கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாகத்தான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை இருக்கின்றது. ஆம், போர்க்குற்றச்சாட்டுக்கள் அல்ல எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் கூட நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை…..

….என்பதனையே ஆளுந்தலைமை உட்பட அரசாங்க அமைச்சர்கள் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்திய ஊடகவியலாளர் மாநட்டில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதம் அடைந்துள்ளார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் பொதுநலவாய மாநாட்டை சமாளித்து வந்து விட்டோம் என்பதாகத் தான் இவரது கருத்து அமைந்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழு அவுஸ்திரேலியா சென்றபோது, இலங்கைக்கு எதிராக பல நகர்வுகள் இடம்பெற்றிருந்தன.

இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நகர்வுகளாகவே இருந்தன.

இதில் முக்கியமானவை,

01. ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட போர்க் குற்ற வழக்கு.

02. அடுத்த பொதுநலவாய மாநாட்டை 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்கு எதிராக கனடா மேற்கொண்ட முயற்சிகள்.

03. ஜனாதிபதிக்கும் இலங்கைக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்.

இவை தொடர்பில் பொதுநலவாய மாநாடு நடப்பதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் வெளிக் கிளம்பியன. இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதனை தடுப்பதற்கு முற்பட்டாலும் இலங்கை அதிலிருந்த எவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பொதுநலவாய மாநாட்டுக்கு மகிந்த ராஜபக்ச இலங்கையிலிருந்து செல்லும் முன்பே அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

இதனால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தாம் பங்கு கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அரச தரப்பில் பல்வேறு தடுமாற்றங்கள் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி மகிந்தவின் அவுஸ்திரேலியா விஜயம் பல்வேறு நாடுகளின் அவதானத்திற்கும் உட்படுத்தப்பட்டதைக் காணலாம்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார்.

எனினும், மெல்பேர்ன் நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க வேண்டுமாயின் அதற்கு அந்நாட்டு சட்டமா அதிபரின் அனுமதி பெற்றப்பட வேண்டும்.

எனினும் அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் வழக்கை விசாரிக்க அனுமதியளிக்க முடியாதெனவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அரசுக்கு உள்ள பொறுப்புகளையும், உள்நாட்டுச் சட்டங்களையும் மீறும் வகையில் வழக்கு இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் அந்நாட்டு சட்டமா அதிபர் திணக்களம் அறிவித்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் ஆதரவில் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு இலங்கை தரப்பிலிருந்து பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதில் முக்கியமான அம்சமொன்றை குறிப்பிட்டாக வேண்டும்.

அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை பெரும் அச்சத்துடன் பங்கேற்றது. பல நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை பங்குபற்றியிருந்ததுடன், இக்கூட்டத்தொடரின் போது பல்வேறு சவால்களையும் எதிர்நோக்கியது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு இலங்கைக்கு திரும்பிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க சர்வதேசம் எம்மை ஒன்றும் செய்து விடாது நாம் ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோலதான் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா சட்டமா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியாதென மேற்கொண்ட தீர்மானமானது சர்வதேச ரீதியில் இலங்கை ஜனாதிபதிக்கு மிகப்பெரும் பாதுகாப்பை அளித்துள்ளதையும் நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.

சர்வதேச ரீதியாக தம்மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென்ற செய்தியை எதிர்காலத்தில் இலங்கை தரப்பு அதிகளவும் தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவும் இது உதவலாம்.

அதேநேரம் இந்த பொதுநலவாய மாநாடானது மற்றுமொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

2013 ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் கனடா போன்ற நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியதுடன், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவ்வாறு தமது எதிர்ப்பையும் மீறி இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுமாயின் அதில் தாம் பங்குகொள்ளப் போவதில்லையெனவும் அறிவித்திருந்தது.

இதனால், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதியளிக்கப்படுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருந்தது.

இருப்பினும் சில மேற்குலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவின் பலமான ஆதரவின் துணையுடன் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு எதிரப்புகளுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டில் நாம் கலந்துகொண்டோம். இதில் மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரச்சினைகள் தொடர்பில் பிரசாரம் செய்வதற்கு முற்பட்ட போதும் அதற்கு 15 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் விசாரணை மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வாங்கப்பட்டமை, 2013 ஆண்டு இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்தமை போன்ற முக்கிய பிரதான காரணங்கள் இலங்கைக்குப் பெரும் வெற்றியைத் தந்துள்ளன.

பொதுநலவாய மாநாட்டில் இலங்கை பங்குபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் அதில் கலந்துகொண்டு பெரும் வெற்றி கண்டுள்ளோம்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமைகள் மீறல் தொடர்பில் எந்த ஆதாரத்தை காட்டியும் குற்றம் சுமத்தப்பட்டாலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கைத் தரப்பினர் முற்றாக மறுத்து வருவதே வழமையாக உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவுஸ்திரேலியத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் காத்திருந்த ஆபத்திலிருந்து தாம் தப்பித்து வந்துவிட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், ஜனாதிபதி செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை இந்த மாநாடும் உணர்த்தியிருக்கின்றது.

அத்துடன், 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஜனாதிபதியின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் நடைபெறும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், கனடா போன்ற நாடுகள் எதிர்காலத்தில் இதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் கூறிவிடவும் முடியாது.

போர்க் குற்றச்சாட்டு உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்!