சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடர்பறாமல் முன்னெடுக்கப்படுகின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும்.jaffna_protestors_004

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் ஊடகவியலாளர் Kim Wall* எழுதியுள்ள Tamil Struggle Continues கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்காளர்கள் மீது இராணுவத்தினரின் தலையீடும் சித்திரவதைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இராணுவத்தின் தலையீடுகள் அதிகரித்தன. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்கள் போலிப் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

தேர்தல் இடம்பெற்ற இரவன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒருவர் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் எதிர்வுகூறுவதற்கு விரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதிபலன் கிடைக்கும் என அந்த நபர் தெரிவித்திருந்தார். அழிக்கப்பட்ட வாகனங்கள், மக்கள் துரத்தியடிக்கப்பட்டு, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் ஓய்வுபெற்ற அந்த மனிதர் கூறினார்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியுற்றால் ஏற்கனவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ வன்முறைகள் ஒருபோதும் முடிவுக்கு வராது எனவும் கூறப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றதால் தனது சட்டைப் பையில் வைத்திருந்த உள்ளுர் சாராயப் போத்தலை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியில் எடுத்தவாறு தற்போது இந்த வெற்றியைக் கொண்டாட முடியும் என குறித்த ஓய்வுபெற்ற அந்த மனிதர் தெரிவித்திருந்தார்.

மீண்டும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எல்லா எதிர்ப்புக்களையும் மீறி 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. சுதந்திர தமிழீழத்திற்கான கனவு சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபையில் பெற்றுக்கொண்ட வெற்றியானது இந்த மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு குறுகிய வாய்ப்பாகக் காணப்படுகிறது.

இந்த மக்கள் நீண்ட காலமாக தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது இந்தத் தேர்தலின் பெறுபேறானது இவர்களுக்கான சிறந்த வாய்ப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது இத்தேர்தலில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். இதில் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வெற்றியானது தமிழ் மக்கள் மீளிணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாகக் கருதமுடியும். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளாத மீளிணக்கப்பாடானது தற்போது இத்தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியின் மூலம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

தமிழ் மக்களின் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் ராஜபக்ச அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் ஒரு வன்முறை தோன்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும். “நாட்டில் அமைதியைக் குலைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றால் வன்முறைகள் மிக அதிகளவில் தோன்றும்” என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் நவம்பர் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சி அதிகரித்துள்ளதுடன், இங்கு போர் முடிவுக்கு வந்தபோதிலும், மக்களின் துன்பங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதை அறியமுடிகிறது” என வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை சிறிலங்காவை எச்சரித்திருந்தார்.

தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் தமிழ் மக்களின் விடுதலைக்காக நாட்டில் வன்முறையற்ற விதத்தில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அரசியல் ஆபத்தின் விலை என்பது தமிழ் மக்களின் படுகொலைக்கும் உள்நாட்டுப் போருக்குத் திரும்பவும் செல்லுதல் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளதாகவும், வன்முறையற்ற விதத்தில் போராட்டத்தைத் தொடரவிரும்புவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.army_bulldozer land grab sl

போரானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறிலங்காப் படைகளால் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்ட போதிலும், தற்போதும் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகவே காணப்படுகிறது. இங்கு வன்முறைகள் முடிவுபெறாது இன்னமும் தொடர்கின்றன. இரவு நேரங்களில் ஆயுததாரிகளின் சித்திரவதைகளிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ் மக்கள் வாழும் கிராமங்களைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் குழுக்களாக ஒன்றுசேர்ந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். சிறிலங்கா அரசுக்கு எதிரானவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் தொடர்ந்தும் வெள்ளைவான்களில் கடத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் சிறிலங்கா அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பில் 2000 வரையான வழக்குகள் இன்னமும் நீதிமன்றில் நிலுவையிலுள்ளன.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் தனது படைகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதை சிறிலங்கா அரசாங்கம் இறுதியில் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவான மனித உயிர்கள் அழிக்கப்பட்டதாகவும் இறுதிக்கட்ட யுத்தத்தில் மட்டும் 40,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஐ.நா அறிவித்தது.

“சிறிலங்காவில் நிலவும் இனமுரண்பாட்டிற்கான அடிப்படைக் காரணங்கள் தீர்க்கப்படாத போது எவ்வாறு இங்கு நிலையான சமாதானம் எட்டப்பட முடியும்?” என புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வினவினார். வன்னியில் வாழ்கின்ற பெருமளவான மக்களும் சமாதானம் தொடர்பான தமது சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர்.

போர் வலயங்களில் வாழும் மக்களால் 26 ஆண்டுகால யுத்தத்தால் பெற்றுக் கொண்ட வடுக்களை ஆற்றமுடியாதுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த இரவன்று தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்காக வெடிகள் கொளுத்தியதை சிறுவர்கள் பார்த்து அகமகிழ்ந்தனர்.

போர் வலயங்களில் உள்ள கிராமங்களில் போரின் தடயங்களை இன்னமும் காணமுடியும். இந்த மக்களுக்கு உளசமூக ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என நவிபிள்ளை குறிப்பிட்டிருந்தார். போரின் போது தமது உறவுகளை இழந்தவர்கள், உறவுகள் காணாமற் போனவர்கள் எனப் பலரும் தற்போது உளவியற் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான காரணங்களால் தற்போது மதுபானம் அருந்துவது மற்றும் தற்கொலைகள் போன்றன அதிகரித்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து சில ஆண்டுகள் கடந்த போதும் நாட்டில் இயல்புநிலையையும் நீதியையும் கட்டியெழுப்புவதில் சிறிலங்கா அரசாங்கம் போதியளவு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் போரில் வெற்றி பெற்ற தரப்பினர் பல்வேறு நலன்களை அனுபவிக்கின்றனர். நாட்டில் இனப்போர் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை முன்வைத்து சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அண்மையில் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தால்’ மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த 26.5 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதியளவில் காணப்படவில்லை என 50 சதவீதமானவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“சிறிலங்கா அரசாங்கமானது போரின் வடுக்களை மறைப்பதற்காக நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இது மக்களுக்குக்குத் தேவையானது அல்ல. மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ராஜபக்ச அரசாங்கமானது பொருத்தப்பாடற்ற அணுகுமுறையை மேற்கொள்கிறது. வெளித் தரப்பின் தலையீடுகளின்றி நாட்டில் மீளிணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்காவின் தலைமைப்பீடம் கருதினாலும் கூட, தன்னால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவற்றையும் சிறிலங்கா அரசாங்கமும் இன்னமும் அமுல்படுத்தவில்லை.

போர் முடிவடைந்ததிலிருந்து தமிழர் வாழும் பகுதிகளில் இருமடங்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு;ள்ளனர். நாட்டின் அபிவிருத்தித் துறையில் சிறிலங்கா இராணுவத்தினர் அதிகளவில் ஈடுபடுவதால் புதிய சமாதான வழிமுறைகளை செயற்படுத்துவதற்குப் பெரும் தடையாகக் காணப்படுகிறது. பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் தொழில்களை சிறிலங்கா இராணுவம் தம்வசம் வைத்திருப்பதாகவும் உள்ளுர் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது, விருதுபெற்ற தமிழ்க் கவிஞரான சண்முகப்பிள்ளை ஜெயபாலனைக் கைதுசெய்தது. நோர்வேயிலிருந்து சிறிலங்காவுக்குச் சென்ற கவிஞர் ஜெயபாலன் தனது தாயாரின் சமாதியைப் பார்ப்பதற்காக வடக்கிற்குச் சென்ற போது ‘இனஅமைதியைச் சீர்குலைப்பதாக’ குற்றம் சாட்டி சிறிலங்கா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரின் கைதானது சிறிலங்காவில் எவ்வாறான சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் பல்வேறு நெடுஞ்சாலைகள், சுற்றுலாத் துறை போன்றவற்றை அபிவிருத்தி செய்தாலும் கூட, வடக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விளக்கவுரையில் காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டும், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் ஒழிக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான, சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவற்றை முன்னெடுப்பதில் சிறிலங்காவின் போருக்குப் பின்னான உறுதித்தன்மை செல்வாக்குச் செலுத்துகிறது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட தேர்தல் வெற்றியானது தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கியது போல் தெரியவில்லை.

1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்ததின் பிரகாரம் அதன் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் உட்பட வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கொண்டு கருத்துள்ள, உறுதியான இணைப்பு நிர்வாகம் ஒன்றை ஆரம்பமாகக் கொண்டு ஆட்சியை நடாத்த முடியும் என கூட்டமைப்பு நம்பியிருந்தது. 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மாகாணங்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளார்.

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழ வேண்டும் என்கின்ற அரசியல் அபிலாசைகளைக் கொண்டுள்ள போதிலும், சிறிலங்கா அதிபர் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தனது சொந்தக் காரணங்களுக்காக மறுத்துவருகிறார். சிங்களப் பேரினவாதிகளின் மேலான செல்வாக்கின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், ராஜபக்ச குடும்ப அரசாங்கமானது புறாக்கள் போல் தம்மைக் காட்டிக் கொள்ள முடியாதுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் அழித்ததன் மூலம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது வெற்றிக்களிப்பில் உள்ளதுடன் இதன் காரணமாக மக்களின் மனங்களை வென்றுள்ளது. போரில் தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் மீளவும் ஒன்றுசேர்ந்து நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கலாம் என்கின்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தொடர்ந்தும் இராணுவத்தின் தலையீடுகளை சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியமான அதிகாரப்பகிர்வுக்கான எந்தவொரு விட்டுக்கொடுப்பும் பலவீனமடைவதைக் காணமுடிகிறது.

இதேவேளையில், சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் ஜனநாயகம் மற்றும் மறுமலர்ச்சிக்கான தனது அனுமதியை வழங்காது விட்டால், இது நீடித்து நிலைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். நீண்ட காலமாக அரசியல் தீர்வுக்காக காத்திருக்கும் தமிழ் சமூகத்தின் மீது மட்டுமல்லாது, சிறிலங்காவில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் சமூகத்தவர்களை இலக்கு வைத்து இராணுவத்தினரும் பௌத்த ஆயுததாரிகளும் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறான போக்கானது சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்தை எதிர்க்கும் போது மாற்றமடையும். இவ்வாறான நிலைப்பாடானது தமிழ்-முஸ்லீம் கூட்டணி ஒன்று விரைவில் உருவாக வழிவகுக்கலாம்.

ஓகஸ்ட்டில் இடம்பெற்ற வெலிவெரியச் சம்பவத்தில், குறைந்தது மூன்று சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் இராணுவ அடக்குமுறைகளுக்கு ஏனைய சமூகத்தவர்களைப் போன்று தாமும் முகங்கொடுக்க வேண்டியேற்படுவதாக பல சிங்களவர்கள் கருதுகின்றனர். இவ்வாறான வன்முறைச் சூழல் நாட்டில் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய சில இராணுவ வீரர்கள் கூட அரசாங்கம் மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும், இவ்வாறான வன்முறைச் சூழலானது விரைவில் ராஜபக்ச குடும்பத்திற்கு தீங்குவிளைவிப்பதாக இருக்கும்.

சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் மிகவும் பயனுள்ள மாற்றம் ஒன்று ஏற்படுவதற்குத் தயாரா இல்லை என்பதைக் அண்மையில் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு தெளிவாகக் காண்பித்துள்ளது என்பது சிறிலங்காவுக்கு ஒரு கெட்டவாய்யப்பாகும். அரசாங்கத்திற்கு எதிராக அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவர் போன்றோருக்கு எதிராக சிறிலங்கா காவற்துறை மேற்கொண்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் சிறிலங்காவில் நடந்தேறுகின்றன. இவை பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் போது காண்பிக்கப்பட்டன.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக ரீதியில் தன்மீதான மதிப்பீடு தொடர்பாகக் கவனம் செலுத்தாது விடலாம். பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் ராஜபக்சவின் முன்னுரிமை முதன்மையிடத்தில் வைக்கப்படாதிருக்கலாம். சிறிலங்காவால் இழைக்கப்படும் மீறல்களை அனைத்துலக சமூகமானது மிகக்கவனமாக உற்றுநோக்கிக் கொண்டுள்ளது.

“இங்கு அரசியற் சூழல் மிக மோசமாக உள்ளது. ராஜபக்ச அரசாங்கம் மீது அனைத்துலக சமூகமானது தனது அழுத்தத்தை இடும் என நாம் நம்புகிறோம். இது மட்டுமே எம்மிடமுள்ள ஒரு வாய்ப்பாகும். நாங்கள் எமது கருத்துக்களைக் கூறமுடியாது” என பல தடவைகள் இடம்பெயர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயது போன பெண்மணி வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கு சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு ராஜபக்சவுக்கு எதிராக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்படும். அண்மைய நாட்களில் சிறிலங்காவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கின்ற சீனா கூட சிறிலங்காவின் மனித உரிமைச் சூழல் தொடர்பில் தனது அதிருப்தியை முன்வைத்துள்ளது. சிறிலங்கா அதிபர் தான் தனது சொந்த நாட்டில் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவதோடு மட்டுமன்றி இராஜதந்திர ரீதியிலும் தான் ஓரங்கட்டப்படுகின்றேன் என்பதை தானாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

இதேவேளையில், சிறிலங்கா ராஜபக்சவின் தவறான நகர்வுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் மேலும் மிதவாதியாக மாறுவதுடன், வேறு தெரிவினை நாடிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவானது ஊழல் மிக்க நாடாக மாறிவருகிறது. வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புதிய காற்றைச் சுவாசிப்பது போல் தெரிகிறது. சிறிலங்காவின் சட்ட அறிவைக் கொண்ட மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரன் திகழ்கிறார். இவர் கடந்த வாரம் கமறூனுடன் பேச்சு நடாத்திய பின்னர், தற்போது பிரித்தானியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் தனது மக்களுக்கு நம்பகமான எதனையும் செய்யாவிட்டாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு உதவி செய்யவேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை வழங்கிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கான தனிநாடான ஈழத்தை ஒருநாள் பெற்றுத் தரும் என நம்பிக்கை வெளியிட்டனர். இது ஒரு கனவாக உள்ளபோதிலும், நாட்டில் நிலையான, உறுதியான மீளிணக்கப்பாடு ஏற்படுவதற்கும், அரசியல் பங்களிப்பு மற்றும் முழுமைய உரிமைகள் போன்றவற்றை மக்கள் பெறுவதற்கான நடவடிக்கை அடுத்து எடுக்கப்படுவது மிகச்சிறப்பாக இருக்கமுடியும்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமவலுவில் செயற்பட வேண்டும். அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் அழுத்தங் கொடுப்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தங்கியுள்ளது. இதில் புலம்பெயர் சமூகம் பெரும் பங்காற்ற வேண்டும்.

தலைவர்கள் மீது அழுத்தங்களைப் போடுவது மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முதலீட்டை மேற்கொள்கின்ற மிக முக்கிய ஊடகமாகவும் புலம்பெயர் தமிழ் சமூகம் செயற்பட வேண்டும். சிறிலங்காவின் வரலாற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புதிய சரித்திரம் ஒன்றை உருவாக்கலாம். குறைந்தது கலந்துரையாடலாவது மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் மதிப்பீடானது இதன்மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. பல பத்தாண்டுகளின் பின்னர் முதற்தடவையாக சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தமது விருப்பம் என்ன என்பதை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

“நாங்கள் தமிழ் சமூகத்தின் அவாவை நிறைவு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் முதலில் 30 ஆண்டுகளாக அமைதி வழியில் போராடித் தீர்வைப் பெற முயற்சித்தோம். இதன்பின்னர், தமிழ்ப் புலிகளுடன் இணைந்து நாங்கள் 30 ஆண்டுகளாக வன்முறை வழியில் போராடினோம். தற்போது நாங்கள் மூன்றாவது வழிமுறையில் எமது அவாக்களை அடைய முயற்சிக்கிறோம்” என வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த அடுத்த நாள் வாக்காளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார். அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் மூன்றாவது வழிமுறையானது சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகத்தவர்கள் தமது சிறந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

*Kim Wall is a Columbia graduate and journalist. Formerly a reporter for the South China Morning Post. Her work has appeared in publications such as The Atlantic, The Independent and the BBC.

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements