சிங்களவர் – தமிழர்களுக்கு இடையிலான நீண்ட கால மனக்கசப்புக்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை

Prince Charles Sri Lanka war criminalsநீண்டகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் வடுக்களை முழுத் தலைமுறையும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர் என்பது முடிவுக்கு வந்தாலும் கூட, சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தவர்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவும் மனக்கசப்புக்கள், விரோதங்கள் இன்னமும் முடிவுறவில்லை.

இவ்வாறு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட The News International ஊடகத்தில் Asna Ali* எழுதியுள்ள The shadow of war  கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், இரு தரப்பிலும் நீண்ட காலமாக உள்ள மனக்கசப்புக்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான யுத்தமானது 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சிறிலங்காவானது பிராந்திய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்துவதற்கான பயணத்தை ஆரம்பித்தது.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் உதவிகள் மூலம், சிறிலங்காவானது தனது பிராந்தியத்திலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் தன்னை ஒரு முக்கிய உறுப்பு நாடாக மாற்றிக் கொள்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியது. இந்தப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தற்போது சிறிலங்காவில் நடந்து முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டைக் கருதமுடியும்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்திற்கேற்ப எல்லாம் நடந்து முடிவதில்லை என்பது ஒரு கெட்டவாய்ப்பாகும். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற இறுதி வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்புக் கூறவேண்டும் என அனைத்துலக சமூகமானது வலியுறுத்தி வருகிறது.

சிறிலங்காவில் நீண்ட காலம் தொடரப்பட்ட யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டனர். அதாவது புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சுமத்தப்படுகிறது. இதேபோன்று சிறிலங்கா இராணுவம் பொதுமக்கள் மீது தயவு தாட்சண்ணியமற்று பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டது. இவ்வாறான காரணத்திற்காக தற்போது சிறிலங்காவில் நடந்து முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியா, மொறிசியஸ் மற்றும் கனடா நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவில்லை. அதாவது சிறிலங்காவானது தன் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய பதிலை அளிக்கவில்லை எனக் காரணம் காட்டியே இவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

இந்த உச்சி மாநாடு சிறிலங்காவில் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழர்கள் வீதிகளில் இறங்கி தமது இறந்து போன மற்றும் காணாமற் போனவர்களின் ஒளிப்படங்களைக் கையில் ஏந்தியவாறு அனைத்துலக நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களில் ஒருவரான பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன், சிறிலங்காவுக்கான தனது பயணத்தின் போது போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார். பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர், சிறிலங்கா அரசாங்கமானது விரைவில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான கோரிக்கைகளின் பின்னர், சிறிலங்கா அரசாங்கமானது போர் இடம்பெற்ற 1983-2009 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள் போன்றன தொடர்பில் மதீப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. எதுஎவ்வாறிருப்பினும், இந்த மதிப்பீடானது சிறிலங்காவில் இடம்பெறும் மீறல்களுக்குப் பொறுப்பளிப்பதற்கு போதுமானதல்ல என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சிறிலங்கா இராணுவத்தினர் புரிந்த மீறல்கள் அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

‘போரின் வடுக்களை ஆற்றுப்படுத்தல்’ மற்றும் நாட்டில் இயல்புநிலையை மீளக்கொண்டு வருதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய இலக்குகளாக ஏனைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் மாறிவருகின்றனர்.

நீண்டகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் வடுக்களை முழுத் தலைமுறையும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர் என்பது முடிவுக்கு வந்தாலும் கூட, சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தவர்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவும் மனக்கசப்புக்கள், விரோதங்கள் இன்னமும் முடிவுறவில்லை.

போரில் இறந்தவர்கள் காணாமற்போனோரின் உறவுகள், இடம்பெயர்ந்தோர் போன்றோர் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இந்த வடுக்களிலிருந்து சிறிலங்காவானது மீண்டெழுந்து மிக ஒற்றுமையுடன் செயற்படும் எனவும் இங்கு பிறிதொரு இனப் போர் இடம்பெறமாட்டாது என்கின்ற நம்பிக்கை நிலவுகிறது.

*The writer is a business studies graduate from southern Punjab.

புதினப்பலகை-நித்தியபாரதி

Advertisements