துப்பாக்கிகளின் நிழலில் வாக்களிக்க தயராகும் ஈழத்தமிழர்கள்

SL Army Jaffnaசிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முதன்முறையாக சனிக்கிழமையன்று அதிகாரம் குறைந்த சுயாட்சிக்கான வடக்கு மாகாண சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். போருக்குப் பின்னான அரசியல் அதிகாரப் பகிர்வானது ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு மற்றும் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தம்மைத் தயார்ப்படுத்துகின்றனர்.

தமிழ்ப் புலிகளின் பலமான அரணாக விளங்கிய யுத்த பூமியான சிறிலங்காவின் வடக்கில் நடாத்தப்படும் மாகாண சபைத் தேர்தலானது நீதியானதாக இருக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனைத்துலக சமூகமானது அழுத்தங்களை இட்டுவரும் நிலையில் சனிக்கிழமை அன்று வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கவுள்ளனர்.

2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த யுத்தத்தின் போது பல்வேறு போர் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன. வடக்கு மாகாணத்தில் வாழும் ஒரு மில்லியன் வரையான மக்கள் மத்தியில் சிறிலங்கா இராணுவமானது பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தினரின் தலையீடு காணப்பட்டால், இங்கே நேர்மையான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற முடியாது என்பது தெளிவாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மகிந்த ராஜபக்சவுக்கு திங்களன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடாத்தப்படுவதாகவும், தாம் பாரபரட்சப்படுத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் பலர் முறையிட்டுள்ளனர். அத்துடன் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலானது நாட்டில் இனக்குழப்பங்களைக் குறைப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பதாகவும் நோக்கப்படுகிறது.

சிறிலங்காப் படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்தக் குற்றங்கள் உள்ளடங்கலாக, தமிழ் மக்கள் காணமாற் போன விவகாரம் போன்ற தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி தீர்வெடுப்பதற்கான அதிகாரத்தை 36 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபையானது கொண்டிருக்காது.

வரிகளை அதிகரித்தல், புதிய கட்டுமானங்களைக் கட்டுதல், உள்ளுர் சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற சில விடயங்களில் இம்மாகாண சபையானது எவ்வாறான தீர்மானத்தை எடுத்தாலும் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படும் மாகாண ஆளுநர் இந்தத் தீர்மானத்தை மாற்றியமைக்க முடியும்.

தான் மேற்கொண்ட சில தேர்தல் பரப்புரைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : By AFP Sri Lanka’s Tamils vote under the shadow of guns

மொழியாக்கம் : நித்தியபாரதி

Advertisements