உண்மைகள் இன்று ஜெனிவாவில் நர்த்தனம் ஆடுகின்றன

“உண்மைகள் இன்று ஜெனிவாவில் நர்த்தனம் ஆடுகின்றன” விஸ்வமடுவில் விக்னேஸ்வரன்wicki

“வடமாகாணத்தைக் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்” “உண்மைகள் இன்று ஜெனிவாவில் நர்த்தனம் ஆடுகின்றன” விஸ்வமடுவில் விக்னேஸ்வரன்

‘எமது பெண்கள்; பாலியல் பலாத்பாரங்களுக்கு உட்படுத்தப்படகின்றனர் இவற்றை காவற்துறையினர் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது’ என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன்,

‘அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதேயாகும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1) முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது. அதாவது மக்களுக்குரிய காணிகள் இராணுவத்தினரால் பலாத்காரமாகக் கையேற்கப்பட்டு மண்ணின் சொந்தக்காரர்கள் தமது மண்ணில் வாழ வழியில்லாமல் இராணுவக் கெடுபிடிக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றனர்.

2) களவாகப் பல வழிகளில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து வட மாகாணத்தில் குடியேற்றி தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்கு இராணுவம் ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.

3) எமது மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எமது பெண்கள் பலாத்காரமாக பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று தெரிந்தும் பொலிசார் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

4) தொழில் வாய்ப்பற்ற நிலை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் எம் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இது வரை காலமும் இருந்து வந்துள்ளோம்.

5) எமது வீடுகளையும், காணிகளையும் இராணுவம் எடுத்து வைத்திருக்கும் போது எமது மீனவர்களின் தொழில்களை இராணுவமும், கடற்படையினரும் செய்யும் போது, எமது வேளாண்மை நிலங்களை இராணுவத்தினர் எடுத்துப் பயிரிடும் போது, ஏ9 தெரு நெடுக எம்மால் செய்யக் கூடிய தேநீர்க் கடை, உணவக வியாபாரங்களை அவர்களே செய்யும் போது எமக்குத் தொழில் வாய்ப்புக்கள் எங்கிருந்து கிடைக்கப் போகின்றன?

இந்த நிலையில் வேலையில்லாமல், காணியில்லாமல், பாதுகாப்பு இல்லாமல், போகும் இடம் தெரியாமலத் தான் எம் மக்கள் அவுஸ்திரேலியா செல்ல முடிவு எடுக்கின்றார்கள். ஆனால் பலரும் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர்.

போரின் கடைசி நாட்களில் இராணுவ பலத்தை எமது மத்திய அரசாங்கம் சுமார் 3 இலட்சம் வரையில் அதிகரித்ததாக கூறப்படுகின்றது.

போர் முடிந்த பின்னர் வடமாகாணத்தில் தரிக்க வைத்து அவர்களின் குடும்பங்களையும் அங்கு செல்ல விட்டால், வட மாகாணத்தைக் காலா காலத்தில் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில்தான், போரின் பின்னர் சுமார் ஐந்து வருட காலம் தொடர்ந்து இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தி வைத்துள்ளார்கள் போல்த் தெரிகின்றது. இதனால் போரின் பின்னர் கூட எமது மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஒரு புறம் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இங்கிருக்கும் இராணுவத்தினர் அனுமதிக்கப்படலாமா என்பதை ஆராய வேண்டும். அத்துடன் மறுபுறம் அவர்களில் பெரும்பாலானோர் சிவில் வாழ்க்கைக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டும். அது நடக்கும் வரையில் எம் வட இலங்கை மக்களுக்கு விடிவே கிடையாது.

இவ்வாறு நான் கூறுவதால் என்னை அழித்தால் என்ன என்று இராணுவத்தினர் எண்ணக்கூடும். என்னை அழிப்பதால் நான் தியாகிப்பட்டம் பெற்று விடுவேன். ஒரு மகாத்மா ஆகி விடுவேன். ஆனால் உண்மை எங்கும் போகாது. இங்கு தான் இருக்கும். அந்த உண்மைகள் தான் இன்று ஜெனிவாவில் நர்த்தனம் ஆடுகின்றன’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் சிறப்புப் பிரதிநிதி, அனைத்துலக தொழிலாளர் அமைய இலங்கைக்கான பணிப்பாளர், வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், கே.சயந்தன், அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisements