சிதம்பரம் இனியாவது, ஒரு தமிழனாக, உண்மையைப் பேச வேண்டும்!

இந்தியாவின் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கடந்த நவம்பர் 30 சனிக்கிழமை சென்னையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே சிதம்பரம் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார் என்பது ஒன்றும் சிதம்பர இரகசியம் அல்ல.srilanka india partners

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இலங்கைத் தீவில் போர் உச்ச கட்டத்தில் இருந்தது. அந்த வேளையில், தமிழகத்தில் மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகியிருந்தாலும், அப்போதைய தமிழக முதல்வர் தமிழினத்தைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும் தன் பங்கிற்கு அவ்வப்போது சில நாடகங்களை அரங்கேற்றி, தமிழக மக்களது உணர்வுகள் எல்லை மீறாது பார்த்துக் கொண்டார்.

அன்று ‘கிழம்பியிருந்த’ 2 ஜி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் விடுவித்துக் கொள்ள அவருக்கு மத்திய ஆளும் காங்கிரசின் உதவி தேவைப்பட்டது. உதவி தேவைப்பட்டது என்பதற்கும் அப்பால், அவரது தலைவிதியைத் தீர்மானிப்பவராக சோனியா அனைத்தையும் கையில் வைத்திருந்தார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அன்றைய காலத்தில் தற்போதைய முதல்வரான செல்வி ஜெயலலிதா அவர்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்ததாலும், அப்போதைய போர்க் கள நிலமைகளையும், தமிழீழ மக்களது அவலங்களையும் கணிப்பீடு செய்யத் தவறியிருந்த காரணத்தாலும், முதல்வர் கருணாநியைப் பயன்படுத்தி, அவர் மூலமாகத் தனக்கானவற்றைச் சாதித்தும் கொண்டார். கருணாநிதி குடும்பத்திற்குச் சொந்தமான செய்தி ஊடகங்களில் ஈழத்துக் கொலைக் களங்களும், பேரழிவுகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அந்தக் கொடூரமான யுத்த களத்துச் செய்திகளால் தமிழினம் துடித்துக்கொண்டிருந்தபோதுதான், கருணாநிதி அவர்களது கலைஞர் தொலைக் காட்சியில் ‘மானாட, மயிலாட’ எனும் கிளர்ச்சி நடனம் பிரபலப்படுத்தப்பட்டது.

கருணாநிதி அரங்கேற்றிய நாடகங்களும், பொய்யான வெளிப்படுத்தல்களும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் சில இடங்களைப் பெற்றுக் கொடுத்தது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ப. சிதம்பரம் தோல்வியடைந்துவிட்டார் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர், மறு வாக்கு எண்ணிக்கையின்போது ப. சிதம்பரம் அவர்கள் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரான இராஜ கண்ணப்பனை 3,354 அதிக வாக்குக்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈழப் போரின் இறுதிக் கள நிலவரம் திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற கொடூரங்களும், அதன் பின்னணியில் செயற்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் துரோகங்களும் தமிழக மக்கள் முற்றாக அறியாத நிலையில்கூட, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களில் 8 பேர் மட்டுமே மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

இப்போது, தமிழகத்து மக்கள் அனைத்தையும் அறிவார்கள். இறுதிப் போர் காலத்தில் ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட அத்தனை கொடூரங்களும், கொலைகளும், பாலியல் சித்திரவதைகளும், போர்க் குற்றங்களும் அதன் பின்னணியும் தமிழகத்து மக்களால் நன்றாகவே அறியப்பட்டுள்ளது. அதையும்விட முக்கியமாக, தமிழகத்து இளைஞர்களும், மாணவர்களும் தமிழீழ மக்களுக்கான நீதி கோரி பல்வேறு வகைகளில் போராடி வருகின்றார்கள். ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையின் சூத்திரதாரிகளாக காங்கிரஸ் கட்சி மீது கோபத்தோடும், வெறுப்போடும் களத்தில் நிற்கின்றார்கள். தமிழகத்து மக்களின் தமிழின உணர்வு வீச்சுக்குள் தி.மு.க.வின் நாடக அரசியல் கண்டுகொள்ளப்படாத நிலைக்கு வந்துவிட்டது.

இது, ஏதாவது செய்தே ஆகவேண்டிய நிலைக்கு கருணாநிதியைத் தள்ளியது போலவே, தமிழக காங்கிரஸ் அடியோடு தறியுண்டு போகாமல் காப்பாற்றும் பெரும் பொறுப்புக்குள் சிதம்பரம் சிக்குண்டு போயுள்ளார். இதனால், நான்கு வருடங்களாகக் கண்டு கொள்ளப்படாத ஈழ மக்களது துயரங்கள் சிதம்பரத்திற்கு இன்று இன அழிப்பாகப் புரிந்துள்ளது. அமெரிக்காவும், கனடாவும், பிரித்தானியாவும் சிறிலங்கா ஆட்சியாளர்களது போர்க் குற்றம் குறித்துப் பேசுவதற்கு இந்தியாவின் பெரு முயற்சிதான் காரணம் என்று சொல்ல வைத்திருக்கின்றது. இந்தியாவின் போரை நாங்கள் நடாத்தினோம் என்ற சிங்களத்தின் வாக்குமூலத்திற்குப் பின்னரும், போரினால் அழிவுற்ற ஈழத் தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடு கட்டிக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது தற்பெருமையாகப் படுகின்றது.

கொலைகளையும், கொடூரங்களையும், பேரழிவுகளையும் நடாத்திவிட்டு, நிவாரணங்கள் வழங்குவதும், பெற்றுக்கொள்வதும் இந்திய மண்ணில் சில வேளை சாத்தியமாக இருக்கும். உழைப்பாலும், வேர்வையாலும் நனைந்த ஈழத்து மண்ணின் மக்கள் தங்கள் வீரத்தையும், மானத்தையும் அடகு வைத்து, தம் பிள்ளைகளது குருதியால் நனைந்த மண்ணில் நின்றுகொண்டு சிதம்பரத்திடம் யாசித்து வாழ நினைக்க மாட்டார்கள்.

ஈழத்து மக்களின் இன்றைய அழிவுகளுக்கும், அவலங்களுக்கும் முக்கிய காரணம் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களே. ப. சிதம்பரம் அவர்கள் தமிழகத்தில் கூறிய இதே கருத்தை, தமிழீழ மண்ணில் சொல்லியிருந்தால், அதன் எதிர் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருப்பார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஈழத் தமிழர்களது அவலங்களுக்குப் பரிகாரமாகச் செய்து கொள்ளப்படவில்லை. அதற்காகத் தமிழீழ மக்களிடமோ, அதன் தலைவர்களிடமோ இந்திய காங்கிரஸ் கட்சி எந்தக் கருத்தையும் கேட்டதில்லை. தங்களால் தூண்டிவிடப்பட்ட ஆயுதப் போராட்டம் காரணமாக இந்தியாவிடம் அடிபணிந்த சிங்கள அரசை அப்படியே கையாள நினைத்த துரோகத்தின் சிந்தனை வடிவம்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளவில்லை என்று இப்போதும் நினைக்கின்றாரா? ப. சிதம்பரம். அந்த ஒப்பந்தத்தின் மூலம் கால்பதித்த இந்தியப் படைகளை அங்கே தொடர்ந்தும் நிலைநிறுத்த, ஒரு அடிபணிவாளனை அரசியல்வாதியாக்கி, வடக்கு-கிழக்கின் முதலமைச்சராக்கிய இந்திய காங்கிரஸ் ஆட்சியாளரின் சதிகளை தமிழுலகம் நன்றாகவே அறியும். இதில் சிதம்பர இரகசியம் எதுவும் இல்லை.

சிதம்பரம், ஜனநாயகத்தை நம்பும் ஒரு மனிதனாக இருந்தால், இந்தியா என்ன செய்யவேண்டும் என்றதொரு கருத்துக் கணிப்பீட்டை நம்பகத் தன்மையுடைய வகையில் ஈழத் தமிழரிடம் நடாத்திப் பார்க்க வேண்டும். சிதம்பரம் இனியாவது ஒரு தமிழனாக, உண்மையைப் பேச வேண்டும்!

– இசைப்பிரியா

**

ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்..தமிழருவி மணியன்

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு…

வணக்கம். வளர்க நலம்.

‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் ‘சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது.

‘இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்’ என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

ஈழ நிலத்தில் இலங்கை அரசு இனப்படுகொலையை நடத்தியது என்று முதன்முதலாக நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் வாக்குமூலம் மத்திய அரசின் வாக்குமூலம் என்று நாங்கள் ஏற்கக்கூடுமா? மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் திரு. ராசா ‘இனப்படுகொலை’ என்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உங்கள் அரசு அகற்றியது ஏன்? இன்றுவரை மத்திய அரசு ஈழத் தமிழர் அழிவை ‘இனப்படுகொலை’ என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லையே. உங்களுக்குத் தெரிந்த இந்த உண்மை, நீங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் மன்மோகன் அரசுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது?

இரண்டாம் உலகப் போரில் யூத இனத்தைப் படுகொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையின் இரக்கமற்ற நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன சர்வதேச சமுதாயம், ‘இனியரு முறை இதுபோன்ற அரக்க மனதுடன் எந்த அரசும் செயல்பட அனுமதிக்கலாகாது’ என்று தீர்க்கமான முடிவுடன்… ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவில் டிசம்பர் 9, 1948 அன்று இனப்படுகொலையைத் தடுக்கவும். மீறுவோரைத் தண்டிக்கவும் ஓர் அமைப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, ஜனவரி, 12, 1951 அன்று நடைமுறைப்படுத்தியது. அதுதான் ‘Genecide convention’ என்பதை அறிவார்ந்த நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஓர் அரசு இழைக்கும் கொடுமைகளிலேயே கடுமையானதும், மன்னிக்க முடியாததும் இனப்படுகொலை என்பதில் இரு கருத்து இருக்கவே இயலாது.

‘இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்று நீங்கள் மனிதகுல நாகரிகத்தின் உச்சத்தில் நின்று உரத்த குரலில் அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இனப்படுகொலை இலங்கை அரக்கர்களால் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியபோது நீங்களும், உங்கள் மத்திய அரசும் வெறும் மௌனப் பார்வையாளர்களாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாபாதகச் செயலுக்குப் பக்க பலமாகவும் இருந்தீர்கள் என்பதை உலகம் நன்கறியும். ஈழத் தமிழர் அழிவுக்கு நாள் குறித்த இலங்கை அரசுக்கு இணக்கமாக நடந்துகொண்ட நீங்கள், போரை நிறுத்த எவ்வளவோ முயன்றதாகச் சொல்கிறீர்கள். கேழ்வரகில் நெய்யென்றால் கேட்பவர்களுக்கா புத்தியில்லை?

‘குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது’ என்கிறீர்களே… குற்றவாளிகள் ராஜபக்ஷே சகோதரர்களைத் தவிர வேறு யார்? ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவை உங்கள் அரசுதானே குடியரசு மாளிகையில் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்தது? காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் அவருக்குத் தனிமரியாதை தந்து பரவசப்பட்டவர் நம் பாரதப் பிரதமர்தானே! புத்தகயாவிலும், திருப்பதியிலும் அவர் புனித யாத்திரை நடத்துவதற்கு அனுமதியும், பாதுகாப்பும் அளித்தது யார்? நீங்கள் அறிவாளி என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக, நாங்கள் எதையும் நம்பும் முட்டாள்கள் என்று நீங்கள் முடிவெடுத்துப் பேசுவதில் நியாயமில்லை.

‘இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத்தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது’ என்றும் நீங்கள் சுருதி பேதம் சிறிதும் இல்லாமல் சொல்லி இருப்பதைப் படித்தபோது சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை சிதம்பரம் அவர்களே!

ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-ல் உருவானது. அது, இடையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தமாக நவம்பர் 14, 1987 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இடையில் 26 ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களும், இந்திய அரசும் இன்றுவரை இடையறாமல் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை 13-வது திருத்தம் மூலம் பெற்றுத்தருவதற்கு இரவு பகல் பாராமல் முயன்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அந்த அரசியல் தீர்வோ இந்திய அரசின் இயலாமையால் தொடுவானம்போல் பிடிபடாமல் விலகி நின்று வேடிக்கை காட்டுகிறது. ஏன் இந்த நிலை என்று எவரேனும் கேட்டால், விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என்று தயங்காமல் பழிதூற்றுவீர்கள்.

விடுதலைப் புலிகள் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கை ராணுவத்தால் மே 18, 2009 அன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக ராஜபக்ஷே ஆரவாரத்துடன் அறிவித்து நான்கரை ஆண்டுகள் நடந்துவிட்ட பின்பும், 13-வது திருத்தம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை நிதியமைச்சரே? போர் நடந்த நேரத்தில் 13-வது திருத்தம் வழங்கும் உரிமைகளோடு கூடுதலாகவும் சில உரிமைகள் ஈழத் தமிழருக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ராஜபக்ஷேவின் வாய் மலர்ந்த அரசியல் தீர்வுதான் ’13 ப்ளஸ்’ என்பதை அரசியல் விழிப்பு உணர்வுள்ள ஒருவராவது மறக்க முடியுமா? இன்று அதே ராஜபக்ஷே, ‘தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றிப் பேச நான் என்ன முட்டாளா?’ என்று ஆணவத்துடன் பத்திரிகையாளர்களிடம் பதிவு செய்ததையும், ’13 மைனஸ்’ என்று புதிய பல்லவி பாடுவதையும் மன்மோகன் அரசு ஏன் மனதில் கொள்ளவில்லை?

ஈழத் தமிழருக்குரிய உரிமைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் அதிசய அட்சய பாத்திரம் 13-வது திருத்தம் என்பது போன்ற பொய்யான மாயத்தோற்றத்தை நீங்களும், காங்கிரஸ் அறிவு ஜீவிகளும் இன்னும் எவ்வளவு காலம் உருவாக்கி இந்த இனத்தை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய மாநிலங்களுக்குரிய உரிமைகள் ஈழ மண்ணில் வடக்கிலும் கிழக்கிலும் சென்று சேர இந்த 13-வது திருத்தம் எந்த வகையில் உதவக்கூடும்? ராஜபக்ஷேவின் கண்ணசைவுக்கு ஏற்பக் காரியமாற்றும் ஆளுநரே உண்மையான நிர்வாக அதிகாரம்(executive power) உள்ளவர். அவருக்கு ‘உதவுவதும் பரிந்துரைப்பதும்’ தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பணி. நிதி மேலாண்மை ஆளுநர் வசம். ஆளுநர் விருப்பத்துக்கு இசைய மறுக்கும் மாகாண சபை கலைக்கப்படும். அந்த அதிகாரம் இலங்கை அதிபர் கையில்… 13-வது திருத்தம் சொல்லும் செய்தி இதுதானே!

சட்டம்-ஒழுங்கு, காவல் துறை, அரசு நிலம் என்று எதன் மீதும் முற்றுரிமை மாகாண அவைக்கு அறவே இல்லை. ‘தேசிய நலன்’ என்ற போர்வையில் இலங்கை நாடாளுமன்றம் தமிழர் நலனுக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியும். இதுதானே நீங்கள் முயன்று உருவாக்கிய 13-வது திருத்தத்தின் அம்சங்கள்! ‘வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாகாணமாக மாறும். சிங்களத்துடன் தமிழ், இலங்கையின் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படும்; ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும்’ என்ற இரண்டு அம்சங்கள் மட்டுந்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உருப்படியானவை. ஆனால், அந்த இரண்டும் சிங்கள பௌத்த பேரினவாத கூட்டத்தால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டபோது, ‘காந்தியின் குரங்குகளாக’ (இது தவறான சொற்பிரயோகம் இல்லை) நீங்கள் அனைவரும் காட்சி தந்தது ஏன்? விளக்குவீர்களா? எந்த உரிமையும் தமிழருக்குத் தருவதற்கு வழிவகுக்காத இந்த 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் சிங்கள அரசுக்குச் சம்மதம் இல்லை. இதை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழரின் ‘அரசியல் அதிகாரம்’ பழுதுபடாமல் பாதுகாக்கப்படும் வரை இந்திய அரசும் நீங்களும் ஓயப்போவதே இல்லை. நல்ல நாடகம்.

நீங்கள் ஒரு கற்றறிவாளர், புகழ்பெற்ற வழக்கறிஞர்; சர்வதேச சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர். இந்த ஏதுமறியாப் பாமரனுக்கு நீங்கள்தான் தெளிவான பதிலைத் தரக்கூடும். இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் பலமுறை கூடிப் பேசி, விவாதித்து… இறுதியில் ஓர் ஒப்பந்தத்தில் கையப்பமிட்டால், அந்த ஒப்பந்தம் இரு நாடுகளையும் சம அளவில் கட்டுப்படுத்துவதுதானே நியாயம்? பின்னாளில் அரசுப் பொறுப்பில் அமரும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப ஒரு நாடு தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தைக் குப்பைக்கூடையில் வீசியெறிந்தால், அந்த இழிசெயலை இன்னொரு நாடு பார்த்தும் பாராமல் நடந்துகொண்டால், இரண்டு அரசுகளின் ‘இறையாண்மை’ என்னாவது? இறையாண்மை பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இந்த அறிவிலிக்கு விளக்கவுரை வழங்க வேண்டும்.

ராஜபக்ஷே அரசு, இப்போது 13-வது திருத்தத்தை நிராகரித்தாலோ, நீர்த்துப்போகச் செய்தாலோ, தார்மிக அடிப்படையில் அது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தகுதியை இழந்துவிடாதா? அதனுடைய தவறைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா? நீங்கள்தான் எனக்குத் தெளிவுரை தரவேண்டும். காரணம், காங்கிரஸில் உள்ள ‘அறிவுஜீவிகளின் ஆதர்சம்’ நீங்கள் ஒருவர்தான் என்று பழைய காங்கிரஸ்காரனாகிய நான் பூரணமாக அறிவேன்.

‘இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கிய நீங்கள், இந்தியாவில் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் பிரிவினை கோரிக்கையை நினைவூட்டியிருக்கிறீர்கள். இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்துக் கொடுக்கப் படை நடத்தியபோது ‘பாகிஸ்தான் இறையாண்மை’ பறிபோவதை ஏன் சிந்திக்கவில்லை? ஈழத் தமிழரின் பசியாற்ற ராஜீவ் காந்தி வான்வழியாக விமானங்களை அனுப்பி உணவுப்பொருள்களை வீசியபோது ‘இலங்கை இறையாண்மை’ மீறப்படுவதை ஏன் பொருட்படுத்தவில்லை? அப்போதெல்லாம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைக்குரல் எழவில்லையா?

‘ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவது எளிதல்ல’ என்று புத்தஞானம் போதிக்கிறீர்கள். அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஒத்துவராத நிலையில் நடந்த இனப்போரில் 11 ஆயிரம் பேர் பலியானதும், பத்து லட்சம் அல்பேனியர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், செர்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட அல்பேனியர்கள் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரத்துடன் ‘கொ சோவா’ தனிநாடு கண்ட சரித்திரம் உங்களுக்குத் தெரியாதா? யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டதைச் சிந்தியுங்கள்.

ஆப்பிரிக்காவில் எரித்ரியா, தெற்கு சூடான், இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து விடுபட்ட திமூர் ஆகியவற்றில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தனி நாடு கண்ட வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பணிகளுக்கிடையில் கொஞ்சம் பிரித்துப் படியுங்கள். நீங்கள் மிகவும் ‘சீரியஸான’ மனிதர் என்று இதுவரை நினைத்திருந்தேன். வடிவேலுவைவிட நகைச்சுவை உங்களுக்கு நன்றாக வருவதை இன்றுதான் அறிந்தேன். ‘சர்வதேச அரங்கில் மன்மோகன் அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சியினால்தான், கனடா போன்ற நாடுகள் கொழும்புக்கு எதிராகப் பேசிவருகின்றன’ என்று எப்படி உங்களால் இவ்வளவு நகைச்சுவையாகப் பேச முடிகிறது? கொஞ்சம் போனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மன்மோகனிடம் நடத்திய ஆலோசனைப்படியே யாழ்ப்பாணம் போனதாகவும், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகப் பேசியதாகவும் கதை சொல்ல முனைவீர்களோ?

சிதம்பரம் அவர்களே… சமத்துவம் இல்லாத இடத்தில் சமதர்மம் இருக்காது. சமதர்மம் நிலவாத சூழலில் சுதந்திரக் காற்றை யாரும் சுவாசிக்க இயலாது. சிங்கள பௌத்த பேரினவாத அரசும், ராஜபக்ஷே சகோதரர்களும், இனவாத அமைப்புகளும், வெறிபிடித்த பௌத்த துறவிகளும்(!) ஒருநாளும் ஈழத் தமிழருக்கு எந்த உரிமையும் வழங்கப்போவது இல்லை. இலங்கையைப் போன்ற போக்கிரி அரசை ‘நட்பு நாடு’ என்று நீங்களும் உங்கள் அரசும் பாராட்டலாம். ஆனால், உலக நாடுகள் நீண்ட நாள் வேடிக்கை பார்க்காது. ஒரு நாள் அவை வெகுண்டு எழும். அப்போது ஈழ மக்கள் வாக்கெடுப்பு (Referendum) மூலம் நிச்சயம் தமிழீழம் மலரும்.

‘குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்றீர்கள். அடுத்த நாளே அந்தக் குற்றவாளிகளின் கடற்படையை வலுப்படுத்தி எங்கள் மீனவர்களை மேலும் கொன்று குவிக்க வழிவகுக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்பதை நீங்களே இதற்கு முன்பு நிரூபித்திருக்கிறீர்கள். தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகி, ஜனநாயகப் பேரவை நாயகராக நீங்கள் வலம் வந்தபோது ஒரு வார இதழில் ‘நமக்கே உரிமையாம்’ என்று ஒரு கட்டுரைத் தொடரை வடித்துத் தந்தது உங்கள் நினைவில் நிழலாடுவது உண்டா? ‘இந்தியாவின் தேர்தல் விதிகளை மாற்றுவதை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். முதலில் மாற்றப்பட வேண்டிய விதி எது தெரியுமா? யாரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு (15 ஆண்டுகளுக்கு) மேல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும். பழையன கழிவதற்கும், புதியன புகுவதற்கும் இதுவே சிறந்த வழி’ என்று அதில் ஊருக்கு உபதேசம் செய்தீர்களே… அதன்படி நீங்கள் நின்றீர்களா? ‘தேர்தல் விதியையே மாற்றி எழுதிய’ மகத்தான மனிதரல்லவா நீங்கள்!

பாவம் நீங்கள்… ‘இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான். அழைப்பாளரும் நான்தான். பேச்சாளரும் நான்தான்’ என்று எவ்வளவு வெளிப்படையாக உங்கள் இதய வலியை இறக்கிவிட்டீர்கள்! முதலில் பல்குழுக்களாகப் பாழ்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு காங்கிரஸை ஒன்றாக்கப் பாருங்கள். அதற்குப் பிறகு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்க ஓயாமல் போராடலாம்!

Advertisements