2009-ம் ஆண்டு போருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெரும் உண்ணா நிலை போராட்டம் நடாத்தத் தொடங்கியவுடன்,

தனது மவுசு போய்விடுமே எனக் கருதிய கருணாநிதி சின்னக்கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போடும் விதமாக தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் என்று ஒன்றை நடத்தினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து பல துரோகங்களை நிகழ்த்தினார்.

இப்போது தமிழகம் முழுதும் புதிய தமிழ் தேசிய அமைப்புக்கள் பல எழுச்சிபெற்று தமிழ் தேசிய மற்றும் ஈழ விடுதலைக்கான பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஈழப் பிரச்சினையும் உலகளாவியதாக மாறி வெற்றிப்படிகளைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையானது தமிழ் தேசியம் புதிய எழுச்சியை பெற்று உலக அளவிலான் அங்கீகாரத்தையும் வென்று வரும் வேளையாக உள்ளது.

தமிழகத்தின் ஈழ விடுதலை செயல்பாடுகளில் பல புதிய சிறிய தமிழ் தேசிய அமைப்புக்களும், திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளான நாம் தமிழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் (பெயரில் திராவிடம் இருந்தாலும் செயலில் அப்படியில்லாத) ம.தி.மு.க. என பலதரப் பட்ட பாத்திரங்கள் களமாடுகின்றன. இந்தப் புதிய போக்கு கருணாநிதியைப் பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது போலும்.

1980-களில் தன் மவுசு ஈழப் பிரச்சினையில் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் அது எம்.ஜி.ஆரால் ஓரங்கட்டப் பட்டது. இருந்தாலும் அன்று கருணாநிதியை தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் இன்றைய நிலை தலை கீழாக உள்ளது. அவரது துரோகங்கள் அம்பலப்பட்டு, அவரது அரசியலும் பெரும் ஊழல் அரசியலாக மாறி நிற்பதால் தமிழகத் தமிழர்களும் கருணாநிதியை நம்ப வில்லை. உலகத் தமிழர்களும் கருணாநிதிக்கு இனி தங்களிடம் வேலையில்லை என்றே நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்களோ அவரை காறித் துப்புவார்கள்.

இந்த தலைகீழ் மாற்றம் நேர்ந்து விட்ட நிலையில் மீண்டும் தன் மவுசை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவை கருணாநிதிக்கு இருக்கிறது. எனவே 2009-ல் செய்ததைப் போல சின்னக்கோட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட ஆயத்தமாகி விட்டார். தற்போது களமாடும் பல தமிழ்தேசிய அமைப்புக்களை ஓரங்கட்டுவதற்காக ஒரு பெரிய கோடு போடப்பட்டே ஆக வேண்டும். இல்லையேல் கருணாநிதியின் பெயர் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும்.

எனவே ஒரு பெரிய கோட்டை கண்டு பிடித்திருக்கிறார். அது ஏதும் புதியதான பெரிய கோடு இல்லை. 1980-களில் தமிழகத்தில் உருப் பெற்ற ‘டெசோ’வாகும். அன்று ஈழ விடுதலைப் போராளி அமைப்புக்களை ஒன்று திரட்டியதாகச் சொல்லிக்கொண்டு கருணா போட்ட நாடகம்தான் டெசோ. அதன்மூலம் ஈழ விடுதலை என்னவோ தனது வழியில் செல்வதாகக் காட்டிகொள்ள நினைத்தார் கருணாநிதி. ஆனால் இவையெல்லாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று விடுதலைப் புலிகள் முதன்மைக் களத்தில் இல்லாத நிலையில் மீண்டும் ‘டெசோ’வை உயிர்ப்பிக்கப் போகிறாராம் கருணாநிதி.

யானை வருமுன்னே மணியோசைக் கேட்பது போல கருணாநிதி செய்ய விரும்புவதை முன்னதாகவே வீரமணி அறிவிப்பது வழக்கம். அண்மையில் கூட ஐ.நா. தீர்மானத்தையொட்டி தி.மு.க. வானது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதலில் கூறியவர் வீரமணிதான். அதுபோல் இப்போதும் வீரமணி கூறி விட்டார்.

இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய கருணாநிதி தனிஈழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான – இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும்.

எனவே தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனிஈழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனிஈழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

தனி ஈழம்தான் ஒரே தீர்வாம். போர் முடிவுற்ற நாட்களில் தமிழர்கள் சிங்களர்களோடு இணங்கி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதியின் செல்லப் பிராணியான பெரும் பேராசிரியர் அன்பழகன் பிதற்றியதை யாரும் மறக்க வில்லை. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் அதிகார்ப்பூர்வ நாளேடான ‘முரசொலி’யில் ஈழத் தமிழர்களை ‘சிங்களத் தமிழர்கள்’ என்று குறிப்பிட்டு செய்திகளும் விளம்பரங்களும் வெளியாயின. இவை யாவற்றையும் மிஞ்சும் விதத்தில் தற்போது இலங்கை அரசு தலைவர் பிரபாகரன் ‘இறந்ததாக’க் கூறி அவரது வீட்டிற்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்ததை தி.மு.க.வின் சன் தொலைக்காட்சி மிக ஆர்வமாக திரும்ப திரும்பக் காட்டி தனது ராஜ(பக்சே) விசுவாசத்தை வெளிப்படுத்தியது.

இப்போது தனி ஈழம்தான் ஒரே தீர்வாம். ‘டெசோ’வை மீண்டும் தொடங்க வேண்டுமாம். மீண்டும் தனது அரசியலுக்கு ஈழ விடுதலையை பலியிட ஆயத்தாமாகிறார் கருணா.

முன்பு ஏமாந்தோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்?

 

ஈழதேசம்

நிலவரசு கண்ணன்