தமிழரின் உரிமைகளை நசுக்குவது நல்லதல்ல

இலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலே தமிழ் மக்களது உரிமைகள், அவர்கள் பெறுகின்ற அதிகாரங்கள் எல்லாமே ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக் கேற்பமாறுபடும் தன்மை கொண்டவை என்ற பிழையான கருதுகோள் இனவாதச் சிங்கள அரசியல்வாதிகளிடம் மாத்திரமல்ல, இணக்கவாதத் தமிழ் அரசியல்வாதிகளிடமும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்தக் கருதுகோளின் காரணமாகத் தான் அரசுடன் ஒத்துப்போகாவிட்டால் தமிழ் மக்கள் வதைபட நேரிடும் என்று சிங்கள அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுவதும், ஐயையோ, இவர்கள் நியாயம் கேட்கிறோம் என்று கூறித் தமிழ்மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்று சரணா கதி தமிழர்கள் ஓலமிடுவதும் நெடுங்காலமாகவே நடந்து வருகிறது.jaffna_protestors_003

தந்தை செல்வாவின் போராட்ட உணர்வு

இலங்கை சுதந்திரமடைந்த சில மாதங்களுக்குள்ளாகவே தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அன்று தந்தை செல்வா கொதித்து எழுந்திரா விட்டால் இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அனைவரையும் ஆகக்குறைந்தது வீடற்றவர்களாகவேனும் ஆக்கியிருப்பார்கள் சிங்கள அரசியல்வாதிகள். சரணாகதி அரசியல் செய்பவர்களுக்கும் தமிழர் நிலத்தில் ஒரு தளமேனும் இருக்கிறது என்றால் அது போராட்ட உணர்வால் காப்பாற்றப்பட்டவற்றின் ஒரு பகுதியே என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

வரலாறு காட்டும் பாடம்

வடக்குக் கிழக்கு மக்களிடையே தோன்றி அரசுடன் சரணாகதிப் போக்கில் இணைந்து கொண்ட அரசியல்வாதிகளால், தாங்கள் வாழ முடிகிறது: தங்கள் உறவினர் நண்பர்களை வாழவைக்க முடிகிறது என்பதைத் தவிர அவர்கள் சாதித் தவை எவையுமேயில்லை. பலம் தம் மிடமிருக்கிறது என நம்பும் காலம் வரைக்கும் வீரம் பேசிக்கொண்டு அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களைக்கூட நிகழ்த்துவது: பலம் குறைந்து விட்டது என உணரும் போது போராட்டத்துக்கான நியாயங்களையயல்லாம் புதைத்து விட்டுத் தப்பியோடி அரசின் புகழ்பாடி உயிரைத்தக்க வைத்துக்கொள்வது என்பவையயல்லாம் வீரத்தின்பாற்பட்டனவோ, விவேகத்தின் பாற்பட்டனவோ அல்ல என்பதை வரலாறு காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

அரசின் குறியும் மாகாணசபைகளும்

தமிழர்களின் கைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் போய்விடக்கூடாது என்ற நினைப்பு அரசிடமிருப்பதுபோல் இலங்கையின் ஏழு மாகாண சபைகளிடமும் தாராளமா கவே விரவிக்கிடக்கிறது. தங்கள் அதிகாரங்களைக்கூட வேண்டாம் என்றுக்கூறி நிராகரித்துவிடும் போக்கு இவர்களிடையே ஏகமனதாகக் காணப்படுகிறது. ஏழு மாகாண சபைகளது ஆளுந்தரப்பினர், எதிர்த்தரப்பினர் அனைவரும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளவோ புரிந்து கொள்ளவோ விரும்பாதவர்கள். ஏழு மாகாணசபைகளதும் ஆளுங்கட்சிகள் அரச தரப்பாகவே இருக்கின்றன.

தமிழ் முஸ்லிம்களின் உணர்வை புதைத்துள்ள கிழக்கு மாகாணம்

ஜனாதிபதியின் சொல்கேட்டு நடக்கின்ற முதலமைச்சரும் அவரின் இலட்சியத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சரவையும் என இருப்பதால் அவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது போக்குச் சரியாகவே தென்படுகிறது. எட்டாவது மாகாணசபை தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்துக்குரியது. நாங்கள் தமிழ்பேசும் மக்களேயயாழிய தமிழர்கள் அல்லரே என்ற வகையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளுக்கு விலைபோய் அரசின் காலடியிற் கிடந்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மட்டு மல்ல முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமையையும் சேர்த்துப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்களின் அடையாளம் வடமாகாணம்

ஆக இப்போது வடமாகாணசபை ஒன்று தான் வடக்குக் கிழக்கு மக்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்துக்கும் அடையாளமாக அமைந்திருக்கிறது எனலாம். அதிற்கூட குற்றங்குறைகள் இல்லாமல் இல்லை. எனினும் ஒன்பதிலே ஒன்றாவது உருப்பட்டதே என்ற ஆறுதலையாவது பெற்றுக் கொள்ளமுடிகிறது. வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர்தான் மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தொடர்பான பேச்சே எழுந்திருக்கிறது. எட்டு மாகாண சபைகளின் முதல்வர்களும் அமைச்சர்களும் தங்களுக்குரிய பதவிகளை ஜனாதிபதியின் கருணையினாலும் செல்வாக்கினாலும் தானமாகப் பெற்றிருக்கலாம். எனவே தானங் கிடைத்த மாட்டின் பல்லை பரிசோதிக் கும் தைரியம் அவர்களுக்கு இல்லாமற் போனதில் நியாயமிருக்கிறது.

ஆனால் வடமாகாணசபை பவ்வியமாகக் கைகட்டிநின்று அரசிடம் நல்ல பிள்ளைப் பெயர் எடுக்கும் நோக்குடன் இயங்க முடியாது. அறுபதாண்டு காலமாகத் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வரும் இனத்தின் உரிமைக்குரலாக ஒலிக்கவேண்டிய தேவை அதற் கிருக்கிறது. கிடைக்கின்ற அதிகாரங்களைப் பற்றிப் பிடித்து தனக்கு வாக்களித்த மக்களின் விடிவுக்காகச் செயற்படவேண்டிய கட்டாயம் அதற்கிருக்கிறது.

அதிகாரங்களுக்காக போராடும் வட மாகாணம்

ஆயினும், தொடர்ந்துவந்த ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களை இருபத்தைந்து வருட காலமாக இடைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். தென்னிலங்கையிலுள்ள ஏழு மாகாண சபைகளும் இவ்வதிகாரங்கள் தமக்குத் தேவையற்றவையயன கூறுகின்றன. எட்டாவது மாகாணசபையான கிழக்கு மாகாண சபையோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிடைத்தால் நல்லது: அதற்காகப் போராடப் போவதில்லை என்று தூங்கி வழிகின்றது. ஆனால் வடக்கு மாகாணசபை ஒன்றே அவ்வதிகாரங்களுக்காகப் போராடத் தொடங்கியிருக்கிறது.

வடக்கு, கிழக்கில் தாக்குதல் பின்னணியில் அரசின் கரம்

மேலதிகமாக, பிரதேசசபை உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையிலும் பங்குத் தந்தையயாருவர் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். மூதூர் மேன்காம சந்தியில் அமைந்துள்ள சிவன்கோவிலில் நடை பெற்ற பொங்கல் வழிபாடு குழப்பப்பட்டிருக்கிறது. இத்தகைய அராஜகங்களை யார் செய்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாது விட்டாலும் இவற்றின் பின்னணியில் அரசின்கரங்கள் இருக்கின்றன

வடபகுதியில் உயிரிழந்தோரின் நினைவுகளை நடத்தத் துடித்தவர்களது வீடுகள்தாம் தாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் என்ன தவறு காணமுடியும் என்ற பாணியில் அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் விளக்கம் சொல்ல முன்வரலாம். ஆனால் அது சரியாகாது. ஏனெனில் தாக்குதல்களை நடத்த வந்தவர்கள் எவரும் தம்மை அடையாளங் காட்ட முன்வரவில்லை. தாக்குதல்கள் இரவிலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. வீடுகளைத் தாக்குவதும் உயிர் அச்சுறுத்தல் செய்வதும் பொலிஸாரினதோ படையினரினதோ நடவடிக்கைகளாக இருக்க முடியாது. எனவே இச்செயல்களுக்கென்று சட்ட விரோத கும்பல்கள் எவையும் அரச அனுசரணையுடன் செயல்படுகின்றனவா என்று கேட்கத் தோன்றுகிறது.

இறந்தவர்களின் நினைவில் பங்குபற்றுவது அரச சட்டப்படி குற்றச் செயலாக இருப்பின் அதற்கெதிரான நடவடிக்கைகளை பொலிஸார்தான் எடுத்திருக்க வேண்டும். வன்முறை எதுவும் நடை பெறாத நிலையில் பொலிஸாரின் நடவடிக்கைகளே பயன்தரக்கூடியதாக அமைந்திருக்கும். ஆனால், உண்மையில் இவற்றைத் தடுத்தவர்கள், இச்செயல்களுக் கெதிராக நடவடிக்கையை எடுத்தவர்கள் படைத்தரப்பினராகவே இருந்தார்கள்.

சாவடைந்தோரை அஞ்சலிப்பது புலிகளின் எழுச்சியாகாது

உண்மையில் இப்போது இடம்பெறும் இறந்தோர் நினைவு நிகழ்வுகள் எவையும் விடுதலைப்புலிகளின் எழுச்சி ஆகா. எம்மக்களுக்காக உயிர்நீத்த உறவுகளுக்கான ஒரு வணக்க முறைமை மட்டுமே. உணர்வு சார்ந்த இந்நிகழ்வு பற்றி அரசு அலட்டிக்கொள்ளாமல் விட்டிருந்தால் அது ஒரு சமயநிகழ்வு போலவே அமைதியாக முடிந்திருக்கும். பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துத் தத்தம் வீடுகளிலிருந்தே உறவுகளை நினையுங்கள் என்று பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தால் எவ்வித முறுகல் நிலையும் ஏற்பட்டிருக்காது. அரசின் நடவடிக்கை குறித்து தமிழர்கள் வெறுப்புக்கொள்ளவும் நேர்ந்திருக்காது.

தமிழர்களின் இயல்பான மனவுணர்வுகளை அரசு தொடர்ந்து நசுக்க முனைந்தால் விளைவுகள் பாரதூரமாகலாம் என மரநடுகை விழாவின்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கூற்றையும் அரசு மனதிற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் செய்வதன் மூலமோ, அடக்குமுறைகளை கட்ட விழ்த்து விடுவதன் மூலமோ, அழிவுகளை ஏற்படுத்துவதன் மூலமோ தமிழர்களின் போராட்டங்களை நசுக்கி விடலாமென அரசு எண்ணக்கூடாது. இனியும் அரசு அப்படிச் செயற்படுமானால் எதிர் வரும் ஆண்டில் அதன் பலாபலன்களை அனுபவிக்க நேரிடலாம்.

தனது ஆளுகைக்குட்பட்ட மண்ணின் சில பகுதிகளுக்கு காலடி எடுத்து வைக்கவோ, அப்பகுதியில் உடைக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள், பாடசாலை, வீடுகள் என்பவற்றை பார்வையிடவோ முடியாமல் வடபகுதி முதலமைச்சர் திணறுவதும் தமிழ்மக்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் தாம் போடுகின்ற பிச்சையயன ஜனாதிபதி எண்ண முற் படுவதும் எதிர்கால இலங்கைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அறிகுறிகளல்ல.

உதயன்

Advertisements