முயன்றால் முடியாதது எதுவுமில்லை மொறிசியஸ் வெற்றி சொல்லும் செய்தி

Eelam memorial in Mauritiusஉயிரச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் இருந்தும் தாயக மக்கள் ஏதோ ஒரு வழியில் தங்கள் தேச விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்தே வருகின்றார்கள். இம்முறையும் கடும் நெருக்கடிக்கும் மத்தியில் வழமையைவிட அதிகமாகவே மாவீரர்களுக்கான தங்களது அஞ்சலிகளை அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதேவேளை, தமிழகத்தில் எங்கெங்கோ மூலைகளில் இரகசியமாக நடந்த மாவீரர் நிகழ்வுகள், இன்று பிரமாண்டமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் தமிழர்களின் தேசிய எழுச்சிமிகு நிகழ்வாக மாவீரர்நாள் அங்கு மாற்றமடைந்து வருகின்றது.

நகரப் புறங்களில் இருந்து கிராமப் புறங்கள் வரைக்கும் இம்முறை நிகழ்வுகள் விரிவடைந்து சென்றுள்ளதுடன், மக்களின் பங்கேற்பும் மிகவும் அதிகரித்துள்ளதை அறியமுடிந்தது. 2009ற்குப் பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கும் தடுப்பதற்கும் தன்னால் முடிந்த அனைத்து வழிகளையும் சிங்களப் பேரினவாத அரசு கையாண்டு, இறுதியில் உயிர்பலியெடுப்பது வரை சென்றது.

ஆனாலும் சிங்களத்தின் எதிர்பார்ப்பு புலம்பெயர்ந்த தேசத்திலும் இதுவரை வெற்றிபெறவில்லை. கடந்த முறைகளை விட புலம்பெயர்ந்த நாடுகளில் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்வதையே காணமுடிந்தது. குறிப்பாகப் பிரான்சில் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு இம்முறை மக்கள் பங்கேற்றிருந்தனர். நிகழ்வு தொடங்கி நிறைவுறும் வரையும் தொடர்ச்சியாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதம் என்று புறமொதுக்க நினைத்த உலகம், இன்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லாத நிலையிலும் உலகப் பரப்பெங்கும் மாவீரர்தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களின் எழுச்சியையும் – ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் எடுக்காமல் இருக்கமாட்டார்கள்.

இலங்கைத் தீவிற்குள் தமிழர்களின் போராட்டத்தை அழித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என எதிர்பார்த்த சிங்களப் பேரினவாதமும், உலகப் பரப்பெங்கும் விரிந்துசெல்லும் தமிழீழ விடுதலைக்கான போராட்டம் கண்டு அதிர்ச்சியடைந்து வருகின்றது. அதனால்தான், “இன்று இல்லாதுபோனாலும் என்றாவது ஒருநாள் தமிழர்கள் தங்கள் தமிழீழக் கனவை அடைந்தே தீருவார்கள்” என்று அண்மையில் பிரான்சிற்கான சிறீலங்காவின் முன்னாள் தூதுவர் டயான் ஜெயதிலக குறிப்பிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத்தை சூழ்ந்துள்ள அச்சத்தின் எதிரொலியாகவே இவரது கருத்தைப் பார்க்கமுடிகின்றது.

இதேவேளை, சர்வதேச நாடுகளும் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதனால்தான், அண்மையில் இலங்கை சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சிங்களப் பகுதியில் நடந்த பொதுநலவாய மாநாட்டுடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளாமல் தமிழர் தாயகப்பகுதிக்கும் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

‘இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் பிரித்தானியா கோரும்’ எனக் கடுமையான செய்தி ஒன்றினை மகிந்த தலைமையிலான அரசுக்கு கூறிவிட்டு திரும்பிவந்த பிரதமர் டேவிட் கமரூன், தற்போது அதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுவருவதாகத் தெரியவருகின்றது.

தமிழர் தாயகப் பகுதியில் கண்டறிந்த உண்மைகளே தமிழர்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் இந்த இறுக்கமான நிலைப்பாட்டினால், சிங்களப் பேரினவாதம் நிலைதடுமாறிப் போயிருக்கின்றது. ஆனாலும், விழுந்தாலும் மீசையில் மண்பாடாது என்பதுபோலவே இப்போதும் அது நடிக்க முயல்கின்றது.

‘டேவிட் கமரூன் காலநிர்ணயம் விதித்துள்ளமை தொடர்பில் நாங்கள் பதற்றமடைய வேண்டியதில்லை’ என்று தெரிவித்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளதுதான் புருவத்தை உயர்த்த வைத்திருக்கின்றது. பிரித்தானியா தனியரு நாடு எனவும் தங்கள் சிறீலங்காவிற்கு சர்வதேச அரங்கில் அதிகமான நட்பு நாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ள கருணாதிலக்க அமுனுகம, ஏதாவது நெருக்கடிகள் ஏற்படும்போது சிறீலங்காவின் நட்பு நாடுகள் தமது ஆதரவினை வழங்கும் என்றும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் தமக்கு நட்பு நாடுகள் மிக அதிகமாகவே உள்ளன என்று கூறியுள்ளதுடன், டேவிட் கமரூன் சிறீலங்காவிற்கு காலக்கெடு விதித்தமை தொடர்பில் தாங்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘எந்தவொரு நாட்டின் அழுத்தங்களுக்கம் சிறீலங்கா அடிபணியாது’ என்று நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசும் சூளுரைத்துள்ளார். ‘சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்கப் போவதில்லை’ என்று சிறீலங்கா உறுதியாகவே கூறிவருகின்றது. இந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர்கள் ஆட்சியில் இருக்கும்வரை அவர்களை சர்வதேச விசாரணைகள் மட்டுமல்ல சர்வதேசம் எதிர்பார்ப்பதுபோன்று உள்ளக விசாரணைகளைக்கூடச் சிறீலங்கா முன்னெடுக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

உள்நாட்டு விசாரணையை நாங்களே நடத்துவோம் என்று சிறீலங்கா கூறிக்கொண்டாலும், அவ்வாறு எதனையும் எந்தவொரு காலத்திலும் அது மேற்கொள்ளப்போவதில்லை. போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில் இதுவரை இந்தப் போர் தொடர்பாக, அங்கு நடந்த மீறல்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் சிறீலங்கா காத்திரமாக மேற்கொள்ளவில்லை. உள்ளக விசாரணக்கு கால எல்லை போதாது என சர்வதேசத்தை ஏமாற்றி காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையையே அது மேற்கொண்டு வருகின்றது. அந்த எல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் தற்போது பிரித்தானியா ஒரு எல்லைக்கோட்டை சிறீலங்காவிற்குப் போட முனைந்துள்ளது. இந்த எல்லைக் கோட்டிற்குள் அதாவது இன்னும் நான்கு மாதங்களுக்குள்ளாக (மார்ச் 2014ற்கு முன்பாக) சிறீலங்காவினால் எந்தவொரு விசாரணைகளையும் மேற்கொண்டுவிட முடியாது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்கா மீது சுருக்குக் கயிறு இறுகப்போவது உறுதியாகிவருகின்றது. இந்தச் சுருக்குக் கயிற்றில் இருந்தும் மகிந்த கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் மீண்டும் டில்லி – கொழும்பு ஓட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிறீலங்காவைக் காப்பாற்றவேண்டிய நிலைமை தற்போதும் இந்தியாவின் கைகளிலேயே இருக்கின்றது.

இனப்படுகொலை குறித்து சிறீலங்கா விசாரிக்கும். விசாரித்து நீதியான தீர்ப்பை வழங்கும் என்பதில் துளியளவேனும் தமிழர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அதனாலேயே சுயாதீனமாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். பிரித்தானியாவும் தற்போது அவ்வாறான ஒரு நடவடிக்கையையே முன்னெடுக்க முனைந்துவருவது தமிழர்களுக்கு சாதகமான ஒரு விடயமே.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவுடன் மொறிசியஸ் தீவு இருந்தபோதும், இறுதியில் அந்நாட்டைப் பங்கேற்க விடாமல் தடுக்க தமிழர்கள் சிலர் எடுத்த காத்திரமான முயற்சியே காரணம். இவ்வாறான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துடனும் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

மொறிசியஸ் வெற்றி சொல்லும் செய்தி இதுதான்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

Advertisements