வரலாறு விடுக்கும் எச்சரிக்கை!

கி.மு.550: மக்களாட்சி பற்றி உலகம் அறிந்திராத காலப்பகுதி அது. இறைமை என்பது மன்னர்களின் தெய்வீக உரிமை என்ற மாயவுலகிற்குள் மக்களை மன்னர்களும், பூசாரிகளும் மயக்கி வைத்திருந்த புராதன காலம் அது. அப்படிப்பட்ட ஒரு காலப்பகுதியில் தோற்றம் பெற்றதே ஏதென்ஸ் சிற்றரசு. கிரேக்க தேசத்தில் அன்று இயங்கிய சிற்றரசுகளில் வலிமை வாய்ந்ததாக மட்டுமன்றி மக்களாட்சியை அறிமுகப்படுத்திய சிற்றரசாகவும் அது விளங்கியது. அங்கு மன்னர்கள் இருக்கவில்லை: அமைச்சர்களும் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் இருந்தது. அந்த அரசாங்கத்தை மக்களே இயக்கினார்கள். தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் ஊடாக அல்லாது நேரடியாகவே அரசாங்கத்தை மக்கள் நிர்வகித்தார்கள்.

SriLanka bloody hands

ஒவ்வொரு நாளும் ஏதென்ஸ் நகரின் மையத்தின் அதன் குடிமக்கள் அனைவரும் கூடுவார்கள். தெருக்களை சுத்தப்படுத்துவது தொடக்கம் எதிரி நாடுகள் மீது போர் தொடுப்பது வரை காரசாரமாக விவாதிப்பார்கள். ஒவ்வொரு விவாதங்களின் முடிவிலும் வாக்கெடுப்பு இடம்பெறும். வாக்கெடுப்பில் பெரும்பான்மையான குடிமக்களின் ஆதரவைப் பெற்ற நிலைப்பாடு அரசாங்கத்தின் முடிவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுல்படுத்தப்படும். அங்கு தேர்தல் காலம் என்றோ அன்றி தேர்தல் பரப்புரை என்றோ இருக்காது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்களுமே தேர்தல் நாட்களாக இருக்கும். தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு தேர்தலில் வெற்றிபெற்றதும் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடும் அரசியல்வாதிகள் பற்றிய பேச்சுக்கே ஏதென்சில் இடமிருக்கவில்லை.

இன்றைய தாராண்மை சனநாயக நாடுகளில் நிலவுவது போன்று குடிமக்கள் வேறு, அரசியல்வாதிகள் வேறு என்ற நிலை அன்றைய ஏதென்ஸ் சிற்றரசில் இருக்கவில்லை. ஏனென்றால் அனைத்துக் குடிமக்களுமே அரசியல்வாதிகளாக விளங்கினார்கள். இதுபற்றி அக்காலப் பகுதியில் நிகழ்த்திய உரையன்றில் ஏதென்ஸ் சிற்றரசின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தூசிடிடீஸ் பின்வருமாறு தெரிவித்தார்: “இங்கு அரசியலில் ஈடுபடாதிருக்கும் ஒருவரை தனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் பிரச்சினையற்ற ஒருவராக நாம் கருதுவதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒருவருக்கு எங்கள் நாட்டில் இடமில்லை.” இவ்வாறு மக்களாட்சியின் பொன்மகுடமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஏதென்ஸ் சிற்றரசில் மிகப்பெரும் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்தன.

அங்கு பெண்களுக்கு எந்தவொரு உரிமையும் இருக்கவில்லை. குடிமக்கள் என்ற வரையறைக்குள் பெண்கள் உள்ளடக்கப்படவில்லை: ஆண்களுக்கு மட்டுமே குடிமக்கள் என்ற தகமை அளிக்கப்பட்டிருந்தது. தவிர ஒவ்வொரு வீட்டிலும் அடிமைகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் தலைமகனும் செய்ய வேண்டிய பணிகளை அடிமைகள் செய்தார்கள். அதனால் ஒவ்வொரு நாளும் அரசாங்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதென்ஸ் சிற்றரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதிய அளவு நேரம் இருந்தது.

இவ்வாறான பல குறைபாடுகளை ஏதென்ஸ் சிற்றரசு கொண்டிருந்தாலும்கூட ‘குடிமக்கள்’ என்ற தகமை பெற்றிருந்த மக்கள், மக்களை, மக்களுக்காக நேரடியாக ஆட்சி செய்த மக்களாட்சி முறையைக் கொண்ட நாடு என்ற பெருமையை பண்டைய உலகில் ஏதென்ஸ் சிற்றரசு தனதாக்கிக் கொண்டது. மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணுவதாக இன்று பல நாடுகள் பெருமை பேசினாலும்கூட ஏதென்சில் நிலவியது போன்று மக்களின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட சனநாயக ஆட்சிமுறையை உலகின் எந்தவொரு நாடும் இற்றைவரை கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. உலகின் மிகப் பெரும் சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவும் சரி, தாராண்மை சனநாயகத்தின் விழுமியங்களை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவும் சரி இந்த யதார்த்தத்திலிருந்து விலக்குப் பெற முடியாது.

ஆனால் இன்றைய நவீன உலகில் நேரடி மக்களாட்சி முறைமையின் விழுமியங்களைப் பின்பற்றும் இனம் என்று உரிமைகோரும் முழுத் தகமையும் தமிழீழத் தேசிய இனத்திற்கு உண்டு. 1989ஆம் ஆண்டு முதன் முறையாக மாவீரர் நாளை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த பொழுது நேரடி மக்களாட்சி முறைமையின் விழுமியங்களைப் போற்றிப் பேணத் தொடங்கிய தமிழீழத் தேசம் இற்றைவரை அதனைப் பின்பற்றி வருகின்றது.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்குள் தமிழீழ தேசம் சிக்கியிருந்த அன்றைய காலப்பகுதியில் மணலாறு காட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த பாசறையன்றில் போராளிகள் புடைசூழ தனது மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நிகழ்த்தினார். அக்காலப் பகுதியில் வடதமிழீழத்தின் வனப்பகுதிகளில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறைகளிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களின் இல்லங்களில் தலைமறைவாகவும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால் தென்தமிழீழத்தில் அப்பொழுது நிலைமை வேறு விதமாக இருந்தது. இந்தியப் படைகளின் கூலிப்படையாக விளங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தமிழ்த் தேசிய இராணுவத்தை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து விரட்டியடித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொண்டனர்.

அப்பொழுது தென்தமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிரதிநிதிகளாக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், யோகரத்தினம் யோகி ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடையே தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டை எடுத்து விளக்கினார்கள். பிரேமதாசா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் எடுத்த முடிவு பற்றியும், அதன் விளைவாக விரைவில் தமிழீழ மண்ணை விட்டு இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் அகலும் சூழல் ஏற்படும் என்பதையும் தலைவரின் பிரதிநிதிகள் விளக்கிய பொழுது அதற்கு தமது முழுமையான ஆதரவை மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட தென்தமிழீழ மக்கள் வழங்கினார்கள்.

இதன் மூலம் ஏதென்ஸ் சிற்றரசுக்குப் பிறகு நேரடி மக்களாட்சி முறைமையின் விழுமியங்களை போற்றிப் பேணத் தொடங்கிய தேசிய இனம் என்ற நிலையை தமிழீழ தேசிய இனம் அடைந்தது. தமிழீழ மண்ணை விட்டு இந்தியப் படைகள் அகன்றதைத் தொடர்ந்து, 1990ஆம் ஆண்டு தமிழீழ தாயகம் முழுவதற்கும், புலம்பெயர் தேசங்களுக்கும், ஈற்றில் தாய்த்தமிழகத்திற்கும் இம்முறைமை விரிவாக்கம் பெற்றது. ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பற்றிய செய்தியைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளியிடுவார். உலகின் பட்டிதொட்டிகளெங்கும் இருந்தவாறு இதனை உன்னிப்பாக செவிமடுக்கும் ஒவ்வொரு தமிழரும், தமிழீழத் தேசியத் தலைவரின் உரை நிறைவடைந்ததும் மாவீரர்களுக்கு சுடரேற்றித் தலைவரின் வழியில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான உறுதிமொழியை எடுப்பார்கள்.

இந்த வகையில் புராதன ஏதென்ஸ் சிற்றரசில் நகர மையத்துடன் மட்டும் முடக்கப்பட்டிருந்த நேரடி மக்களாட்சி முறை, தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உலகமயப்படுத்தப்பட்டது எனக்கூறின் மிகையில்லை. இன்று தமிழீழத் தேசியத் தலைவரின் தொடர்பு இழக்கப்பட்ட நிலையிலும்கூட ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் உலகின் பட்டிதொட்டிகள் தோறும் அணிதிரளும் ஒவ்வொரு தமிழரும் எடுக்கும் உறுதிமொழி ‘தலைவரின் வழியில் தமிழீழத்தை நிறுவுவோம்’ என்பதே. இதனைத்தான் இவ்வாண்டும் ஒவ்வொரு தமிழரும் உலக சமூகத்திற்கு இடித்துரைத்துள்ளார்கள்.

தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த ஒவ்வொரு மாவீரர்களையும் ஒட்டுமொத்தமாக நினைவுகூர்வதற்காகத் தமிழீழத் தேசியத் தலைவரால் 1989ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மாவீரர் நாள், இன்று இருபத்திநான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழீழத் தனியரசு நோக்கிய பாதையில் தமது இலட்சிய உறுதியை சனநாயக வழியில் ஒவ்வொரு தமிழரும் உலகிற்கு இடித்துரைக்கும் நாளாகப் பரிணமித்துள்ளது.

இவ்வாறான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மாற்றீடான கருத்துக்களும், நடைமுறைகளும் வேரூன்றாதிருப்பதை உறுதிசெய்வதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தவறாகக் கையாளப்படுவதற்கு இடமளிக்காதிருப்பதும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இதன் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம்செறிந்த வரலாற்றைப் பேணிப் பாதுகாத்துத் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்துத் தமிழீழத் தனியரசை நாம் நிறுவ முடியும்.

அல்லாது போனால் வீரம்செறிந்த வரலாற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், நெறிபிறழ்ந்தோரினதும், வழிதவறியோரினதும் கைகளில் வீழ்ந்து அறிக்கை மட்டும் வெளியிடும் அமைப்பாக மாறியது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகும் நிலையே எதிர்காலத்தில் ஏற்படும்.

நன்றி: ஈழமுரசு