மனித உரிமை மீறல்கள் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துமா?

எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும்.

இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் Anuradha M chenoy* எழுதியுள்ள Human rights and foreign policy கட்டுரையில் தெரிவித்துள்ளார்.india-rajapakse-friendship

மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. மனித உரிமைகள் என்பது வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என மூலோபாய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உலக நாடுகள் தமது நாடுகளின் நலன்கள் மற்றும் அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என மூலோபாய வல்லுனர்கள் நம்புகின்றனர். இது உண்மையில் தவறான கருத்தாகும். நாடுகள் கொண்டுள்ள நலன்களுக்கு அப்பால், ஒரு நாட்டின் அதிகாரமானது சட்டத்தின் வழி இயங்குவதற்கான நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக, குறித்த நாடானது மனித உரிமைகளில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அண்மையில், சிறிலங்காவால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என இந்தியப் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இந்திய அரசாங்கமானது இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனது நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதென ஒரு மென்மையான தீர்மானத்தை எடுத்தது. ஆகவே வெளியுறவுக் கொள்கையுடன் மனித உரிமைகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?

தமது நாடுகளின் இறையாண்மை தனித்துவமானது எனவும், பிரிக்கப்படமுடியாதது எனவும், தமது நாட்டிற்குள் என்ன நடந்தாலும் அது தொடர்பாக வெளித்தரப்பினராலும் கேள்வி கேட்கப்படக் கூடாது எனவும் உலக அரசுகளும் அவற்றை ஆள்பவர்களும் கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சிறிலங்காவானது தனது நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு நாடுகளும் குறிப்பாக இந்தியா தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என சிறிலங்கா தற்போது நினைக்கிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தம்மிடம் வினவுவதானது தமது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் கருதுகின்றன. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமானது அச்சுறுத்தல் மற்றும் பிரிவினைகளிலிருந்து தனது நாட்டைப் பாதுகாப்பதற்காக மிகவும் மோசமான வன்முறைகளைப் பயன்படுத்த முடியுமா என்பதே இங்குள்ள விவாதமாகும்.

உலக நாடுகள் தமது நாடுகளின் இறைமையைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகளை மறந்துவிடவேண்டுமா? தாம் விரும்பியவாறு தமது சொந்த மக்கள் மீது நாடுகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட முடியுமா? இந்த இடத்தில் மனித உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றன தொடர்பான விவாதம் எழுகின்றது.

ஜேர்மனியை ஹிட்லர் ஆண்ட போது யூத மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டமையானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக கருதப்பட்ட பின்னரே மனித உரிமைகள் தொடர்பான எண்ணக்கரு பரந்தளவில் நோக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்து உலக நாடுகளில் பல்வேறு துன்பியல் சம்பவங்கள் ஏற்பட்ட போது, இவ்வாறான இனப்படுகொலை இனியொரு போதும் இந்தப் பிரபஞ்சத்தில் நடந்தேறக் கூடாது எனச் சுட்டிக்காட்டப்பட்டு சிவில் உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனம் ஐ.நா சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என உலக சக்திகளால் முன்மொழியப்பட்டது. இதிலிருந்து மனித உரிமைகள் அமைப்புக்கள் அதிகம் தோற்றம் பெற்றதுடன், மனித உரிமைகள் தொடர்பான எண்ணக்கருக்கள் அதிகரித்தன.

வெவ்வேறு உலக நாடுகள் தமது நலன்கருதியும், கேந்திர மூலோபாய நலன்களையும் அடைந்து கொள்வதற்காக ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்து குறித்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வியெழுப்புகின்ற போது, மனித உரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றவற்றின் வரையறைகள் தொடர்பில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, வியட்நாமைப் ‘பாதுகாத்தல்’ என்கின்ற எண்ணக்கருவின் கீழ் இந்திய-சீன யுத்தம் இடம்பெற்ற போது அதில் அமெரிக்கா தலையீடு செய்தது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாவதாக, சில நாடுகளில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் கவனத்திற் கொள்ளாத அதேவேளையில், சில நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, சிரியா மற்றும் ஈரானில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன கேள்வியெழுப்பிய அதேவேளையில், இவற்றின் கூட்டணி நாடுகளான சவுதிஅரேபியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்கள் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன கவனத்திற் கொள்ளவில்லை.

இவ்வாறான எடுத்துக்காட்டுக்களின் மூலம் உலகின் சக்தி மிக்க நாடுகளும் அமைப்புக்களும் மற்றைய நாடுகளின் மனித உரிமை மீறல் விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் போது அரசியல் முதன்மைப்படுத்தப்படுகின்றது. அதாவது நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை இங்கு வரையறைத்துக் கொள்வதுடன், நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும்.

எடுத்துக்காட்டாக, 1994-96 காலப்பகுதியில் செச்சினியாவில் பிரிவினைவாத அமைப்பொன்று உள்நாட்டுப் போருக்கான சூழலை உருவாக்கிய போது, ரஸ்யாவானது செச்சினியா மீது மிகப்பெரிய விமானக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்தச் சம்பவமானது ரஸ்யா மனித உரிமை மீறல்களைப் புரிந்துவிட்டதை உறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன மிகவும் கடுமையாக விமர்சித்தன. ஆனால் அதற்குப் பின்னர், அமெரிக்காவானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்த போது ஆப்கானில் போரை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவுக்கு ரஸ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த விடயத்தில் அமெரிக்காவும் ரஸ்யாவும் சமரசம் செய்து கொண்டதால் செச்சினியாவில் ரஸ்யாவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வியெழுப்பாது நழுவியது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அவர்களது சொந்த நாட்டு அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. இந்தியா கூட தனது நாட்டில் செயற்படும் மனித உரிமையாளர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. வாழ்வதற்கான உரிமை, விடுதலை, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான உரிமை, நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை மற்றும் ஏனைய எல்லாவிதமான அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகள் தான். இதனால் இந்திய அரசம் இதன் சட்டங்களுக்குக் கட்டுப்படுபவர்களும் மனித உரிமைகளை மதிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

சில சம்பவங்களின் போது இந்தியா மனித உரிமை மீறல்களை மீறியுள்ளதற்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவானது பாதிக்கப்பட்ட நாடுகளில் பல்வேறு மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளது. இந்தியர்களாகிய நாம் வேற்று நாட்டவர்கள் எமது நாட்டில் இடம்பெறும் மீறல்கள் தொடர்பாகக் கேள்வி கேட்பதை விரும்பவில்லை. அதாவது இந்தியாவானது தொடர்ந்தும் தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை மறைத்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியா, மற்றைய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வாறு கேள்வி கேட்க முடியும்? இந்தியாவானது சிறிலங்காவில் பெருமளவில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற போர்க் கால மீறல்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

மற்றைய நாட்டின் மனித உரிமை மீறலைத் திருத்துவதற்காக இந்தியாவானது தனது வெளியுறவுக் கொள்கையைக் கருதாது, வெளிப்படையாக அழுத்தம் கொடுத்தால் அது வரவேற்கத்தக்க விடயமாகும். இதன்மூலம் இந்த உலகம் பாதுகாப்பாக இருக்க முடியும். தமது சொந்த மக்கள் மீது அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் இனப்படுகொலையை மேற்கொள்வதை நிறுத்தி, தனது நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்து, ஆரோக்கியமான நிறுவகங்களை அமைத்து இவ்வாறான உரிமைகளை மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சுயாதீன நீதிச்சேவையை உருவாக்கினால் அனைத்துலகமும் பாதுகாப்பாகவும், சட்டத்திற்கு கட்டுப்படுவதாகவும் இருக்கும்.

இதில் இந்தியா நம்பிக்கை கொண்டால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஏன் உறுதிமிக்கதாக இருக்கமுடியாது? இதேவேளையில், பூகோள மூலோபாய நலன்களை அடைந்துகொள்வதற்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துபவர்களை விமர்சிப்பதற்கு இந்தியா தயக்கம் கொள்ளக்கூடாது. இதற்கும் அப்பால், ஏனைய நாடுகளில் வாழும் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு ஜனநாயக நாடுகளில் வாழும் மக்களால் அழுத்தம் கொடுக்க முடியும்.

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையென்பது, அதன் கொள்கை வகுப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வரையறுக்கப்பட்ட விடயங்களை மட்டுமே பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்தியாவானது தனது அயல்நாடுகளுடன் எவ்வாறான உறவைப் பேணவேண்டும் என்பதை உயர் மட்ட கொள்கை வகுப்பாளர்கள் கூறமுடியும். இதனை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் மனித உரிமைகள், பொதுவான அபிவிருத்திகள், தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுடன் ஒப்பிட்டு அவற்றை சமநிலைப்படுத்தி கொள்கைகளை வகுக்க வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகள் என்பது தாக்கம் செலுத்துகின்றது என்பதையே அண்மைய கடந்த கால சம்பவங்கள் சுட்டிநிற்கின்றன.

*The writer is professor at the School of International Studies, Jawaharlal Nehru University.

புதினப்பலகை- நித்தியபாரதி.

Advertisements