தமிழ்நாடு,தாயகம், புலத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு – பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
tamilnadu_maveerar_day_009

தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.

குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார்  மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஈழத்தமிழர் அகதி முகாமில் உணர்வெழுச்சி பொங்க மாவீரர் தினம் அனுஸ்டிப்பு
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஈழத்தமிழர் குடியிருப்பி​ல்  நேற்று நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் சுமார் 3000 ஆயிரத்தி​ற்கும் மேற்பட்டவர்க​ள் மக்கள் கலந்து கொண்டு மாவீரர் ஈகத்தை ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

ஈழத்தமிழர் அகதி முகாமில் பல்லாயிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்க அஞ்சலி செலுத்தியமை இதுவே முதல் தடவை என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்கள் மாத்திரமின்றி, தமிழக மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணர்வுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

காவல்துறை மாவீரர் சின்னங்களை இடித்த போதும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிப்பு

ஈழத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவ-27ம் தேதி மாவீரர் நாள் அனுசரித்து அஞ்சலி செய்து வருகின்றனர் உலகத் தமிழர்கள்.

இந்த நவ 27ல் மாவீரர் தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்துவதற்காக செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர் நினைவு சின்னத்தை உருவாக்கி கொடியேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் நினைவு மண்டப அமைப்பையும் ஈழத்தமிழ் அகதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உருவாக்கினர்.

தகவலறிந்த தமிழக காவல்துறையினர் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய மாவீரர் நாள் நினைவு மண்டபத்தை இடித்து இரவோடு இரவாக தகர்த்தெரிந்தனர்.

இதனால் ஈழத்தமிழர்கள் தங்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தியதாகவும், இதனால் தங்களது மனம் புண்படுத்தபட்டுவிட்டதாவும், மாவீரர் நினைவு தினத்தை அனுசரித்து அஞ்சலி செய்ய விடாமல் தங்கள் மனதை காயப்படுத்திய கியூபிரிவு காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து முகாமில் தங்கியுள்ளவர்களில் 36 பேர் புதன்கிழமை காலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு மாலை 6 மணிக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட முகாம் வாசிகள் மீண்டும் தற்காலிக நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் உடனே அமைத்து மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.

விளக்குகள் ஏற்றியும் மாவீரர் சுடர் ஏற்றியும் இறந்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

இம்முறை காவல்துறை முகாம் தமிழர்களின் இந்நடவடிக்கைக்கு எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மாவீரர் நினைவு தினம் எந்தவொரு சிக்கல்களும் இல்லாமல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அனுசரிக்கப்பட்டது.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை: சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த சொந்தங்களை நினைவு கூர்வது வழக்கம். அதற்காக அவர்கள் சிறப்பு முகாமில் உள்ளேயே நினைவு சின்னம் அமைத்து நவம்பர் 27 நாளில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவர்.

அணி அணியாக விளக்குகள் வைத்து மாவீரர்களுக்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்து வந்தனர். மஞ்சள் சிகப்பு வண்ண தோரணங்களை நினைவு சின்னம் சுற்றிலும் கட்டியிருந்தனர்.

கடந்த ஆண்டும் மாவீரர் நாளை சிறப்பு முகாமில் இருந்த அனைவரும் அனுசரித்தனர். இதனால் யாருக்கும் இடையூறு இல்லை. காரணம் இது அவர்கள் தனிப்பட்ட நிகழ்வாகவே அனுசரித்து வந்தனர்.

இந்நிலையில், மாவீரர் நாளை அனுசரிக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், இன்று தமிழக காவல்துறை மாவீரர் நாளை அனுசரிக்க தடை விதித்தது. இறந்த உறவுகளுக்கு முகாமில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரடியாக இடிக்கத் தொடங்கியது . இதை பார்த்த ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.

ஆனால் எதையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாத தமிழக காவல்துறை , மாவீரர் நாளுக்காக அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கொடிக் கம்பங்களை இடித்து அகற்றியது. தோரணங்களை கிழித்து எறிந்தது.

இறந்த சொந்தகளுக்கு கூட அஞ்சலி செலுத்த இந்த அரசு தடை விதித்துள்ளதை முகாம் வாசிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து 45 ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுசரிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்து வருகிறது . முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுப் புற சுவரை அண்மையில் தமிழக அரசு இடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisements