாவீரர் தினத்தன்று மரம் நடுகை செய்ய செய்ய வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் முன்மொழிந்த வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுடன் வடக்கு முதலமைச்சரும் இணைந்து மரம் நடுகையில் ஈடுபட்டமையானது ஏனைய உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் முன்மாதிரியாக அமைந்திருந்தது. மாவீரர் வாரத்தில் தேசியத் தலைவரின் பிறந்த தினத்தன்று இந்த மரம் நடுகை இடம்பெற்ற போது முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் போறோரும் இந்த மாகாண சபையின் உறுப்பினர்களும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் இந்த மரம் நடுகையில் ஈடுபட்டமையானது பொதுமக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றிருந்தது.

மாவீரர் தினத்தன்று இடம்பெற்ற தீபமேற்றல் நிகழ்வுக்கும் இந்த முறை வடக்கு மாகாண சபையே தலைமை தாங்கியமை போன்ற ஒரு தோரணை ஏற்படுத்தப்பட்டது. வடக்கில் தமிழ்த் தலைமையின் நிர்வாக ஆட்சி ஆரம்பமாகியதைத் தொடர்ந்து இந்த முறை மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பார்கள் என்பதை உணர்ந்த சிறீலங்காப் படையினரும் படைப்புலனாய்வாளர்களும் மாவீரர் வாரத்திற்கு முதல் வாரத்திலிருந்தே கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். புலிகளுக்கு தீபமேற்றுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று படைத் தலைமை பகிரங்கமாகவே அறிவித்தல் விடுத்திருந்தது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்காக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தின் அனுசரணையுடன் பல்கலைக்கழகமும் மூடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அத்தனை படையினரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு மாவீரர்களை மனதில் நினைத்துக்கொண்டு மதில்களால் ஏறி உள்நுழைந்த மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தீபமேற்றிவிட்டு அங்கிருந்து பாதுகாப்பாக நகர்ந்து சென்றனர்.

இதனைவிட, யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர்ந்த கட்டடத்தில் தீபமேற்றப்பட்டது. இதற்கு அப்பால் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் தமது வீடுகளில் தீபமேற்றினர். இங்குள்ள சில பொது இடங்களிலும் தீபமேற்றப்பட்டது. வன்னியிலும் உணர்வுபூர்வான தீபமேற்றல்கள் இடம்பெற்றன. திருவையாறு கனகாம்பிகைக்குளத்தில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்துக்கொண்ட இடத்தில் தீபமேற்றப்பட்டது. இதைவிட தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை படையினர் தகர்த்தழித்த போதிலும் அந்த இடத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைக் கற்களை பிரத்தியேகமான ஓரிடத்தில் வைத்துவிட்டு குறிப்பிட்டளவான மக்களும் இளைஞர்களும் இணைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதைவிட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் வன்னியில் பிரத்தியேகமான ஓரிடத்தில் பத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுடன் இணைந்து தீபமேற்றியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்த படையினருக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடக்குமுறைகளுக்கு மத்தியிலிலும் தமிழ் மக்கள் அடங்காத இனமாக முகிழ்த்தெழுகின்றமையானது தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தையே அதுவும் விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழான சுதந்திரத்தையே விரும்புகின்றனர் என்ற செய்தியை மகிந்தவுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பதைப் போன்று மாவீரர் தினத்தன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ‘தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்’ என்று தெரிவித்திருந்தார். அவர் தமிழ் மக்களுக்காக போராடியவர் என்று கூறியிருந்தார். மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கும் மறைந்தவர்களுக்கு தீபமேற்றுவதற்கும் மக்களுக்கு உரிமையிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். சிறிதரனின் இந்த உரையும் தென்னிலங்கையை உலுப்பியிருக்கின்றது.

ஆக, தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் என்றுமே பிரிக்க முடியாது என்ற உண்மையை சிறீலங்கா படைத்தரப்பும் சிறீலங்கா அரசாங்கமும் இதுவரை புரிந்துகொள்ளாவிட்டால் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தனித்தவர்கள் இல்லை. அவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகப் பலமான சக்தியாக இருக்கின்றனர். அதைவிட தமிழக மக்களும் மாணவர்களும் அரசியல்வாதிகளும் பெரும் உறுதுணையாக இருக்கின்றனர். இந்த ஒத்துழைப்புக்களுடன் தங்களுக்கு மிக விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

நாங்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ ஆசைப்படுகின்றோம் என்பதை சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த வருடம் இடம்பெற்ற மாவீரர் தினத்தின்போது தமிழ் மக்கள் தெளிவாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். இதனை தென்னிலங்கை இனியாவது புரிந்துகொள்ளாவிட்டால் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. சர்வதேசத்தின் முதல் காவலனாக விளங்கிய, விளங்குகின்ற பிரித்தானியாவின் அண்மைக்கால நகர்வுகள் ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. இந்த நாடுகள் கூறுகின்ற கருத்துக்களை செவிமடுத்து சிறிலங்கா தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க முன்வராவிட்டால் சர்வதே நாடுகளின் உதவியுடனும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடும் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பதை விட தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை.

நன்றி: ஈழமுரசு

Advertisements