முற்று முழுதாக ஈழத் தமிழரை வைத்து ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கும் தமிழக தயாரிப்பாளர் பாவலின் பேட்டி..
முதலில் பாவல் சங்கர் பற்றி…
தமிழகத் திரையுலகில் பிரபலம் வகித்து சென்ற ஆண்டு மரணமடைந்த பிரபல நடிகை எஸ்.என்.லட்சுமியின் அண்ணன் மகனே பாவல் சங்கர்.. ஈழத் தமிழர்கள்பால் மாறாத நேசம் கொண்டவர்… தமிழகத்திலும், வெளிநாடுகளுக்கும் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர், சிறந்த எழுத்தாளர்.. சிந்தனையாளர்…
இயற்கை, ஈ உட்பட பிரபல தமிழ் திரைப்படங்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்றவர் இன்றும், பல திரைப்படங்களின் விவாதங்களில் பங்கேற்று வருபவர்.. ஈழத் தமிழர்பற்றி பேசுவதல்ல.. அவர்களுக்காக செயற்படுவதே சரி என்ற கொள்கையுடையவர்.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் டப்பிங் பணிகளும், எபக்ட் பணிகளும் ஏ.வி.எம்மின் இரண்டு ஸ்ரூடியோக்களில் இவருடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கிடைத்த இடைவேளையில் இந்த சந்திப்பு பதிவானது..
கேள்வி : முற்று முழுதாக ஈழத் தமிழரையும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களையும் வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது..?
பாவல் : நூற்றாண்டு காணும் இந்திய தமிழ் சினிமா ஈழத் தமிழரை தன்னுடைய விற்பனை சந்தையாகவும், இந்திய கதாநாயகர்களை வைத்து படமெடுக்க முதலிடும் வட்டியில்லாத வங்கியாகவுமே இதுவரை பயன்படுத்தியது.. ஓர் ஈழத் தமிழனை கதாநாயகனாக்கி எடுக்கப்படும் திரைப்படத்திற்கு முதலிட வேண்டுமென்ற எண்ணமும், துணிச்சலும் இன்றுவரை எங்கள் தமிழகத்தில் மலரவில்லை.. எண்ணற்ற திறமையாளர் ஈழத் தமழினத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதே சரியான செயல்.. நூறு ஆண்டுகளாக பூக்காத ஒரு மரத்தை முதல் தடவையாக பூக்க வைத்துள்ளேன்.. புரியப்படாத எண்ணத்தை புரிய வைத்துள்ளேன்.. இந்த எண்ணம் ஓர் உயிர்ப்பு எண்ணம்..
கேள்வி : ஜே.பி.சந்திரபாபு இலங்கையை சேர்ந்தவர், எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்தவர் இவர்கள் தமிழ் சினிமாவில் முக்கியம் பெற்றனர்தானே.. வி.சி.குகநாதன் ஈழத்தை சேர்ந்த இயக்குநர்தானே..
பாவல் : எம்.ஜி.ஆர், சந்திரபாபு இருவரும் பெருமைக்குரிய கலைஞர்கள், எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழருக்கு உதவ யாரால் முடியும்.. அவைகள் வேறு விடயம் ஆனால் அவர்கள் இந்திய பின்னணி கொண்டவர்கள், மேலும் அவர்கள் ஈழத் தமிழர்கள் என்று தம்மை என்றும் அறிமுகப்படுத்தவுமில்லை, வி.சி.குகநாதன் இயக்குனராக இருந்தது பாராட்டுக்குரிய வெற்றியே.. அவர் ஈழத் தமிழினத்திற்காக பாடுபட்டதை மறுக்க முடியாது.. ஆனால் ஓர் ஈழத் தமிழனை கதாநாயகனாக்கி அவர் இன்றுவரை ஒரு படத்தை இயக்கவில்லை.. ஆனால் கதாநாயகன், கதாநாயகி, காமடியன், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என்று எல்லா பணிகளையும் ஈழத் தமிழரிடமே கொடுத்துவிட்டு, நான் தயாரிப்பாளர் பணியை மட்டும் ஏற்றுள்ளேன்.. எனது முயற்சி இறந்துபோன ஈழத் தமிழினத்தின் உயிர்வரையும் இனிக்கும் முயற்சி.. ஈழத் தமிழனை பயன்படுத்தி அரசியல், அவனை பயன்படுத்தி சினிமா என்ற எண்ணத்தை இனியாவது மாற்ற வேண்டும்.. தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டுபோன ஈழத் தமிழர்களால் தமிழ் சினிமாவில் மட்டும் சாதிக்க முடியாது என்று கருதுவது எவ்வளவு அபத்தமான கருத்து..
கேள்வி : பைலட் பிறேம்நாத், தீ, பேராண்மை போன்ற படங்களில் ஈழத் தமிழ் தயாரிப்பாளர்கள் இருந்தார்களே..
பாவல் : இருந்தார்கள்… ஆனால் அவர்கள் ஈழத் தமிழர்களை நம்பவில்லை.. நம்பியிருந்தால் அவர்கள் படத்தில் ஈழத் தமிழனின் முகங்கள் தெரிந்திருக்கும்.. அவர்களும் தமிழக நாயகர்களையே நம்பினார்கள்.. ஆனால் நான் அப்படியல்ல ஈழத் தமிழ் கலைஞர்களின் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து களமிறங்கியுள்ளேன், இதுதான் எனக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஈழத் தமிழர்கள் பணம்போட நாம் பாடுகிறோம், நடிக்கிறோம், வெளிநாடு போகிறோம், ஏன்.. ஈழத் தமிழ் போராட்டம் என்றால் என்னவென்பதை ஈழத் தமிழருக்கு எடுத்துரைக்கவும் தமிழகத்தில் இருந்தே புறப்படுகிறோம்.. இது போதும், இனி தமிழகம் முதலிடட்டும், ஈழத் தமிழர்கள் நடிக்கட்டும், பாடட்டும் நாங்கள் ரசிப்போம்… கதையை புரட்டிப் போட்டுள்ளேன், ஏனென்றால் காலம் ஒருபோதும் மாறாது.. நாம்தான் மாற்றவேண்டும்.
கேள்வி : ஈழத் தமிழர் கதைகளை திரைப்படமாக எடுத்தபோது பங்கேற்ற தமிழக கலைஞர்கள் பற்றி..
பதில் : அவர்கள் அனைவரும் என் வணக்கத்திற்குரியவர்கள்.. இப்போதும் பலர் முயன்றுள்ளனர் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.. சிறப்பாக அப்படியான படங்களைத்தான் ஈழத் தமிழர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
கேள்வி : உயிர்வரை இனித்தாய் திரைப்படம் பற்றி..
பாவல் : காதல் உடல் சார்ந்ததா இல்லை உளம் சார்ந்ததா என்பதுதான் இதுவரை தமிழ்த் திரை பேசிய காதல், ஆனால் காதல் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற புது விளக்கத்தோடு, காதல் சுவையை உயிர்வரை இனிக்கும்படி அணுவணுவாக பேசுகிறது இந்தத் திரைப்படம்.. அது மட்டுமல்ல இது முழு நீள காமடிப் படமாகவும் இருக்கிறது..
கேள்வி : தமிழக சினிமா நீண்ட வரலாறு கொண்டது ஈழத் தமிழர்களால் முடியுமா..?
பாவல் : முடியும்.. கையில் பொறுப்பை கொடுக்காமல் முடியுமா என்று கேட்பது முட்டாள்தனமானது, முழுத் தயாரிப்பும் மேலை நாடுகளிலேயே நடக்கிறது, மேலை நாடுகளின் திரைப்படக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இதில் பணியாற்றுகிறார்கள்.. சொன்னால் நம்பமாட்டீர்கள் நம்மைவிட அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது என்பதை நான் நேரடியாக பார்த்தவன்.. விளம்பரம் கூட ஆங்கிலத் திரைப்படப் பாணியில் ஆரம்பிக்கப்படவுள்ளது..
கேள்வி : எப்படி…?
பாவல் : பேஸ்புக், இணையம் இவற்றின் மூலம் சமீபத்தில் சில ஆங்கிலப்படங்கள் பிரச்சார வெற்றி பெற்றன, இந்த வெற்றி வியூகத்தை வகுத்ததே சில ஈழத் தமிழ் இளைஞர்கள்தான் அவர்கள் இந்தப் படத்தின் பிரச்சார பணிகளில் உள்ளார்கள்.. இருந்து பாருங்கள் தமிழகத்தின் மரபார்ந்த பிரச்சாரத்தையும் இப்படம் மாற்றிக் காட்டும்.. இந்த உத்தி நம் தமிழக தயாரிப்பாளருக்கு பெரும் உதவியாக அமையும்.. விளம்பரத்திற்காக வீண் பணம் செலவிடுகிறார்கள் தமிழகத்தில்.. எந்திரன் படத்தில் ஷங்கர் செய்த ஸ்ரோரி போட்டை இந்தப் படத்திற்கும் செய்துள்ளார்கள்… ஆயிரக் கணக்கான வண்ணப்படங்களில் முழுத் திரைப்படமும் ஓவியமாக அச்சடிக்கப்பட்டு என் கையில் தரப்பட்டபோது வியந்து நின்றேன்..
கேள்வி : உயிர்வரை இனித்தாய் எப்போது திரைக்கு வரும்..
பாவல் : ஏ.வி.எம்மில் டப்பிங், எபக்ட் பணிகள் முடிந்துவிட்டன, இவை மட்டுந்தான் தமிழகத்தில் நடக்கின்றன, மற்றைய பணிகள் டென்மார்க்கில் நடைபெறுகின்றன… மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது..
தாய் தமிழகம் என்று பெயர் சூட்டிக் கொள்ளும்போதே ஈழத் தமிழினத்தை நடக்க முடியாத சிறு பிள்ளைகளாகவே நாம் கருதத் தொடங்கிவிடுகிறோம்.. இப்படியே போலியாக எவ்வளவு காலத்தை ஓட்டப்போகிறோம்…?
ஈழத் தமிழினத்தை நம்ப வேண்டும், அவர்கள் கையில் பொறுப்பை கொடுத்து செயற்பட அனுமதிக்க வேண்டும்… தமிழக தலைவர்களும், தயாரிப்பாளர்களும் ஈழத் தமிழரை வெறுமனே கைகளைத் தட்டி ரசிக்கும் கூட்டமாகக் கருதிய காலத்தில் மாற்றம் வருவது புதுமை.. புதுமைகள் என்றும் வெல்லும்… அதுவே உயிர்வரை இனிப்பாகவும் இருக்கும்..
பாவல் புதுமையாக சிந்திக்கிறார்…
தமிழகத்தில் இருந்து அலைகள் நிருபர் ரவி. 05.02.2013